ஹர்சிம்ரத் கவுர் பாதல் ராஜிநாமா - மோதி அமைச்சரவையில் இருந்து விலகும் முதல் பெண் அமைச்சர்

ஹர்சிம்ரத் கவுர் பாதல்

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சராக இருந்த ஹர்சிம்ரத் கவுர் பாதல் தனது பதவியில் இருந்து வியாழக்கிழமை மாலை விலகியிருக்கிறார். இது தொடர்பான கடிதத்தை பிரதமர் நரேந்திர மோதியின் நாடாளுமன்ற அலுவலகத்தில் அவர் அளித்துள்ளார்.

இந்த தகவலை தமது டிவிட்டர் பக்கம் வாயிலாக ஹர்சிம்ரத் பாதல் உறுதிப்படுத்தினார்.

அதில், விவசாயிகளுடன் அவர்களின் மகளாக, சகோதரியாக நிற்பதில் பெருமை கொள்கிறேன் என்று அவர் கூறியுள்ளார்.

ராஜிநாமாவை ஏற்ற குடியரசு தலைவர்

பதவி விலகல் முடிவு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஹர்சிம்ரத் பாதல், விவசாயிகளின் சந்தேகங்களையும் பிரச்னைகளையும் களைய தயாரில்லாத அரசில் அங்கம் வகிக்க நான் விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

இதற்கிடையே, ஹர்சிம்ரத் கவுர் பாதலின் ராஜிநாமாவை இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளதாக அவரது மாளிகை செய்தித்தொடர்பாளர் வெள்ளிக்கிழமை காலையில் தெரிவித்துள்ளார்.

மேலும், ஹர்சிம்ரத் பாதல் வகித்து வந்த உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் துறை அமைச்சர் பொறுப்பை இந்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூடுதல் பொறுப்பாக கவனிப்பார் என்றும் குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளதாக அவரது செய்தித்தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோதி தமது டிவிட்டர் பக்கத்தில், விவசாயிகளும், வேளாண் துறையுடன் தொடர்புடையவர்களும் விவசாய சீர்திருத்த மசோதாக்கள் குறித்து மக்களவைக்குள் விவாதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக மக்களவையில் வியாழக்கிழமை நடந்த விவாதத்தின் காணொளி இணைப்பையும் அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் இணைத்துள்ளார்.

நிறைவேறிய மசோதா

இதற்கிடையே, விவசாயிகள் சீர்திருத்தம் தொடர்பான மூன்று அவசர சட்டங்களுக்கு மாற்றாக மத்திய அரசு கொண்டு வந்த விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) விலை உத்தரவாதம் மற்றும் பண்ணை சேவைகள் மசோதா உடன்பாடு-2020 மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.

மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் ஹர்சிம்ரத் பாதல் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் கட்சி உள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளுக்கு எதிரான அவசர சட்டத்தை நிறைவேற்ற ஆளும் பாரதிய ஜனதா கட்சி முயல்வதாக ஷிரோமணி அகாலி தளம் குற்றம்சாட்டியது. இத்தகைய ஒரு மசோதா தங்களின் கட்சிக்கொள்கைக்கு எதிரானது என்று அக்கட்சியன் சார்பில் மக்களவையில் இன்று பேசிய சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

விவசாய சீர்திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு

முன்னதாக, மக்களவையில் பண்ணை மசோதா, விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக மசோதா, விவசாயிகள் விலை உத்தரவாதம் மசோதா ஆகியவை தொடர்பான அவசர சட்டத்துக்கு மாற்றான மசோதாக்கள் விவாதம் இன்று மாலை தொடங்கியது.

அதன் மீது பேசிய சுக்பீர் சிங் பாதல், "கடந்த 50 ஆண்டுகளாக பஞ்சாபில் விவசாயத்துறை வளர்ச்சிக்காக வழங்கிய உழைப்பை இந்த இரு மசோதாக்கள் மூலம் மத்திய அரசு களங்கப்படுத்தி விட்டது. எங்கள் கட்சி பஞ்சாபில் விவசாயிகளுக்காகவே இருக்கும் கட்சி" என்று தெரிவித்தார்.

இந்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடக்கும்போது அதற்கு எதிராக வாக்களிப்போம் என்று சுக்பீர் சிங் பாதல் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து சுக்பீர் சிங் பாதல் பேசும் ஒலிபெருக்கியை அணைக்கும்படி அவையை வழிநடத்திய சபாநாயகர் உத்தரவிட்டதால் அவர் பேசுவது மற்றவர்களுக்கு கேட்கவில்லை.

இந்த நிலையில், மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் பாதல், அரசின் விவசாய விரோத போக்குக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தனது அமைச்சர் பதவியில் இருந்து விலகுவார் என்று மக்களவையில் சுக்பீர் சிங் பாதல் அறிவித்தார்.

விவசாயிகள் மசோதா விவகாரத்தில் மத்திய அமைச்சரவையில் இருந்து விலகியபோதும், ஆளும் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஷிரோமணி அகாலி தளம் விலகுமா என்பது குறித்து அக்கட்சித் தலைமை தெளிவுபடுத்தவில்லை.

பிபிசி செய்தியாளர் அடுல் சங்கார், ஐந்து முறை பஞ்சாப் முதல்வராக இருந்த பர்காஷ் சிங் பாதலும் மத்திய அமைச்சர் பதவி வகித்த ஹர்சிம்ரத் கவுர் பாதலும் தொடக்கத்தில் மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டத்துக்கு ஆதரவாகவே இருந்தனர் என்பதை நினைவுகூர்கிறார்.

ஆனால், சொந்த ஊரில் தங்களின் மிகப்பெரிய வாக்கு வங்கியான விவசாயிகள் மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக வீதிகளில் ஆயிரக்கணக்கில் திரண்டு போராடத் தொடங்கினர். மத்திய அரசின் இந்த நடவடிக்கை, எதிர்காலத்தில் மிகப்பெரிய கார்பரேட்டுகள் விவசாய சந்தைக்குள் நுழைய வழிவகுக்கும் என்ற விவசாயிகளின் அச்சத்தை பின்னாட்களிலேயே ஷிரோமணி அகாலி தளம் தலைவர்கள் உணர்ந்ததாக பிபிசி செய்தியாளர் அடுல் குறிப்பிடுகிறார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங்

பஞ்சாப் முதல்வர் அமரிந்தர் சிங், ஹர்சிம்ரத் பாதலின் பதவி விலகல் செயலை திட்டமிட்டு நிகழ்த்திய நாடகம் என்று கூறியுள்ளார். பஞ்சாப் விவசாயிகளை ஏமாற்றும் செயலைத் தவிர வேறொன்றாக இது இருக்காது என்று அவர் தெரிவித்தள்ளார்.

இது விவசாயிகளுக்கான எந்தவொரு அக்கறையினாலும் செய்யப்படவில்லை. மாறாக சரிந்து வரும் சொந்த அரசியல் செல்வாக்கை காப்பாற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட மிக தாமதமான செயல் என்று அமரிந்தர் சிங் கூறியுள்ளார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திய அரசு கொண்டு வரும் புதிய விவசாய சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

விவாதத்துக்குரிய மசோதாக்கள் என்ன?

இந்திய நாடாளுமன்றத்தில் நரேந்திர மோதி அரசு கொண்டு வந்துள்ள மூன்று மசோதாக்களும் வேளாண்துறையில் சீர்திருத்தம் செய்யப்படும் அரசின் திட்டத்தின் அங்கம் என்று அரசு கூறுகிறது.

விவசாயிகள் வணிகம் மற்றும் வர்த்தகம் மசோதா, விவசாயிகள் விலை உத்தரவாதம் மற்றும் விவசாய சேவைகள் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் மசோதா ஆகியவைதான் அந்த மசோதாக்கள்.

இந்த மசோதாக்களில் குறிப்பிடப்பட்டுள்ள விவசாயிகள் வணிக பகுதி, வர்த்தகர் என்பது யார், பிரச்னைகளை தீர்ப்பதற்கான தீர்வை எங்கு எட்டுவது, சந்தை கட்டணம் ஆகியவை சரியாக வரையறுக்கப்படவில்லை என்று ஹரியாணா, பஞ்சாப், ஆந்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள விவசாயிகள் தரப்பு குற்றம்சாட்டுகிறது.

தற்போது கொள்முதல் சந்தைகள் வேளாண் உற்பத்தி சந்தை குழு எனப்படும் ஏபிஎம்சி சட்டத்தின்படி கடைப்பிடிக்கப்பட்டு வரும் சந்தை பகுதிகள், புதிய மசோதாக்களில் இடம்பெறவில்லை.

சந்தை பகுதிகள் வரையறுக்கப்படாத நிலையில், தங்களுக்கு விருப்பமான இடத்தில் சந்தைக்கு வெளியே வர்த்தகம் செய்யும் உரிமையை விவசாயிகளுக்கு அரசு வழங்கியிருப்பதாக கூறுகிறது.

ஆனால், மிகப்பெரிய கார்பரேட் நிறுவனங்களுக்காக இந்த வசதி உருவாக்கப்பட்டிரு்பபதாகவும், விவசாயிகள் தங்களுடைய சந்தை உள்ள வரம்பை கடந்து விற்பனைக்கான புதிய கதவுகளை நாட வேண்டிய நிலையை புதிய மசோதா உருவாக்கும் என்று விவசாயிகள் கருதுகிறார்கள் என்று பாரதிய கிசான் யூனியன் தலைவர் பல்பீர் சிங் ராஜேவால் தெரிவித்தார்.

இதன் காரணமாகவே பஞ்சாப், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் இந்த மசோதாவுக்கு எதிராக கடந்த சில வாரங்களாக விவசாயிகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

இந்திய அரசு கொண்டு வரும் புதிய விவசாய சீர்திருத்த சட்டத்துக்கு எதிராக பஞ்சாபில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

யார் வர்த்தகர் என்பதில் தெளிவு இல்லை

இரண்டாவதாக வர்த்தகர் யார் என்பது தற்போதைய மசோதாவில் சரியாக வரையறுக்கப்படவில்லை என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

மசோதாவில் உள்ள சட்டப்பிரிவு 2 (என்) ஒரு "வர்த்தகர்" யார் என்பதை வரையறுக்கிறது,

ஒரு விவசாயி "விளைபொருட்களை மாநிலங்களுக்கு உள்ளே நடைபெறும் வர்த்தகம் அல்லது மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் அல்லது அதன் கலவையாக உற்பத்தி செய்யும்போது அவர் தனியாகவோ குழுக்களாகவோ சென்று ஒட்டுமொத்த வியாபாரத்துக்காகவோ சில்லறை வியாபாரத்துக்காகவோ, உற்பத்தி ஏற்றுமதி அல்லது வேறு தேவைக்காகவோ வாங்கவோ விற்கவோ செய்யலாம்.

இந்திய வேளாண் அமைச்சகத்தை பொருத்தவரை, "பான் அட்டை உள்ள எந்தவொரு வர்த்தகரும் விவசாயிகளின் விளைபொருட்களை வர்த்தக பகுதியில் வாங்க முடியும்."

அதன்படி, ஒரு வர்த்தகர் ஒரு ஏபிஎம்சி சந்தை மற்றும் வர்த்தக பகுதி இரண்டிலும் செயல்பட முடியும். இருப்பினும், சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு, அந்த வர்த்தகருக்கு மாநில ஏபிஎம்சி சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி உரிமம் அல்லது பதிவு அவசியம். தற்போதைய சந்தை வியாபார அமைப்பில், அர்ஹதியாக்கள் எனப்படும் கமிஷன் முகவர்கள் ஒரு மண்டியில் வர்த்தகம் செய்ய உரிமம் பெற வேண்டும்.

கமிஷன் முகவர்கள் இயல்பாகவே நிதி ஆதாரத்தைக் கொண்டிருப்பார்கள். ஆனால், அந்த வர்த்தகரை எங்கிருந்தோ வியாபாரம் செய்ய வரும் விவசாயியால் எப்படி நம்ப முடியும்? என்று விவசாயிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகளை பாதிக்கும் சந்தை கட்டணம்

தற்போதுள்ள அமைப்பின்கீழ், பஞ்சாப் போன்ற மாநிலங்களில் இத்தகைய கட்டணங்கள் சுமார் 8.5% ஆக இருக்கும். சந்தைக் கட்டணமாக 3%, கிராமப்புற மேம்பாட்டு கட்டணமாக 3% மற்றும் கமிஷன் முகவர் கட்டணமாக சுமார் 2.5% உள்ளது.

இந்த கட்டண முறை நீக்கப்படுவதால், மறைமுகமாக சந்தை வியாபாரத்தில் பெரிய கார்பரேட்டுகள் நுழைய அரசு வழி வகை செய்துள்ளதாக விவசாயிகள் தரப்பினர் கருதுகிறார்கள். ஏபிஎம்சி சந்தைகளில் போட்டியை உருவாக்கும் வாய்ப்பை இது பறிக்கிறது என்பது அவர்களின் கவலை.

தொடக்கத்தில் இந்த மசோதாவை விவசாயிகள் தரப்பு எதிர்த்தபோதும், அது தொடர்பான அவசர சட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்தபோது ஆளும் மத்திய அரசு கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஷிரோமணி அகாலி தளம் எதிர்க்கவில்லை.

ஆனால், நாட்கள் செல்லச்செல்ல, பஞ்சாப் மாநிலத்தில் மிக முக்கிய அரசியல் சக்தியாக விளங்கும் ஷிரோமணி அகாலி தளம், விவசாயிகள் புதிய சட்டத்தால் பாதிக்கப்படுவார்கள் என்பதை உணரத் தொடங்கியது. விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவாக இருக்காவிட்டால், மாநிலத்தில் கட்சி மோசமான பாதிப்பை அடையக்கூடும் என்று அக்கட்சித் தலைமை கருதியது.

இந்தப் பின்னணியிலேயே விவசாயிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்து ஹர்சிம்ரத் பாதல் மத்திய அமைச்சர் பதவியில் இருந்து விலகும் அறிவிப்பை அக்கட்சித் தலைமை இன்று வெளியிட்டுள்ளது.

விவாதத்துக்குரிய இந்த மசோதாவில் ஷிரோமணி அகாலி தளம் கட்சி சார்பில் பேசியவர், ஹர்சிம்ரத் கவுர் பாதலின் கணவர் சுக்பீர் சிங் பாதல் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :