கொரோனா தடுப்பு நடவடிக்கை: தமிழக அரசின் செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோதி

பட மூலாதாரம், ARUN SANKAR
முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.
தினத்தந்தி - கொரோனா நடவடிக்கையில் தமிழக அரசுக்கு பிரதமர் பாராட்டு
கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் சிறப்பாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தார் என்கிறது தினத்தந்தியின் செய்தி.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவின் நிலைப்பாட்டில் மாற்றங்களைக் கொண்டு வருவதற்கு முன்பு மாநில முதல்-அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா பரவல் அதிகமுள்ள மராட்டியம், ஆந்திர பிரதேசம், கர்நாடகா, உத்தரபிரதேசம், தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் ஆகிய 7 மாநில முதல்-மந்திரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி காணொளி காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின் பேசிய பிரதமர் மோதி, "கொரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதில் தமிழக மக்கள் மற்றும் தமிழ்நாடு அரசின் பங்கை நான் பெரிதும் பாராட்டுகிறேன். நாட்டிலுள்ள பிற மாநிலங்களுக்கும் தமிழ்நாடு ஒரு எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது." என தெரிவித்தார் என்கிறது தினத்தந்தியின் செய்தி.
தினமணி - வருமான வரி தாக்கல் செய்ய செப்டம்பர் 30 கடைசி தேதி
பட மூலாதாரம், Getty Images
கடந்த 2018-19-ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கை அபராதத்துடன் தாக்கல் செய்ய கால அவகாசம் செப்டம்பா் 30-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதற்குள் கணக்கு தாக்கல் செய்ய வருமான வரி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனா் என்கிறது தினமணியின் செய்தி.
கடந்த 2018- 19-ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2019-ஆம் ஆண்டு ஏப்ரலில் தொடங்கியது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் உச்சவரம்பை தாண்டும் அனைவரும் வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
வரி ஆதாய நடவடிக்கையில் ஈடுபட்டு, வருமானவரி உச்ச வரம்புக்கு கீழ் வந்தாலும், கணக்கு தாக்கல் என்பது கடந்த 2018-ஆம் ஆண்டு முதல் கட்டாயமாக்கப்பட்டது.
அபராதம் செலுத்தி, கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் நிகழாண்டில் மார்ச் 31-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதற்கிடையில், கரோனா பொதுமுடக்கம் காரணமாக அபராதம் செலுத்தி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் செப்டம்பா் வரை நீட்டிக்கப்பட்டது என்கிறது அச்செய்தி.
இந்து தமிழ் திசை - `ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டம்`
பட மூலாதாரம், Getty Images
தமிழகத்தில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு' திட்டத்தை அக்டோபர்1-ம் தேதி முதல் அமல்படுத்துவது குறித்து முதல்வர் பழனிசாமி தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது என்கிறது இந்து தமிழ் திசையின் செய்தி.
மக்கள் நாட்டின் எந்த பகுதிக்கு சென்றாலும் ரேஷன் பொருட்களை வாங்கிக் கொள்ளும் வகையில் 'ஒரே நாடு; ஒரே ரேஷன் கார்டு'திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டே இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இந்தஆண்டு தொடக்கத்தில் இத்திட்டத்தை அமல்படுத்துவதாக இருந்தது. கரோனா பாதிப்பு காரணமாக இலவச பொருட்கள் விநியோகம் நடந்ததால் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இத்திட்டத்தை வரும்அக்டோபர் 1-ம் தேதி முதல்செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த ஆலோசனைக் கூட்டம் முதல்வர் பழனிசாமி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை நடந்தது என்கிறது அச்செய்தி.
பிற செய்திகள்:
- ஐபிஎல் 2020: அதிரடி ஆட்டத்தை தொடங்கிய ரோஹித் - 49 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி
- அமெரிக்க அதிபர் தேர்தல்: வாக்களிக்கும் முறையில் மோசடி நடப்பதாக குற்றம் சுமத்தும் டிரம்ப்
- சீனா - அமெரிக்கா இடையே வலுக்கும் மோதல் - ஐ.நா கூட்டத்தில் மோதிக் கொண்ட டிரம்ப் - ஷி ஜின்பிங்
- போதைப்பொருள் வழக்கு: ரகுல் ப்ரீத், தீபிகா படுகோன் விசாரணைக்கு ஆஜராக என்சிபி உத்தரவு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :