உலகின் 100 செல்வாக்கு நபர்கள்: டைம் பத்திரிகை பட்டியலில் மோதி, ஆயுஷ்மான் குராணாவுடன் இடம்பிடித்த இந்திய மூதாட்டி

டைம்ஸ் பத்திரிகை பட்டியலில் இடம் பிடித்த இந்திய மூதாட்டி

பட மூலாதாரம், Getty Images

"டைம்" பத்திரிகையின் "2020ஆம் ஆண்டின் அதிக செல்வாக்கு மிக்க நபர்கள்" பட்டியலில் 82 வயது இந்திய மூதாட்டி ஒருவர் இடம் பெற்றுள்ளார்.

இந்தியாவின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடிய பெண்களில் பில்கிசும் ஒருவர்.

அவரது பெயரும் டைம் பத்திரிகையின் பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

2020ன் அதிக செல்வாக்கு மிக்க நபர்களின் பட்டியலில், இந்திய பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குராணாவும் இடம் பிடித்துள்ளனர்.

இதற்கான வருடாந்திர பட்டியலில் உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த அதிக தாக்கம் செலுத்திய தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வரிசைப்படுத்தப்படுவார்கள்.

அந்த வகையில், "ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்" என்ற தலைப்பில் பத்திரிகையார் மற்றும் எழுத்தாளரான ராணா ஆயுப், பில்கிஸ் குறித்து எழுதியதும் இடம் பெற்றுள்ளது.

"ஜனநாயகத்திற்கு எதிரான விஷயத்திற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட மாணவர் தலைவர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கு பில்கிஸ் நடத்திய போராட்டம், நம்பிக்கையையும் வலிமையையும் அளித்து, நாடு முழுக்க அமைதியான போராட்டங்கள் நடத்தப்பட உந்துதலாக இருந்தது" என ராணா ஆயுப் எழுதியுள்ளார்.

இந்த டைம் பத்திரிகை அறிவிப்பு வந்தவுடன், #ஷாஹின்பாக் மற்றம் #பில்கிஸ் ஆகிய ஹேஷ்டேகுகள் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகியுள்ளன.

கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக டெல்லியில் உள்ள முஸ்லிம் பகுதியான ஷாஹின் பாகில் நீண்ட கால அமைதிப் போராட்டம் நடைபெற்றது

இதில் நூற்றுக்கணக்கான முஸ்லிம் பெண்களும் கலந்து கொண்டு அமைதியான முறையில் போராடினர். இதில் பல்வேறு மதங்களை சேர்ந்தவர்களும் அவர்களுக்கு ஆதரவாக இருந்தார்கள்.

போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்கள் இந்திய அரசியல் அமைப்பின் முன்னுரையை படித்ததோடு, தாங்கள் இந்தியப் பிரஜைகள்தான் என்பதை அழுத்தமாக தெளிவுபடுத்தி உரையாற்றி, தேசபக்தி பாடல்களும் பாடினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :