டெல்லி கலவரம் 2020: கபில் மிஸ்ரா சம்பவ பகுதியில் என்ன செய்தார்? - பிபிசி ஸ்பெஷல் ரிப்போர்ட்

  • கீர்த்தி துபே
  • பிபிசி செய்தியாளர்
கபில் மிஸ்ரா

பட மூலாதாரம், GETTYIMAGES / HINDUSTAN TIMES

பிப்ரவரி 23 பிற்பகல், பாஜக தலைவரும், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் மாடல் டவுன் தொகுதியின் வேட்பாளருமான கபில் மிஸ்ரா, ஜாஃபராபாத்- மோஜ்பூர் எல்லையை அடைகிறார். அவர் வருவதற்கு முன்பே, அவரின் ஆதரவாளர்கள் அங்கே திரண்டிருந்தனர்.

'ஜெய் ஸ்ரீ ராமின்' கோஷங்கள் அங்கே எதிரொலிக்கின்றன. மக்களிடையே உரையாற்றிய கபில் மிஸ்ரா, "டி.சி.பி அவர்கள் எனக்கு முன்னால் நிற்கிறார்.

உங்கள் அனைவரின் சார்பாக நான் சொல்கிறேன். டிரம்ப் இங்கிருந்து போகும் வரை நாங்கள் அமைதியாக இருப்போம். ஆனால், அதற்குப் பிறகு சாலை காலி செய்யப்படாவிட்டால், நாங்கள் நீங்கள் சொல்வதையும் கேட்க மாட்டோம். டிரம்ப் செல்வதற்குள், நீங்கள் (காவல்துறை) ஜஃப்ராபாத் மற்றும் சந்த்பாக் பகுதியை காலி செய்ய வையுங்கள்… இதுதான் எங்களின் வேண்டுகோள். இல்லையெனில் நாங்கள் சாலையில் இறங்க வேண்டியிருக்கும். "

கபில் மிஸ்ரா மூன்று நாள் இறுதி கெடுவை அளிக்கும்போதும், காவல்துறையினரின் பேச்சைக் கேட்கமாட்டோம் என்று சொல்லும்போதும் வடகிழக்கு டெல்லியின் துணை போலீஸ் கமிஷனர் வேத் பிரகாஷ் ஷெளர்யா அவருக்கு அருகே நின்று கொண்டிருந்தார். ஆனால் கபில் மிஸ்ரா இதை ஏற்க மறுத்துவிட்டார்.

நான் எந்த உரையும் நிகழ்த்தவில்லை - கபில் மிஸ்ரா

கபில் மிஸ்ராவை ஜூலை 28 ம் தேதி விசாரித்ததாகவும், தாம் எந்த உரையும் நிகழ்த்தவில்லை என்றும் அவர் கூறியதாகவும் `எஃப்.ஐ.ஆர் 59` அதாவது டெல்லி கலவரத்தின் பின்னணியில் உள்ள சதித்திட்டம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட குற்றப்பத்திரிக்கையில், குறிப்பிடப்பட்டுள்ளது.

"அந்த மக்களின் பிரச்சனைகளை காவல்துறையிடம் சொல்லவும், தடை ஏற்படுத்தப்பட்ட சாலையை காவல்துறை உதவியுடன் திறக்கும் யோசனையை அளிக்கவே நான் அங்கு சென்றேன். நான் எந்த உரையையும் நிகழ்த்தவில்லை. மூன்று நாட்களில் சாலையைத் திறக்கும்படி காவல்துறையினரிடம் மட்டுமே சொன்னேன், இதனால் அப்பகுதி மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படும். சாலையை திறக்காத பட்சத்தில் நாங்கள் தர்ணாவில் ஈடுபடுவோம் என்பதே எனது அறிக்கை," என்று அவர் கூறியுள்ளார்.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது எஃப்.ஐ.ஆர் ஏன் இல்லை?

பட மூலாதாரம், Social Media

கபில் மிஸ்ரா அந்தப்பகுதிக்கு சென்று சாலையை காலி செய்வதற்கான இறுதிக் கெடுவை விதித்த அதேநாளில் அதாவது பிப்ரவரி 23 மாலை, வடகிழக்கு டெல்லி எரியத் தொடங்கியது.

வன்முறை பற்றிய செய்திகள், படங்கள் மற்றும் வீடியோக்கள் முழு பகுதியிலிருந்தும் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரத் தொடங்கின. இதன் மூலம், இந்த சர்ச்சைக்குரிய உரை பற்றிய விவாதம் சமூக ஊடகங்களில் தொடங்கியது, ஒரு பிரிவினர் இந்த உரையை வெறுப்பு மற்றும் வன்முறையைத் தூண்டும் பேச்சு என்று கூறினார்கள்.

கபில் மிஸ்ராவை கைது செய்வதற்கான கோரிக்கைகள் அதிகரித்தன. கலவரம் நடந்து கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் ஆகிவிட்ட நிலையில் இது தொடர்பாக மொத்தம் 751 எஃப்.ஐ.ஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால் கபில் மிஸ்ரா மீது புகார்கள் இருந்தபோதிலும், அவருக்கு எதிராக டெல்லி காவல்துறையில் ஒரு எஃப்.ஐ.ஆர் கூட பதிவு செய்யப்படவில்லை.

மாறாக, கலவரம் தொடர்பான `எஃப்.ஐ.ஆர் 59` இன் குற்றப்பத்திரிக்கைக்காக பெறப்பட்ட கபில் மிஸ்ராவின் வாக்குமூலத்தை சுட்டிக்காட்டி அவர் உரை நிகழ்த்தவில்லை என்று காவல்துறை இப்போது தெரிவித்துள்ளது.

முதல் புகார் - "போராட்டம் என்பதையே மறக்கச்செய்ய ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் - கபில் மிஸ்ரா"

இதுபோன்ற இரண்டு புகார்களின் நகல்கள் பிபிசி யிடம் உள்ளது. பாஜக தலைவர் கபில் மிஸ்ராவின் பெயர் அவற்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. ஆனால் கலவரம் நடந்து ஏறக்குறைய ஏழு மாதம் ஆன பிறகும், இந்த புகார்களின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.

சட்டத்தின் கீழ் ஒரு குற்றம் முதல் நோக்கில் அறியக்கூடிய குற்றமாக இருந்தால் (தீவிரமானது மற்றும் காவல்துறையினர் கைது செய்ய ஒரு வாரண்ட் தேவையில்லை) காவல்துறை , எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும். ஆனால் கபில் மிஸ்ரா மீது புகார் அளித்தவர்கள், தங்கள் புகாரை பதிவு செய்ய முதலில் காவல்துறை மறுத்ததாக பிபிசியிடம் தெரிவித்தனர். இந்த புகார்கள் பின்னர் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், அவற்றின் அடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை.

இதே போன்ற கேள்விகளின் பட்டியலை பிபிசி டெல்லி காவல்துறைக்கு அனுப்பியுள்ளது. இதற்கு இதுவரை எங்களுக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை. இந்த பதில்கள் கிடைக்கப் பெற்றவுடன், இந்தக் கட்டுரை பதில்களுடன் புதுப்பிக்கப்படும்.

கமிஷனர் மற்றும் உள்துறை அமைச்சகத்திற்கு புகார் பற்றித்தெரியும்

இவர்களில், யமுனா விஹாரில் வசிக்கும் ஒரு புகார்தாரர் ஜமி ரிஸ்வி , பிப்ரவரி 24 அன்று ஒரு புகாரை எழுதி டெல்லி போலீஸ் கமிஷனர், உள்துறை அமைச்சகம், பிரதமர் அலுவலகம் மற்றும் டெல்லி துணைநிலை ஆளுனர் அலுவலகத்திற்கு அனுப்பினார்.

அதில் எழுதப்படிருந்தது - 2020 பிப்ரவரி 23 அன்று, 20-25 பேர் கொண்ட ஒரு குழு, துப்பாக்கிகள், திரிசூலங்கள், கைகளில் கம்புகளுடன் கோஷங்களை எழுப்பிக் கொண்டிருந்தது.

"கபில் மிஸ்ரா நீங்கள் கம்பை சுழற்றுங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்

நீண்ட நேரம் கம்புகளால் ஒலி எழுப்புங்கள் , நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

இழுத்து இழுத்து கம்புகளால் ஒலி எழுப்புங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்.

முல்லாக்கள் மீதும் கம்புகளால் ஒலி எழுப்புங்கள், நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்"

"சிறிது நேரத்திற்குப் பிறகு கபில் மிஸ்ரா தனது தோழர்கள் சிலருடன் வந்தார், அவர்களிடம் துப்பாக்கிகள், வாள், திரிசூலம், கம்புகள், கற்கள், பாட்டில்கள் போன்றவை இருந்தன.

அங்கே நின்று கபில் மிஸ்ரா வெறுப்புரைகளை வழங்கத் தொடங்கினார்.

"இப்போது எங்கள் வீட்டின் கழிப்பறைகளை சுத்தம் செய்பவர்களை நாங்கள் தலையில் தூக்கி வைத்துக்கொள்ள முடியுமா? இதற்கு பதிலளிக்கும் விதமாக, மக்கள் கூச்சலிட்டு, 'நிச்சயமாக இல்லை' என்று அவர் பேசினார்.

இதற்குப் பிறகு, கபில் மிஸ்ரா கூறினார்- இந்த முல்லாக்கள், முன்பு சிஏஏ -என்ஆர்சி (CAA-NRC) பற்றி எதிர்ப்பு தெரிவித்தனர். இப்போது அவர்கள் இடஒதுக்கீட்டிற்காக ஆர்பாட்டம் தொடங்கியுள்ளனர். அவர்களுக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும்," என்று ரிஸ்வியின் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாமி ரிஸ்வி மார்ச் 18 அன்று கர்கர்டூமாவின் பெருநகர நீதிமன்றத்தை அணுகி, சிஆர்பிசி 156 (3) இன் கீழ் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய உத்தரவிடுமாறு நீதிமன்றத்தை கேட்டுக்கொண்டார். ஆனால் இந்த வழக்கில் இதுவரை எதுவும் செய்யப்படவில்லை.

ரிஸ்வி தனது புகாரில் "மிஸ்ராவின் பேச்சைக் கேட்டதும், அவரது சகாக்கள் போராட்டம் நடத்தியவர்களை கற்களால் தாக்கினர். காவல்துறை முன்னிலையில், முஸ்லிம்கள் மற்றும் தலித்துகளும், தேச துரோகிகள், முல்லாக்கள் மற்றும் பிற சாதி வார்த்தைகளால் ஏசப்பட்டனர். அவர்கள் வாகனங்களை உடைக்க ஆரம்பித்தனர். கபில் மிஸ்ரா இந்த மக்கள் அனைவரிடமும் கையில் துப்பாக்கியுடன் சொல்லிக்கொண்டிருந்தார் - "இன்று இவர்களை விடக்கூடாது. போராட்டத்தை மறக்கும்விதமான பாடத்தை இவர்களுக்கு புகட்டுங்கள்."

ஒரு சிறப்பு விஷயம் என்னவென்றால், இந்த விண்ணப்பத்தில் , டெல்லி காவல்துறை ஆணையாளர் இதை பெற்றுக்கொண்டதற்கான பிப்ரவரி 24 ஆம் தேதியிட்ட ஒரு முத்திரை உள்ளது. அதாவது பிப்ரவரி 24 ஆம் தேதி, டெல்லி காவல்துறைக்கு இந்த விண்ணப்பம் கிடைத்தது. டெல்லி காவல்துறை ஆணையாளருக்கு இது தெரியும்.

இது மட்டுமல்லாமல், உள்துறை அமைச்சகமும் இந்த விண்ணப்பத்தைப் பெற்றுள்ளது . அதாவது உள்துறை அமைச்சகமும் இதை அறிந்திருக்கிறது.

ரிஸ்வியின் புகாரில் மேலும் எழுதப்பட்டுள்ளது- "கபில் மிஸ்ரா டி.சி.பி முன்னிலையில் போராட்டத்தை முடிக்கப்போவதாக அச்சுறுத்தியபோது , எல்லை மீறப்பட்டது. அதன்பிறகு, டி.சி.பி அவர்கள் சாலைகளில் சுற்றித் திரிந்து, மேலிடத்திலிருந்து எங்களுக்கு உத்தரவு வந்துள்ளது ஆகவே இரண்டு நாட்களுக்குப் பிறகு இப்பகுதியில் எந்த ஆர்ப்பாட்டமும் இருக்கக்கூடாது என்றும் நீங்கள் போராட்டத்தை கைவிடவில்லையென்றால் இங்கே கலவரம் ஏற்படும் . இதில் நீங்களும் தப்ப மாட்டீர்கள், உங்கள் போராட்டமும் தப்பாது." என்றும் கூறினார்.

"கபில் மிஸ்ராவும் அவரது கூட்டாளிகளும் மோஜ்பூர் , கர்தாம்புரி, ஜாஃபராபாத் பகுதியில் சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளை குறிவைத்து கொன்றுள்ளனர். குற்றவாளிகள் மீது பொருத்தமான பிரிவுகளின் கீழ் எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்யப்பட்டு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். ''

பட மூலாதாரம், Getty Images

கபில் மிஸ்ரா பிபிசிக்கு என்ன பதிலளித்தார்?

இந்த குற்றச்சாட்டுகளுக்கான பதிலை அறிய பாஜக தலைவர் கபில் மிஸ்ராவை தொடர்பு கொண்டோம். "சிலர் என் மீது புகார்களை பதிவு செய்துள்ளனர், ஆனால் அது ஒரு எஃப்.ஐ.ஆர் அல்ல, அது ஒரு புகார் மட்டுமே என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். இந்த புகார்கள் தவறானவை மற்றும் ஆதாரமற்றவை என்று தனது முதல் தகவல் அறிக்கையில் டெல்லி காவல்துறை கண்டறிந்துள்ளது. போலீஸ், தனது பதிலை பிரமாணப் பத்திரத்தில் நீதிமன்றத்திடம் அளித்துள்ளது. இந்த கலவரங்களைச் செய்தவர்கள் நாளுக்குநாள் பிடிபடுகின்றனர். தாஹிர் உசேன் மற்றும் அவரது தோழர்கள் உமர் காலித் மற்றும் காலித் சைஃபி ஆகியோர் போலீஸ் காவலில் உள்ளனர். இப்போது குற்றவாளிகள் மீதான கவனத்தை திசை திருப்ப என்னை குறிவைக்கிறார்கள். இந்த புகார்கள் அவற்றின் ஒரு பகுதிதான்," என்று அவர் பிபிசிக்கு பதிலளித்தார்.

ஆனால் அவரை டெல்லி காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்தார்களா என்று நாங்கள் கேட்டபோது அவர் ஆமாம் என்று பதிலளித்தார்.

ஆனால் மேலும் விவரங்களை கேட்டபோது, பதிலளிக்க அவர் மறுத்துவிட்டார்.

இரண்டாவது புகார்- "இன்று வாழ்க்கையிலிருந்தே விடுதலை அளிப்போம்"

ரிஸ்வியின் புகார் தனிப்பட்டது மட்டுமல்ல. சாந்த் பாக் பகுதியில் வசிக்கும் ரூபினா பானோ, தனது புகாரை பதிவு செய்ய காவல் நிலையத்திற்கு சென்றபோது தனது புகார் பதிவு செய்யப்படவில்லை என்று கூறுகிறார். இதன் பின்னர், மார்ச் 18 அன்று, முஸ்தஃபாபாதில் உள்ள ஈத்காஹ்வில் (முஸ்லிம் சமூகத்தினர் தொழுகைக்காக கூடும் இடம்) அமைந்துள்ள டெல்லி காவல்துறை புகார் மையத்திற்குச் சென்று தனது புகாரை பதிவு செய்தார். முஸ்தஃபாபாதின் ஈத்காஹ் , கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான முகாமாக மாற்றப்பட்டது.

இந்த புகார் தொடர்பாக டெல்லி காவல்துறை இதுவரை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. இந்த புகார், மார்ச் 19 அன்று தயால்பூர் காவல் நிலையத்தில் பெறப்பட்டுள்ளது. புகார்களில் தெரிவிக்கப்பட்டுள்ள பெயர்களால் தனக்கும் தனது குடும்பத்தினருக்கும் , அச்சுறுத்தல் மற்றும் மிரட்டல் வருவதாக ரூபினா குற்றம் சாட்டியுள்ளார். மேலும், வழக்கில் அவரையும் சிக்கவைக்கப்போவதாக மிரட்டல் வந்துள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

மார்ச் 18 அன்று எழுதப்பட்ட புகாரில், சந்த் பாக் பகுதியில் வசிக்கும் ரூபினா பானோ, "2020 பிப்ரவரி 24 , திங்கள் கிழமை காலை 11 மணிக்கு நான் தர்ணா நடக்கும் இடத்தை அடைந்தேன் . ஏராளமான காவல்துறையினர் சீருடையில் இருந்தனர். அவர்களும், உதவி ஆணையாளர் அனுஜ் சர்மா மற்றும் தயால்பூரின் எஸ்.எச்.ஓ வும், பெண்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர். இன்று உங்களுக்கு வாழ்க்கையிலிருந்து விடுதலை தந்துவிடுவோம் என்று அவர்கள் மிரட்டினர்.

"நாங்கள் அமைதியாக போராடுகிறோம், பிறகு நீங்கள் ஏன் எங்களிடம் இப்படி பேசுகிறீர்கள் என்று ஏ.சி.பி அனுஜ் குமாரிடம் நான் கேட்டேன். கபில் மிஸ்ராவும் அவரது ஆதரவாளர்களும், உங்கள் வாழ்க்கையிலிருந்து இன்று உங்களுக்கு விடுதலை தருவார்கள் என்று அவர் கூறினார். பின்னர் அவருக்கு கபில் மிஸ்ராவின் தொலைபேசி அழைப்பு வந்தது. இதன் பின்னர், காவல்துறையினருடன் சேர்ந்து தாக்குதல்காரர்கள், பெண்களைத் தாக்கத் தொடங்கினர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

வட கிழக்கு டெல்லியில் கலவரத்தில் எரிக்கப்பட்ட கட்டடம்

புகார் வந்தது, ஆனால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படவில்லை - போலீஸ்காரர்

தயால்பூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் ஒரு காவலரை பிபிசி சந்தித்தது. "இந்த வழக்கில் எஃப்.ஐ.ஆர் எதுவும் பதிவு செய்யப்படவில்லை. 144 பிரிவு அமல்செய்யப்படிருந்தபோது அந்தப்பெண் வெளியே வந்திருக்கக்கூடாது. அவருக்கு காயம் ஏற்பட்டால் யார் பொறுப்பு. அந்த பெண்ணின் பங்கு குறித்தும் நாங்கள் விசாரித்து வருகிறோம். "என்று தனது பெயர் வெளிவரக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் அவர் கூறினார்.

இது ஒரு அறியக்கூடிய குற்றம் என்று புகார்தாரர் குற்றம் சாட்டியுள்ளதால், தண்டனைச் சட்டத்தின்படி எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டியது கட்டாயம் என்பது குறித்து பிபிசி கேட்டது. அதற்கு போலீஸ்காரர் "ஆம் .எஃப்.ஐ.ஆர் 60 அதே சம்பவம் தொடர்பானதுதான் " என்று கூறினார். அந்த எஃப்.ஐ.ஆர் 60, டெல்லி காவல்துறைத் தலைமை காவலர் ரத்தன்லால் ஷர்மாவின் கொலை தொடர்பானது. ஆனால் புகார்தாரர் ரூபினா பானோவால் கபில் மிஸ்ரா மற்றும் ஏ.சி.பி மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட்டதா? என்று பிபிசி அவரிடம் கேட்டது.

இந்த கேள்வி கேட்டதும் அவர் சில நொடிகள் அமைதியாக இருந்தார். பின்னர் ரத்தன்லால் சர்மா தாக்கப்பட்ட வீடியோவை நீங்கள் பார்த்தீர்களா என்று அவர் கேட்டார். நாங்கள் அதன் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்துள்ளோம் என்று அவர் கூறினார்.

எஃப்.ஐ.ஆர் 60 இன் குற்றப்பத்திரிக்கையை பிபிசி ஆராய்ந்தது. இதில் யோகேந்திர யாதவ், ஷாஹீன் பாக் பகுதியில் உணவு விநியோகம் செய்த டி.எச். பிந்த்ரா உள்ளிட்ட பல பிரபலமான அறிவுஜீவிகளின் பெயர்கள் உள்ளன. ஆனால் புகார் அளித்த ரூபினா பானோவின் பெயர் அல்லது கபில் மிஸ்ரா அல்லது ஏ.சி.பி அனுஜ்குமாரின் பெயர் குறிப்பிடப்படவில்லை.

ரூபினா பானோவின் புகார் தொடர்பாக ஏதேனும் எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்யப்பட்டதா என்று பிபிசி மீண்டும் போலீசாரிடம் கேட்டது. இந்த முறை போலீஸ்காரர் கூறினார் - எங்களுக்கு புகார் வந்துள்ளது, நாங்கள் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை.

நானும் என் குடும்பமும் மிரட்டப்படுகிறோம் - ரூபினா

ஒரு குற்றம், முதல் நோக்கில் அறியக்கூடிய குற்றமாக இருந்தால் (தீவிரமானது மற்றும் காவல்துறையினர் கைது செய்ய ஒரு வாரண்ட் தேவையில்லை) காவல்துறை எஃப்.ஐ.ஆர் தாக்கல் செய்ய வேண்டியது கட்டாயமாகும்.என்று 2013 ஆம் ஆண்டில், , லலிதா குமாரிக்கும் உத்திரபிரதேச அரசுக்கும் இடையிலான ஒரு வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தெளிவிடக்கூறியுள்ளது.

ரூபினா பானோ தனது புகாரில் "எஸ்.எச்.ஓ அவர்கள், பெயர் குறிப்பிடாமல் புகார் செய்தால் அதை வாங்கமாட்டோம் என்று கூறினார் பின்னர் நேர்மாறாக இந்த வழக்கில் என்னை சிக்க வைப்பதாக அச்சுறுத்த ஆரம்பித்தார்" என்று கூறியுள்ளார்.

இந்த வழக்கில், ரூபினா பானோ டெல்லி உயர் நீதிமன்றத்தில் மாண்டமஸ் ரிட் (மேல்மன்ற ஆணை மனு) தாக்கல் செய்துள்ளார். ஒரு அரசு அதிகாரி தனது கடமைகளை நிறைவேற்ற மறுத்தால், இதன் கீழ் உயர் நீதிமன்றம், ஒரு அரசு அலுவலகத்தின் அதிகாரி, துணை நீதிமன்றம் அல்லது நிறுவனத்தின் அதிகாரிக்கு தனக்கு ஒதுக்கப்பட்ட கடமையை நிறைவேற்றுமாறு உத்தரவிடலாம்.

மார்ச் முதல் ஜூலை வரை உள்ளூர் காவல்துறையினர், தனக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்போவதாக அச்சுறுத்தியதாகவும், புகாரை வாபஸ் பெறுமாறு மிரட்டியதாகவும் ரூபினா தனது ரிட் மனுவில் எழுதியுள்ளார்.

ரூபினா கூற்றுப்படி, ஜூலை 25 அன்று, தனது கணவரை ஒரு நபர் பிணைக் கைதியாக வைத்திருந்தார். மேலும் ரூபினா புகாரை வாபஸ் பெறாவிட்டால், அதன் விளைவுகளை அவர் குடும்பத்தினர் சந்திக்க வேண்டியிருக்கும் என்று மிரட்டியதாகவும் சொல்லப்பட்டுள்ளது.

கபில் மிஸ்ராவுக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை- டெல்லி போலீஸ்

ஜூலை 13 ம் தேதி, தில்லி காவல்துறை, தலைவர்களுக்கு எதிரான எஃப்.ஐ.ஆர்கள் தொடர்பான மனுக்கள் குறித்து பிரமாணப் பத்திரம் அளித்தது. " தலைவர்கள் மக்களை ஏவிவிட்டதற்கும், கலவரம் செய்ய தூண்டியதற்கும் இதுவரை எந்த ஆதாரமும் இல்லை.''

"வெறுப்பைத்தூண்டும் உரைக்கும் இழைக்கப்பட்ட குற்றங்களுக்கும் இடையிலான தொடர்பு நிரூபணமாகும் ஏதாவது ஆதாரம் கிடைத்தால் முறையான எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்." என்று அதில் கூறப்பட்டிருந்தது.

பிப்ரவரி 23 மற்றும் பிப்ரவரி 24 சம்பவங்கள் தொடர்பாக கபில் மிஸ்ரா பெயரில் புகார் அளிக்கப்பட்டதில் தில்லி காவல்துறை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். பிப்ரவரி 23 அன்று கபில் மிஸ்ராவின் உரைக்குப் பிறகு, மாலையில் முதல் வன்முறை சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது என்பதும் உண்மைதான்.

எஃப்ஐஆர் தொடர்பாக துஷார் மேத்தாவின் வாதங்களும் நீதிபதி முரளிதரின் பதிலடியும்

பிப்ரவரி 26, ஹர்ஷ் மந்தர் மற்றும் ஃபாரா நக்வி ஆகியோரால் தாக்கல் செய்யப்பட்ட மனு மீது டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி எஸ். முரளிதர் மற்றும் நீதிபதி தல்வந்த் சிங் விசாரணையைத் தொடங்கினர். ஆட்சேபணைக்குரிய அறிக்கைகளை வெளியிட்ட கபில் மிஸ்ரா, பாஜக எம்.பி. பர்வேஷ் வர்மா மற்றும் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகிய மூன்று பாஜக தலைவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று இந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த விவகாரம் உடனடியாக விசாரிக்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டதால் இது, நீதிபதி முரளிதர் முன்னிலையில் வந்தது.

டெல்லி துணைநிலை ஆளுனர் டெல்லி காவல்துறையின் வழக்கறிஞராக தன்னை தேர்ந்தெடுத்திருப்பததாக சொலிசிட்டர் ஜெனரல்(எஸ்ஜி) நீதிமன்றத்தில் தெரிவித்தார். இருப்பினும், டெல்லி அரசாங்க வழக்கறிஞர் ராகுல் மெஹ்ரா இதற்கு ஆட்சேபணை தெரிவித்தார். ஏனெனில் விதிகளின்படி, இந்த முடிவை அமைச்சர்கள் குழுதான் எடுக்கவேண்டும் என்று அவர் கூறினார்.

. மேலும், இந்த வழக்கில், மத்திய அரசுக்கு எந்தப்பங்கும் இல்லை. எனவே இந்த வழக்கில் எஸ்.ஜி. ஆஜரானது குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

"பாஜக தலைவர்கள் வெறுப்பைத்தூண்டும் விதமாக பேசியதாக கூறப்படுவது தொடர்பாக இப்போது கைது நடவடிக்கை தேவையில்லை" என்று துஷார் மேத்தா நீதிமன்றத்தில் கூறினார். ஆகவே தலைமை நீதிபதி நாளை வரும்வரை காத்திருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கலவரம் நடைபெற்ற பகுதியில் துணை ராணுவப் படைகளால் நடத்தப்பட்ட கொடி அணி வகுப்பு

"குற்றவாளிகளுக்கு எதிராக எஃப்.ஐ.ஆர் பதிவுசெய்வது ஒரு முக்கியமான விஷயம் என்று உங்களுக்கு தோன்றவில்லையா? டெல்லி மோசமான நிலையில் இருக்கிறது. எது மிகவும் முக்கியமானது என்று நாம் தான் தீர்மானிக்கவேண்டும்," என்று அதற்கு பதிலளித்த நீதிபதி முரளிதர், துஷார் மேத்தாவிடம் தெரிவித்தார்.

"நூற்றுக்கணக்கானவர்கள் அந்த வீடியோவைப் பார்த்திருக்கிறார்கள், இந்த பிரச்சினை மிகவும் முக்கியமானது என்று நீங்கள் இன்னும் நினைக்கவில்லையா?"

இந்த கேள்விக்கு பதிலளித்த துஷார் மேத்தா தான் வீடியோவைப் பார்க்கவில்லை என்று கூறினார். நீதிபதி முரளிதர் இந்தக்கேள்வியை நீதிமன்றத்தில் ஆஜரான காவல்துறை அதிகாரியிடம் கேட்டார். கபில் மிஸ்ராவின் வீடியோவைப் பார்க்கவில்லை என்று அவரும் கூறினார்.

"உங்கள் அலுவலகத்தில் இவ்வளவு தொலைக்காட்சிப்பெட்டிகள் இருந்தபோதிலும், வீடியோவைப் பார்க்கவில்லை என்று காவல்துறை கூறுவது கவலைக்குரிய விஷயம். டெல்லி காவல்துறையின் இந்த அணுகுமுறை என்னை திகைப்படைய வைக்கிறது, '' என்று நீதிபதி குறிப்பிட்டார்.

இதன் பின்னர், கபில் மிஸ்ரா, பர்வேஷ் வர்மா மற்றும் அனுராக் தாக்கூர் ஆகியோரின் உரைகள் நீதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் நீதிமன்றத்தில் கேட்கப்பட்டன.

எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய இது சரியான நேரம் அல்ல என்று சொலிசிட்டர் ஜெனரல் மேத்தா கூறினார்.

இது குறித்து நீதிபதி முரளிதர் இப்படிக்கேட்டார், " இந்த நகரம் பற்றி எரிகிறது. பொருத்தமான நேரம் எதுவாக இருக்கும்?"

இதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல், "நிலைமை சாதகமாக இருந்தால் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்படும்" என்றார்.

"எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது குறித்து டெல்லி காவல்துறை உணர்வுபூர்வமான முடிவை எடுக்க வேண்டும்." என்று நீதிபதி முரளிதரின் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இதன் பின்னர் மத்திய அரசு, இரவு தாமதமாக ஒரு உத்தரவை பிறப்பித்தது, நீதிபதி முரளிதர் பஞ்சாப்-ஹரியானா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அடுத்த நாள் இந்த மனு டெல்லி உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.என்.படேலின் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. மேலும் அத்தியாவசிய விஷயம் போல இதற்கு முன்னுரிமை கொடுக்கக்கூடாது என்ற சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவின் கூற்று நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

பட மூலாதாரம், GETTY IMAGES/HINDUSTAN TIMES

படக்குறிப்பு,

டெல்லி காவல்துறை ஆணையர் எஸ்.எம். ஸ்ரீவாத்சவ்

டெல்லி காவல்துறை புள்ளிவிவரங்களுக்கும் நியாயத்தின் கூற்றுகளுக்கும் இடையிலான முரண்பாடு

முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி ஜூலியோ பிரான்சிஸ் ரிபேரோ ,ஒரு கடிதம் எழுதி டெல்லி காவல்துறையின் விசாரணை பற்றி கேள்வி எழுப்பினார். "நமது விசாரணை, உண்மைகள் மற்றும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டது. விசாரணையின் கீழ் வரும் ஒரு நபர் எவ்வளவு பிரபலமானவர் அல்லது எவ்வளவு பெரியவர் என்பதைக்கொண்டு இதில் தாக்கம் ஏற்படக்கூடாது" என்று அவர் கூறினார்.

டெல்லி காவல்துறை ஆணையாளர் எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா, ரிபேரோவின் கடிதத்திற்கு பதிலளிக்கும் போது, சில புள்ளிவிவரங்களை முன்வைத்தார். அதன்படி டெல்லி கலவரத்தில் 410 எஃப்.ஐ.ஆர்கள், முஸ்லிம்களின் புகார்களின் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்துகளின் புகார்களின் பேரில் 190 எப்ஐஆர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

முன்னதாக செப்டம்பர் 13 ம் தேதி, டெல்லி காவல்துறை ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது. இதிலும் சில புள்ளிவிவரங்கள் கொடுக்கப்பட்டன. மொத்தம் 751 எஃப்.ஐ.ஆர்களில் 250 எஃப்.ஐ.ஆர்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது மற்றும் 1153 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது . இதில் 571 பேர் இந்துக்கள் மற்றும் 582 பேர் முஸ்லிம்கள் .

அதாவது, இந்துக்களின் எஃப்.ஐ.ஆர்களின் எண்ணிக்கை 190 ஆகும். இது இனவாத வன்முறை வழக்கு என்பதால், இந்துக்கள் முஸ்லிம்களை தங்கள் எஃப்.ஐ.ஆர்களில் குற்றம் சாட்டியிருக்கலாம் என்று கருதலாம். அதாவது, 190 எஃப்.ஐ.ஆர் அடிப்படையில் 582 முஸ்லிம்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், முஸ்லிம் சமூகத்தின் 410 புகார்களின் அடிப்படையில் 410 எஃப்.ஐ.ஆர்களில் 571 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஜூலை 13 ம் தேதி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட டெல்லி காவல்துறை அளித்த வாக்குமூலத்தின்படி, கொல்லப்பட்டவர்களில் 40 முஸ்லிம்களும் 13 இந்துக்களும் அடங்குவர்.

அதாவது, டெல்லி காவல்துறையின் இந்த புள்ளிவிவரங்கள், இறப்பு எண்ணிக்கையிலும் முஸ்லிம்களே அதிகமாக இருப்பதாகவும், ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான எஃப்.ஐ.ஆர்கள் இருந்தபோதிலும், குற்றம் சாட்டப்பட்டவர்களில் முஸ்லிம் சமூகத்தை சேர்ந்தவர்களே அதிகம் என்றும் கூறுகிறது. அதாவது, இந்த புள்ளிவிவரங்கள் அனைத்தும் உண்மை என்று கருத்தில் கொண்டால், டெல்லி வன்முறையில், முஸ்லிம்கள் தங்கள் சொந்த மதத்தைச் சேர்ந்தவர்களை வன்முறையில் கொன்றிருக்கிறார்களா?

இந்த கேள்வியை டெல்லி காவல்துறையின் ஒரு அதிகாரியிடம் கேட்டபோது, "நீங்கள் நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள், சட்டப்படி நாங்கள் அங்கு பதிலளிப்போம்" என்று பதில் அளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :