ஆமதாபாத் தமிழ் பள்ளி: போராட்டத்தில் குதித்த மாணவர்கள், நேரடியாக தலையிட்ட எடப்பாடி பழனிசாமி

பள்ளி

பட மூலாதாரம், @UNIINDIANEWS

ஆமதாபாதில் செயல்பட்டு வரும் தமிழ் பள்ளிக்கூடத்தை மூட வேண்டாம் என்றும் அந்தப் பள்ளிக்கூடத்திற்கான செலவுகளைத் தமிழ்நாடு அரசே ஏற்றுக்கொள்ளும் என்றும் குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி கடிதம் மூலம் தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள மணி நகரில், கடந்த 1971ஆம் ஆண்டு, தமிழ் வழியில் கற்பிக்கும் மேல்நிலைப் பள்ளி தொடங்கப்பட்டது. இந்தப் பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் குறைந்ததாகக் கூறி அந்தப் பள்ளியை அம்மாநில அரசு மூடுவதற்கு முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாயின.

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி குஜராத் மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அதில், "ஆமதாபாதில் தமிழ் வழியில் நடத்தப்பட்டு வரும் பள்ளிக்கூடம், மாணவர்களின் சேர்க்கைக் குறைவு காரணமாக திடீரென மூடப்படுவது குறித்து வருத்தமடைந்தேன். இந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டால் அந்த மாணவர்கள் தங்கள் படிப்பைத் தொடர முடியாத நிலை ஏற்படும்.

தமிழர்கள் குஜராத்தின் வளர்ச்சிக்காக உழைத்திருக்கிறார்கள். உழைத்துக் கொண்டுமிருக்கிறார்கள். குஜராத்தில் வசிக்கும் தமிழ்ச் சிறுபான்மையினரின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டும்.

ஆகவே நீங்கள் (குஜராத் முதல்வர்) தலையிட்டு, அந்தப் பள்ளிக்கூடம் தொடர்ந்து நடக்கச் செய்ய வேண்டும். அந்தப் பள்ளிக்கூடத்திற்கான முழுச் செலவையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறது. தமிழ் மொழி சிறுபான்மையினரின் கல்வி உரிமைகளை குஜராத் அரசு பாதுகாக்குமென நம்புகிறேன்" என அந்தக் கடிதத்தில் முதல்வர் பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், GK VASAN

படக்குறிப்பு,

குஜராத் முதல்வருக்கு எழுதிய கடிதத்தை ஆமதாபாத் மேற்கு தொகுதி எம்.பி கிரித் சோலங்கியிடம் அளிக்கும் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன்

இந்த நிலையில், டெல்லியில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சரும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே. வாசன், குஜராத் முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் எழுதியிருக்கும் கடிதத்தை மேற்கோள்காட்டிய அவர், அந்த கோரிக்கையுடன் தாமும் ஒத்துப்போவதாகக் கூறி பள்ளியை மீண்டும் திறக்க வேண்டும் என்று வாசன் கோரியிருக்கிறார்.

இந்த கடிதத்தை ஆமதாபாத் மேற்கு தொகுதி மக்களவை பாரதிய ஜனதா கட்சி உறுப்பினர் கிரித் சோலங்கியை சந்தித்து அவர் மூலமாக மாநில முதல்வர் விஜய் ரூபானியிடம் வலியுறுத்தும்படியும் வாசன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இதே விவகாரம் தொடர்பாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ், குஜராத்தில் மூடப்பட்ட தமிழ் பள்ளியை மீண்டும் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோதியை வலியுறுத்தி தமது டிவிட்டர் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

என்ன நடந்தது?

முன்னதாக, மாணவர் சேர்க்கை குறைவு எனக்கூறி அந்த பள்ளி கடந்த ஆகஸ்ட் 11ஆம் தேதி திடீரென மூடப்பட்டது.

அது தொடர்பாக மாவட்ட கல்வி அதிகாரி ஆர்.சி. படேல் பிறப்பித்த உத்தரவில், கல்வித்துறை விதிகளின்படி பள்ளியை மூட நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளார். அந்த பள்ளியில் 9 முதல் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்கள் வெறும் 31 பேர் மட்டுமே என்று தெரிய வந்ததால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கல்வித்துறை கூறியுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் 27ஆம் தேதி கல்வித்துறை நடத்திய விசாரணையின்போது போதிய மாணவர் சேர்க்கையை இல்லை என்றும் அதை அதிகரித்தால் பள்ளி செயல்பட தொடரலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால், பின்னர் ஏற்பட்ட கொரோனா பெருந்தொற்று பரவல் கட்டுப்பாடுகள் காரணமாக பள்ளி மூடப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடைசியாக கடந்த ஜூலை 17ஆம் தேதி இந்த விவகாரம் குறித்து கல்வித்துறை விசாரணை நடத்தியதாகவும் அப்போது மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை சுட்டிக்காட்டியதாகவும் தெரிகிறது. இந்தப்பின்னணியிலேயே அந்த பள்ளியை திடீரென்று மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு,

போராட்டத்தில் ஈடுபடும் குஜராத் தமிழ் பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள்

ஆனால், திடீரென பள்ளியை பாதி கல்வியாண்டில் மூடினால், அதில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர் அச்சம் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்பு ஐநூறு பேருக்கும் அதிகமானோர் படித்த மாணவர்களில் தற்போது வெறும் 31 பேர் மட்டுமே இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்த தொழிலாளர்களின் பிள்ளைகள். அவர்கள் விருப்ப பாடமாக தமிழுக்கு பதிலாக ஆங்கிலத்தை தேர்வு செய்யவே ஆர்வம் காட்டியதாக உள்ளூர் நாளிதழ் கூறுகிறது. இதனால், தமிழ் வழி கல்வியை நிறுத்த திட்டமிடப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நடவடிக்கையை எதிர்க்கும் வகையில் பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :