"பாபர் மசூதி இடிப்பு திட்டமிடப்பட்ட சதிச்செயல்தான் என்பதில் உறுதியாக இருக்கிறேன்" - நீதிபதி லிபரஹான்

நீதிபதி லிபரான்
படக்குறிப்பு,

நீதிபதி லிபரஹான்

பாபர் மசூதி இடிக்கப்பட்ட வழக்கில் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட 32 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

விடுவிக்கப்பட்ட அனைவரும்தான் பாபர் மசூதி இடிப்புக்கு முக்கிய காரணம் என முன்னாள் நீதிபதி லிபரஹான் கமிஷன் அறிக்கை கூறுகிறது.

இந்த தீர்ப்பு குறித்து நீதிபதி லிபரஹானிடம் பிபிசி பேசியது.

குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்படுகிறார்கள் என்ற தீர்ப்பால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று தெரிவித்த அவர், நான் என் கடமையை செய்தேன், இன்றும் என் அறிக்கையில் நான் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

"என் விசாரணையில் பாபர் மசூதி இடிப்பு முன்கூட்டியே திட்டமிடப்பட்ட சதித்திட்டம் என்று தெரிய வந்தது. இன்றும் நான் அதையே நம்புகிறேன்" என்று ஓய்வு பெற்ற நீதிபதி லிபரஹான் பிபிசி பஞ்சாபி சேவையிடம் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றத்திற்கு தன் கருத்தைக்கூற உரிமையும் அதிகாரமும் இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார்.

சிபிஐ விசாரணை குறித்து தன்னால் எந்த கருத்தும் கூற முடியாது என்றும் லிபரஹான் தெரிவித்தார்.

ஆனால், "என் அறிக்கை சரியானது, நியாயமானது, எந்த அச்சமும் இல்லாமல் எழுதியது என்பதில் உறுதியாக இருக்கிறேன்" என்றார் அவர்.

லிபரஹான் கமிஷன் என்பது என்ன?

1992ஆம் ஆண்டு மசூதி இடிக்கப்பட்ட 10 நாட்கள் கழித்து, அதாவது டிசம்பர் 16ஆம் தேதி அப்போதைய பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர்நீதிமன்றத்தின் நீதிபதியாக இருந்த எம்.எஸ். லிபரஹான், இந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்தி அறிக்கையை 3 மாதங்களுக்குள் சமர்பிக்க வேண்டும் என்று அப்போது இருந்து இந்திய உள்துறை அமைச்சர் மாதவ் கொட்போலே உத்தரவிட்டிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images

பாபர் மசூதி இடிப்பு நிகழ காரணமாக இருந்தது எது, அப்போது உத்தர பிரதேச முதல்வரின் பங்கு என்ன, அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் பங்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டதா, உள்ளிட்டவை பற்றி விசாரிக்கவே இந்த ஒருநபர் ஆணையம் அமைக்கப்பட்டது.

ஆனால், 48 முறை கால அவகாசம் வழங்கப்பட்டு 2009ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதிதான் பிரதமர் மன்மோகன் சிங்கிடம் இந்த அறிக்கை சமர்பிக்கப்பட்டது. இந்திய வரலாற்றில் மிக நீண்ட கால விசாரணையாகவும், அதிக செலவு மிக்க (எட்டு கோடி ரூபாய்) விசாரணையாகவும் இது குறிப்பிடப்படுகிறது.

இதில் முன்னாள் பிரதமர் பி.வி நரசிம்ம ராவ், பாஜக தலைவர்களான எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் (சம்பவம் நடந்த போது உ.பி முதல்வர்), விஷ்வ இந்து பரிஷத் தலைவர் அஷோக் சிங்கல், காங்கிரஸ் கட்சியை சேர்ந்த அர்ஜுன் சிங், முன்னாள் உ.பி முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் ஆகியோர் விசாரிக்கப்பட்டனர்.

998 பக்க அறிக்கையின் முக்கிய அம்சங்கள்

பட மூலாதாரம், Getty Images

  • பாபர் மசூதி இடிப்பு சம்பவம் தேசிய மற்றும் உள்ளூர் தலைவர்கள் முன்னிலையிலேயே நடந்தது.
  • ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங் தளம், விஎச்பி, பாஜக மற்றும் சிவசேனா கட்சித் தொண்டர்களும், அதன் தலைவர்களும் அங்கு இருந்தனர். அவர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பாபர் மசூதியை இடிக்க ஆதரவளித்தனர்.
  • நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்த அந்த நிகழ்வு, மாநில அரசு ஊக்குவிப்பின் பேரிலேயே நடந்தது.
  • இந்த தாக்குதல் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. இதை செய்ய வேண்டும் என முக்கிய தலைவர்கள் வழிகாட்டுதல்களின் பேரில் இதற்கு ஆர்.எஸ்.எஸ் சிறப்புக்குழு ஒன்று நியமிக்கப்பட்டது.
  • அப்போதைய உ.பி முதல்வர் கல்யாண் சிங்கின் ஆதரவு இல்லாமல் பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்திருக்க முடியாது. இதனை தடுக்க கல்யாண் சிங் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
  • அயோத்தி இயக்கம் முழுவதற்கும் காரணம் சங் பரிவார். அத்வானி, வாஜ்பேயி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோருக்கு சங் பரிவார் குறித்து தெரியாமல் இருக்க முடியாது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: