'ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு' திட்டம் தமிழகத்தில் இன்று அமலாகிறது - 10 முக்கிய தகவல்கள்

தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

இந்தியா முழுவதும் ஒரே ரேஷன் கார்டை பயன்படுத்தக்கூடிய திட்டம் தமிழகத்தில் இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.

மத்திய அரசு அறிமுகப்படுத்திய திட்டத்திற்கு அப்போது ஆதரவும் எதிர்ப்பும் இருந்தது.

இந்நிலையில் இன்று அமலாகும் இந்தத் திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டிய சில அம்சங்கள்.

  • 2013ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட இந்திய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • நாடு முழுவதுமுள்ள 5.4 லட்சம் நியாய விலைக் கடைகளின் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்தின்படி, ஒரு குடும்பம் ஒரு ரேஷன் அட்டையின் மூலம் நாடு முழுவதும் அரசு குறைந்த விலையில் வழங்கும் உணவு தானியங்களைப் பெற முடியும்.
  • இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களை மனதில் கொண்டு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • தற்போது இந்தியாவில் ஆந்திரப்பிரதேசம், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இந்தத் திட்டம் அமலில் இருக்கிறது. இந்த மாநிலங்களைச் சேர்ந்த ஒருவர், இந்த நான்கு மாநிலங்களில் அமைந்துள்ள நியாயவிலைக்கடை எதிலும் பொருட்களைப் பெறலாம்.
  • இந்தத் திட்டத்தின் கீழ்வரும் ஒரு மாநிலத்தின் பொது விநியோகத் திட்ட பயனாளர் தொகுப்பு, மையப்படுத்தப்பட்ட ஒரு சர்வரில் இணைக்கப்படும். அதனால், ஒரே பயனாளி இரு மாநிலங்களில் ரேஷன் அட்டையைப் பெற முடியாது.

பட மூலாதாரம், Getty Images

  • ஒரு மாநிலத்தில் பதிவுசெய்துள்ள பயனாளி, மற்றொரு மாநிலத்தில் உணவுப் பொருட்களைப் பெறும்போது, மத்திய அரசின் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் மட்டுமே உணவுப் பொருட்களைப் பெற முடியும். அதாவது அரிசி கிலோ மூன்று ரூபாய்க்கும் கோதுமை கிலோ ஐந்து ரூபாய்க்கும் பெற முடியும். அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில மக்களுக்கு வழங்கும் நலத்திட்டங்களையோ, இலவச உணவு தானியங்களையோ பெற முடியாது.
  • அந்தந்த மாநிலங்களில் வசிப்பவர்கள், வழக்கம்போல உணவுப் பொருட்களைப் பெறலாம். தங்களுக்கான ரேஷன் பொருளை மாநிலத்தில் உள்ள எந்த ஒரு ரேஷன் கடையிலும் பெற்றுக்கொள்ளலாம்.
  • சில சவால்களும் இருக்கின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ரேஷன் கடைகளில் பிஓஎஸ் (Point of Sale) எந்திரம் மிக அவசியம். இந்தியாவில் தற்போது 77 சதவீதக் கடைகளில் மட்டுமே இந்த எந்திரம் இருக்கிறது. புலம் பெயரும் தொழிலாளர்களை அதிகம் கொண்ட பிஹார், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் இதில் மிகவும் பின்தங்கியுள்ளன.
  • அதேபோல, எந்த காலகட்டத்தில் எங்கிருந்து தொழிலாளர்கள் எங்கே புலம்பெயர்வார்கள் என்பதை கண்காணித்து அந்தப் பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகளில் உணவு தானியங்களைக் கிடைக்கச் செய்ய வேண்டும். அதற்கேற்றபடி இந்திய உணவுக் கழகம் மற்றும் மாநில உணவுக் கழகங்களின் செயல்பாடுகள் தீவிரமாக வேண்டியிருக்கும்.
  • இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதற்கு ரேஷன் கார்டுகள் குடும்பத் தலைவரின் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட வேண்டும். மொத்தமுள்ள 23 கோடி அட்டைகளில் இதுவரை 85 சதவீதம் அட்டைகளே இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: