பாபர் மசூதி இடிப்பு வழக்கில் சி.பி.ஐ. செயல்பட்டவிதம் சரியா?

  • கே. ரகோத்தமன்
  • முன்னாள் சி.பி.ஐ அதிகாரி
ராம மந்திர் சிலை

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் எஃப்.பி.ஐ. இருப்பதைப்போல இந்தியாவிலும் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டுமென 1963ல் சந்தானம் கமிட்டி ஒரு பரிந்துரையை வழங்கியது. அதன் பிறகு ஒரு நாடாளுமன்றத் தீர்மானத்தின் பேரில் சி.பி.ஐ. என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. அந்த அமைப்பு 1946ஆம் ஆண்டின் தில்லி சிறப்பு காவல்துறை சட்டத்தின் கீழேயே செயல்பட்டுவருகிறது.

இந்த அமைப்பைப் பொறுத்தவரை மத்திய அரசு சம்பந்தப்பட்ட வழக்குகளை நேரடியாக அது தலையிட்டு விசாரிக்க முடியும். ஆனால், மாநிலத்தில் நடக்கும் குற்றங்கள் குறித்து மாநில அரசுகளின் அனுமதியோடுதான் செயல்பட முடியும்.

பாபர் மசூதி விவகாரம் சட்டம் - ஒழுங்கு தொடர்பானது என்பதால் மாநில அரசால் விசாரிக்கக்கூடிய விவகாரம். ஆனால், இந்த வழக்கின் முக்கியத்துவம் கருதி, நரசிம்மராவ் அரசு சி.பி.ஐயிடம் ஒப்படைத்தது.

இந்த வழக்கில் கிட்டத்தட்ட ஒரு வருடம் விசாரணை நடந்து, 1994ல் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது. இதற்கிடையில், இந்த விவகாரத்தை விசாரிக்க நீதிபதி லிபரான் தலைமையில் ஒரு கமிஷன் அமைக்கப்பட்டது. அந்த கமிஷன், இதில் 68 பேர் சம்பந்தப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டியது. இந்த வழக்கில் சி.பி.ஐ. முதலில் தாக்கல்செய்த குற்றப்பத்திரிகையில் அத்வானி உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர்.

அதனை எதிர்த்து அத்வானி முதலானோர் வழக்குத் தொடுத்தனர். அந்த வழக்கை விசாரித்த அலகாபாத் நீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் இதில் சம்பந்தப்பட்டிருப்பதாகத் தெரியவில்லையென்று கூறி, அவர்களது பெயர்களை குற்றப்பத்திரிகையிலிருந்து நீக்கச் சொன்னது. ஆகவே, அவர்கள் பெயரை நீக்கிவிட்டு விசாரணை துவங்கியது.

ஆனால், அத்வானி உள்ளிட்டோர் பெயர் நீக்கப்பட்ட விவகாரத்தை உச்ச நீதிமன்றத்திற்குக் கொண்டுசென்றது சி.பி.ஐ. அதில், அத்வானி உள்ளிட்டோர் பெயரையும் சேர்க்கச் சொன்ன உச்ச நீதிமன்றம் வழக்கை முடிக்க காலக்கெடு விதித்தது. அதன்படியே தற்போது வழக்கு முடிந்து தீர்ப்பு வெளிவந்துள்ளது.

சி.பி.ஐயைப் பொறத்தவரை ஒரு வழக்கைப் பதிவுசெய்த பிறகு, புலனாய்வு அதிகாரியின் முக்கியப் பணியே தரவுகளைச் சேகரிப்பதுதான். அதற்குப் பிறகு, ஆவணங்களைச் சேகரிப்பார்கள், சாட்சிகளிடம் வாக்குமூலங்களைப் பெறுவார்கள். எம். நாராயணன்தான் இந்த வழக்கில் முதன்மை புலனாய்வு அதிகாரி. அவர் மிகத் திறமையானவர். மிகக் குறைந்த காலத்தில் ஆதாரங்களைத் திரட்டி, குற்றப்பத்திரிகையை அவர் தாக்கல்செய்தார்.

சி.பி.ஐயில் சட்டப் பிரிவு ஒன்று உண்டு. அவர்கள்தான் சேகரிக்கப்பட்ட ஆவணங்களைப் படிப்பார்கள். அதன்படி, குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது போதுமான முகாந்திரம் இருக்கிறது என சான்றளித்தால்தான், வழக்குத் தொடர்வதற்கு மேலதிகாரி அனுமதிப்பார். சட்ட அதிகாரிகள், போதுமான ஆதாரம் இல்லையென்றால், ஒருவரை வழக்கில் சேர்க்க மாட்டோம். அல்லது வழக்கை கைவிட்டுவிடுவோம். ஆகவே, சி.பி.ஐயைப் பொறுத்தவரை தகுந்த ஆதாரமுள்ள வழக்குகளை மட்டும்தான் நீதிமன்றத்திற்கு கொண்டுசெல்வோம். அதுதான் சி.பி.ஐயின் தனித்தன்மை.

குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யும்போது, சாட்சிகளின் பட்டியல், ஆவணங்களின் பட்டியல், பொருட்களின் பட்டியல் ஆகியவற்றை சமர்ப்பிப்போம். இந்த வழக்கில் இவையெல்லாம் 1994லேயே நடந்துவிட்டது. ஆகவே, சி.பி.ஐ. அரசியல் ரீதியாக செயல்பட்டதாகச் சொல்ல முடியாது.

சி.பி.ஐக்கென சட்ட ஆலோசகர்கள், வழக்காடுவதற்கென்று சிறந்த வழக்கறிஞர்கள் உண்டு. வழக்கு நடக்கும்போது சட்ட ஆலோசகர்கள் தொடர்ந்து தங்கள் உதவியைத் தந்துகொண்டிருப்பார்கள். பெரிய வழக்குகளுக்கு சிறப்பு சி.பி.ஐ. தரப்பு வழக்கறிஞர்களை நியமிப்போம். இந்த வழக்கிலும் ஒரு மூத்த குற்றவியல் வழக்கறிஞர் அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

ஆனால், ஒரு வழக்கை நீர்த்துப்போகச் செய்ய வேண்டுமென நினைத்தால் இந்த அரசுத் தரப்பு சிறப்பு வழக்கறிஞரை மாற்றலாம். அப்படி வழக்கறிஞர் மாற்றப்பட்டாலும் சாட்சியங்களை வைத்துத்தான் தீர்ப்புகள் தரப்பட வேண்டும். இந்த வழக்கைப் பொறுத்தவரை, போதுமான ஆதாரங்கள் சி.பி.ஐயால் நீதிமன்றத்தில் தாக்கல்செய்யப்பட்டன. ஆனால், அவை போதாது என்று சொல்லிவிட்டது நீதிமன்றம்.

சி.பி.ஐ. வழக்குகளைப் பொறுத்தவரை, ஒரு வழக்கில், தான் கருதியதைவிட குறைந்த தண்டனை கிடைத்தால்கூட சி.பி.ஐ மேல் முறையீட்டிற்குச் செல்லலாம். மூன்று மாதத்திற்குள் அந்த மேல் முறையீட்டைச் செய்ய வேண்டும். சி.பி.ஐ. மேல் முறையீடு செய்வார்கள் என நம்புகிறேன். அப்படி மேல் முறையீடு செய்யப்பட்டாலும் வழக்கு அலகாபாத் உயர்நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படும் என்பதையும் கவனத்தில்கொள்ள வேண்டும்.

கே. ரகோத்தமன், சி.பி.ஐயின் முன்னாள் அதிகாரி. அவர் சொல்லக்கேட்டு எழுதியவர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: