பாபர் மசூதி இடிப்பு வழக்கு: "நீதியின் மாயை, விசாரணையின் போக்கு" - வல்லுநர்கள் எழுப்பும் கேள்விகள்

  • திவ்யா ஆர்யா
  • பிபிசி செய்தியாளர்
முஸ்லிம்கள் போராட்டம்

பட மூலாதாரம், Getty Images

அயோத்தியில், 1992ஆம் ஆண்டில் பாபர் மசூதி இடிக்கபட்ட சதித்திட்டத்தில் 'உறுதியான சான்றுகள் இல்லாதது' காரணமாக, வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர். நீதிபதிகள், நீதித்துறை மற்றும் நீதித்துறை செயல்முறைக்கு இது ஒரு மோசமான நாள் என்று விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் சிறப்பு சிபிஐ நீதிமன்றம் விடுவித்துள்ளது.பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் கல்யாண் சிங், பாஜக தேசிய துணை தலைவர் உமா பாரதி, விஸ்வ இந்து பரிஷத்தின் சாத்வி ரித்தம்பரா உள்ளிட்ட 32 குற்றவாளிகளின் பங்கை நீதிபதி சுரேந்திர குமார் யாதவ் தீர்மானிக்கும் போது, "இந்த சம்பவம் முன்கூட்டியே திட்டமிடப்படவில்லை" என்றார்.28 ஆண்டுகள் நீடித்த நீதிமன்ற விசாரணை காலத்தின் போது,குற்றம் சாட்டப்பட்ட 17 பேர் உயிரிழந்தனர்.

இந்த முடிவு ஏமாற்றமளிக்கிறது என்றும் இந்தியாவின் குற்றவியல் நீதி முறைக்கு ஒரு அடியாகும் என்றும் ஐதராபாத்தில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஃபைசான் முஸ்தபா பிபிசியிடம் தெரிவித்தார்.

பட மூலாதாரம், FACEBOOK / FAIZAN MUSTAFA

"பாஜக, சிவசேனா தலைவர்கள் அப்போது பேசிய உரைகள் உள்ளன, அப்போது கூட்டப்பட்ட மத கூட்டத்தில் , எழுப்பிய கோஷங்களை கேட்கலாம், அன்று வந்த கர சேவகர்கள் கோடரி, மண்வெட்டி மற்றும் கயிறுகளை வைத்திருந்தனர் , இவையெல்லாம், அங்கு ஒரு சதி நடந்ததை தெளிவாகக் காட்டுகின்றன" என்றார் .

1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 ஆம் தேதி, ராம ஜென்மபூமி இயக்கத்தின் உச்சத்தில், அயோத்தியில் உள்ள பாபர் மசூதி ஒரு கும்பலால் இடிக்கப்பட்டது, அதன் பின்னர் இந்த சதி குற்றம் குறித்து விசாரிக்க வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அதன் பின்னர்,நாடு முழுவதும் நடந்த கலவரத்தில், 2,000 பேர் இறந்தனர், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர்.

ராம ஜென்ம பூமி-பாபர் மசூதி நிலத் தகராறு வழக்கில் சுன்னி வக்ஃபு வாரியத்தின் வழக்கறிஞராக இருந்த ஜப்ரியாப் ஜிலானி, பிபிசி செய்தியாளர் சல்மான் ராவியிடம் பேசியபோது, தீர்ப்பு தவறானது என்றும் சட்டத்திற்கு எதிரானது என்றும்,அதற்கு எதிராக மேல்முறையீடு குறிப்பிட்ட காலத்திற்குள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

"ஐபிஎஸ் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் மூத்த பத்திரிகையாளர்கள் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளனர், அவர்களின் அறிக்கைகள் தவறானவையா , அப்படியானால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்," என்று ஜிலானி கூறினார்.

சிபிஐ க்கு கேள்வி

ஒரு ஜனநாயகத்தில் ஒரு மத இடத்தை இடிக்கும் இவ்வளவு பெரிய குற்றத்தில், யாருமே குற்றவாளி இல்லை என்று சொல்வது, நாட்டின் சட்ட அமைப்புக்கு நல்லதல்ல என்று துணைவேந்தர் முஸ்தபா தெரிவித்தார்.

"சிபிஐ தனது வேலையை சரியாக செய்யவில்லை என்று தெரிகிறது,ஏனென்றால் நடந்தது எல்லாவற்றையும் நாம் தொலைக்காட்சியில் பார்த்தேன், இவ்வளவு ஆடியோ, வீடியோ சான்றுகள் மற்றும் 350 க்கும் மேற்பட்ட நேரில் கண்ட சாட்சிகளின் அறிக்கைகள் இருந்தபோதிலும், உறுதியான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்றால், அது புரியவில்லை" என அவர் கூறினார்.

நாட்டின் மிக உயர்ந்த விசாரணை அமைப்பு சிபிஐ, தீர்ப்பு வந்த பின்,சிபிஐ இன்னும் பதிலளிக்கவில்லை. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய செய்தித் தொடர்பாளர் ஜாஃபர் இஸ்லாம் சிபிஐயின் தன்னாட்சி குறித்த கேள்விகளை தவறு என்று கூறியுள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK / @ SYEDZAFARBJP

படக்குறிப்பு,

பாஜக செய்தி தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம்

பிபிசியிடம் பேசிய அவர், "நாங்கள் விசாரணையில் தலையிடவில்லை,சிபிஐ சுயமாக செயல்படும் ஒரு நிறுவனம், காங்கிரஸ் ஆட்சிகளின்போது சேகரிக்கப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் செயல்பட்டது" என்றார்.

பேராசிரியர் முஸ்தபாவின், "விசாரணை நிறுவனமும் வழக்கு விசாரணையும் தனித்தனியாகவும் தன்னாட்சி பெற்றதாகவும் இருக்க வேண்டும்," என்றார்.

"இந்திய தண்டனைச் சட்டம் 120 பி யின் கீழ், இரண்டு நபர்களுக்கு இடையில் பேசிக் கொள்வதை சதி திட்டம் தீட்டுவதாக, நிரூபிக்க முடியும், எனவே 32 பேரில், 32 பேருக்கும் எதிராக சதிக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை என்று கூறுவது ஆச்சரியமாக இருக்கிறது" என்று அவர் கூறினார்.

"நீதிமன்றத்தில் உள்ள ஆதாரங்களின் அடிப்படையில் உண்மை வெளிவந்தது, முன்னதாக, முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் அரசின் போது பாஜக தலைவர்களை சிக்க வைப்பதற்காக, இந்த இடிப்பு குறித்து ஒரு மாயை உருவாக்கப்பட்டது." என்கிறார் பாஜக செய்தித் தொடர்பாளர் ஜாபர் இஸ்லாம்.

1992 டிசம்பரில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பின்னர், அதை விசாரிக்க மத்திய அரசு ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி லிபர்ஹானிடம் இந்த பொறுப்பை ஒப்படைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

17 ஆண்டுகளுக்குப் பிறகு, லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையை சமர்ப்பித்தது, அதில் உமா பாரதி, சாத்வி ரித்தாம்பரா மற்றும் விஜயராஜே சிந்தியா உட்பட 68 பேர் வகுப்புவாத உணர்வுகளைத் தூண்டிய குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்டது.

இதை தவறு என்று கூறிய முன்னாள் மத்திய அமைச்சர் உமா பாரதி,மசூதியை இடிப்பதில் தாம் "தார்மீக பொறுப்பை" மட்டுமே எடுத்துக் கொள்வதாகவும், "ராம ஜன்மபூமி இயக்கத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமைப்படுவதாகவும்"அப்போது

தெரிவித்திருந்தார்.கொரோனா பாசிட்டிவ் காரணமாக உமா பாரதி தற்போது ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முஸ்லிம் சமுதாயத்தின் மீது தாக்கம்

பட மூலாதாரம், PRAKASH SINGH / AFP VIA GETTY IMAGES

மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பிபிசியிடம் பேசுகையில்,"இந்த தீர்ப்பு நீதித்துறையில் நீதி கிடைக்காது என்ற நம்பிக்கைக்கு வழிவகுக்கும்,நியாயம் கிடைக்கும் என்ற மாயையை மட்டுமே ஏற்படுத்தும்" என்று கூறினார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வருவதற்கு முன்பே,நிலத்தின் உரிமை குறித்த தீர்ப்பு வெளிவந்து விட்டது , அதுவும் மசூதியை இடித்ததாக குற்றம் சாட்டப்பட்ட கட்சிக்கு ஆதரவாக,அதனால் இப்படி நடக்கும் என்பது எதிர்பார்த்ததுதான் என்றார்.

பாஜக செய்தித் தொடர்பாளர் ஜாஃபர் இஸ்லாம் இந்த சிந்தனைக்கு உடன்படவில்லை, தனது கட்சி ஒருபோதும் மசூதியை உடைக்க விரும்பவில்லை, கோவிலைக் கட்ட மட்டுமே விரும்பியது, இது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், 2019 நவம்பரில், இந்து தரப்பினரின் நலனுக்காக ராம்ஜன்மபூமி-பாபர் மசூதி நிலத்தின் உரிமையை உச்சநீதிமன்றம் வழங்கியதுடன், முஸ்லிம் தரப்பினருக்கு ஐந்து ஏக்கர் நிலத்தை ஒரு தனி இடத்தில் மசூதி கட்டுவதற்கு வழங்கியது என்றும் கூறுகிறார் .

அந்த தீர்ப்பில்,"பாப்ரி மஸ்ஜித் இடிக்கப்படுவது உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது மற்றும் சட்டத்திற்கு எதிரானது" என்று உச்ச நீதிமன்றம் கூறியது. தீர்ப்பில் "முஸ்லீம் சமூகத்திற்கு அவர்கள் வழிபாட்டுத் தலத்தை,சட்டவிரோதமாக இடித்ததற்கு இழப்பீடு வழங்க வேண்டும்" என்றும் கூறப்பட்டது.

பிரசாந்த் பூஷணின், "மசூதி இடிப்பு குறித்த முடிவு முஸ்லிம் சமூகத்தினரிடையே வெறுப்பை அதிகரிக்கும், ஏனெனில் நிலத்தின் உரிமை மற்றும் மசூதியை இடிப்பது ஆகிய இரண்டு விஷயங்களிலும் தீர்ப்பு தமக்கு சாதகமாக இல்லை என கருதுவார்கள்" என்கிறார்.

"முஸ்லிம் சமூகத்திற்கு இரண்டாம் தர குடிமகன் என்று நிலைமை மாறி வருகிறது, இந்து தேசத்தை உருவாக்க முயற்சிகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்கள் முன் தற்போது இன்னும் அதிக சவால்கள் உள்ளன" என்றும் அவர் கூறினார்.

ஜாஃபர் இஸ்லாம், இனி இது முஸ்லிம் சமூகத்திற்கு ஒரு பிரச்சனையாக இருக்காது,"அவர்கள் அதை விட்டுவிட்டு முன்னேற விரும்புகிறார்கள், ஆனால் சில முஸ்லிம் தலைவர்கள இதை அரசியல்மயமாக்குவதில் ஈடுபட்டுள்ளனர்," என்றார்.

இந்த அயோத்தி வழக்குக்குப் பிறகு,வருங்காலத்தில் பாஜக எந்த ஒரு மத இடத்தின் மீதும் விவாதத்தை எழுப்பாது என்றும் அவர் உறுதியளித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: