ராகுல், பிரியங்கா விடுவிப்பு: ஹாத்ரஸ் பெண்ணின் குடும்பத்தை எச்சரித்தாரா ஆட்சியர் - என்ன நடந்தது?

ராகுல்

பட மூலாதாரம், AICC

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸை சேர்ந்த 19 வயது பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி பின்னர் உயிரிழந்தாக கூறப்படும் சம்பவத்தில், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்காக நீதி கேட்டு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா வாத்ரா உள்ளிட்ட அக்கட்சித் தலைவர்களை சுமார் ஒன்றரை மணி நேரம் மாநில காவல்துறையினர் தடுத்து வைத்து பிறகு விடுவித்தனர்.

அவர்கள் மீது பெருந்தொற்று தடுப்பு விதிகளை மீறி கிரேட்டர் நொய்டாவில் இருந்து ஹாத்ரஸ் நோக்கி செல்ல முயன்றதாக உத்தர பிரதேச காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளனர்.

இதையடுத்து ராகுல் காந்தி வியாழக்கிழமை இரவு வெளியிட்ட டிவிட்டர் பக்கத்தில், இன்னும் எத்தனை ஆதிவாசி வறியநிலை மக்களின் குரல்களை நசுக்குவீர்கள், எவ்வளவு மகள்களை ரகசியமாக எரிக்கப்போகிறீர்கள், இந்த நாட்டின் குரலை ஒடுக்க உங்களால் முடியாது என்று கூறி ஹாத்ரஸ் பெண் எரிக்கப்பட்ட நிகழ்வை மேற்கோள்காட்டி ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, டெல்லி திரும்பிய பிரியங்கா காந்தி தமது டிவிட்டர் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு ஆளானதாக கூறப்பட்ட பெண்ணின் குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் பேசும் காணொளியை வெளியிட்டுள்ளார்.

அதில் அந்த ஆட்சியர், உங்கள் மகளுடைய விவகாரத்தில் ஏன் வெளியே உள்ளவர்களிடம் பேசுகிறீர்கள். ஊடகங்கள் நாளை சென்று விடும். நாங்கள் தான் இங்கு இருப்போம். எங்களை நம்புங்கள். வேறு யாருடனும் எதுவும் பேசக்கூடாது என்று கூறுகிறார்.

இதை சுட்டிக்காட்டியுள்ள பிரியங்கா காந்தி, உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தை மாவட்ட ஆட்சியர் மிரட்டுகிறார் என்று கூறியுள்ளார்.

முன்னதாக, வியாழக்கிழமை மாலையில், கிரேட்டர் நொய்டாவில் உள்ள புத் இன்டர்நேஷனல் சர்க்யூட் என்ற கார் பந்தய அரங்கின் விருந்தினர் இல்லத்துக்கு அவர்களை கொண்டு சென்ற காவல்துறையினர் பிறகு பலத்த பாதுகாப்புடன் அவர்களை டெல்லிக்கு அழைத்துச் சென்றனர்.

இதையடுத்து அவர்கள் ஹாத்ரஸ் மாவட்டத்தில் கூட்டுப்பாலியலுக்கு ஆளாகி உயிரிழந்ததாக கூறப்படும் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்க மீண்டும் முற்படுவார்களா என்பது தெளிவாகவில்லை.

முன்னதாக, டெல்லியில் இருந்து ஹாத்ரஸ் நோக்கிச் சென்ற ராகுல், பிரியங்கா உள்ளிட்டோரை யமுனை விரைவுச்சாலையில் இன்று பிற்பகல் 3 மணியளவில் வழிமறித்த காவல்துறையினர், கூட்டமாக எவரும் முன்னேறக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்தனர்.

மாவட்ட நிர்வாகத்தால் இந்திய தண்டனைச் சட்டத்தின் 188ஆவது பிரிவின்கீழ் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதாக அவர்கள் விளக்கம் அளித்தனர்.

இது தொடர்பாக ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், "நெருங்கிய உறவுகள் தனித்து விடப்படவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு இரங்கல் தெரிவிக்கக் கூட உத்தர பிரதேசத்தில் ஆளும் ஆட்சி விரும்பவில்லை. எங்களை பார்த்து அச்சப்பட வேண்டாம் முதலமைச்சரே" என்று கூறியுள்ளார்.

தமது டிவிட்டர் பக்கத்தில் பிரியங்கா காந்தி, ஹாத்ரஸ் நோக்கி நாங்கள் முன்னேறிச் செல்லாதவாறு நிறுத்திய காவல்துறையினர் தடியடியும் செய்தனர். பல காங்கிரஸ் தொண்டர்கள் அதில் காயம் அடைந்தனர். ஹாத்ரஸ் தலித் மகளை காக்க இந்த தடையை காவல்துறையினர் பயன்படுத்தியிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி மேற்கொண்டு செல்ல அனுமதிக்க முடியாது என்று அங்கு வந்த காவல்துறையினர் உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, நானும் பிரியங்கா காந்தியும் மட்டும் செல்வதை உங்களுடைய சட்டம் அனுமதிக்கிறதா? என்று ராகுல் கேள்வி எழுப்பினார்.

ஆனால், இது உங்களை அனுமதிக்கும் விவகாரம் மட்டுமல்ல, உங்களுடைய பாதுகாப்பு தொடர்புடைய பிரச்னை. அதனால் உங்களை அனுமதிக்க முடியாது. உங்களை தடுத்து நிறுத்துவதை தவிர எங்களுக்கு வேறு வழயில்லை. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுக்கு நீங்கள் கட்டுப்பட வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து அங்கு கூட்ட நெரிசல் அதிகமான நிலையில், திடீரென்று ராகுல் காந்தி கீழே விழுந்தார். அவரை அங்கிருந்த காவல்துறையினர் யாரேனும் தள்ளி விட்டார்களா என தெரியவில்லை.

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர்களை அங்கிருந்து வேறு வாகனத்தில் ஏற்றி காவல்துறையினர் அழைத்துச் சென்றனர். சட்டவிதிகளை மீறியதால் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்த உயரதிகாரிகள் தெரிவித்தனர்.

இதற்கிடையே, காங்கிரஸ் தலைவர்கள் ராகுல், பிரியங்கா உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்படுவதைக் கண்டித்து காங்கிரஸ் தொண்டர்கள் பெருமளவில் திரண்டு உத்தர பிரதேசத்தில் ஆளும் அரசுக்கு எதிராக கோஷிட்டு வருகிறார்கள்.

அங்கு போக்குவரத்தை முடக்கும் வகையில் சாலையில் நின்ற பல தொண்டர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடத்தி வழியை ஏற்படுத்தி வருகிறார்கள். அதையும் மீறி அங்கு கூடியிருந்தவர்கள், போலீஸ் பேருந்துகளில் ஏற்றி கொண்டு செல்லப்பட்டனர்.

தலைவர்கள் கண்டனம்

உத்தர பிரதேச காவல்துறைக்கு இந்த நாட்டின் சட்டம் எதுவும் பொருந்தாது என்பது போல அதுவே ஒரு சட்டத்தை கடைப்பிடித்து செயல்படுகிறது. மிகவும் கொடூரமான குற்றச்செயலில் உயிரிழந்தவரின் குடும்பத்தை பார்க்க அரசியல் தலைவர்கள் செல்வதில் என்ன தவறு என்று இந்திய உள்துறை முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தனது டிவிட்டர் பக்கத்தில், உத்தர பிரதேச மாநிலத்தின் எம்.பி ஆன ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான பிரியங்கா காந்தியும் அந்த மாநிலத்தில் பாதுகாப்பாக இல்லை. அங்குள்ள தலித் சிறுமிகள் பாதுகாப்பாக இல்லை. எப்படி நமது விவசாயிகளும் தொழிலாளர்களும் பாதுகாப்பாக இருப்பார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

ராகுல் காந்தியை உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் மிக மோசமாக நடத்தியிருப்பது அங்குள்ள அராஜ ஆட்சியை காட்டுகிறது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

ராகுல் காந்தி தடுத்து வைக்கப்பட்டுள்ள செயலை மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கண்டித்துள்ளார். உத்தர பிரதேசத்தின் செயல் அவகமானகாரமானது என்று தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளார்.

உ.பி. அமைச்சர் என்ன கூறுகிறார்?

ஹாத்ரஸ் கூட்டுப்பாலியல் சம்பவம் தொடர்பாக ராகுல், பிரியங்கா தலைமையில் காங்கிரஸ் தொண்டர்கள் மேற்கொண்ட இன்றைய பயணம் குறித்து உத்தர பிரதேச மாநில அமைச்சர் சித்தார்த்நாத் சிங் கூறும்போது, "ஒவ்வொரு முறை வெளிநாடு செல்லும் முன்பாக ஏதாவது ஒரு விவகாரத்தை பெரிதாக்கி ஊடகங்களுக்கு காட்சி கொடுத்து பரபரப்பை ராகுல் ஏற்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்" என்று கூறினார்.

"இது தனது அரசியல் விளம்பரத்துக்காக ராகுல் செய்யும் செயல்பாடு என்றும் ஹாத்ரஸ் பெண் உயிரிழப்பு விவகாரத்தில் மாநில அரசு உரிய விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், அங்கு சென்று பிரச்னையை பெரிதுபடுத்த ராகுல் காந்தி தலைமையில் காங்கிரஸார் முற்பட்டனர். இன்னும் மூன்று, நாட்கள் கழித்து அவர்கள் பாதிக்கப்பட்ட பெற்றோரை சந்திக்க எந்த தடையும் இல்லை. ஆனால், அவசர, அவசரமாக இந்த விவகாரத்தை பெரிதாக்கி அரசியல் ஆதாயம் தேட ராகுல், பிரியங்கா முற்பட்டுள்ளார்கள்" என்று சித்தார்த்நாத் சிங் குற்றம்சாட்டினார்.

தகனம் செய்ய கட்டாயப்படுத்தப்பட்ட குடும்பம்

ஹாத்ரஸில் தங்களின் பெண் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டபோது அவரது முதுகெலும்பை உடைத்தும் நாக்கை அறுத்தும் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், 14 நாட்களாக உயிருக்குப் போராடிய நிலையில் தங்களின் மகள்உயிரிழந்ததாகவும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் காவல்துறையிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

மேலும், தங்களுடைய மகள் உயிரிழந்தது தொடர்பான மருத்துவ அறிக்கையை இன்னும் தங்களுக்கு காவல்துறையினர் வழங்கவில்லை என்று கூறியுள்ளனர்.

காவல்துறையினரின் புதிய விளக்கம்

இது குறித்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் கேட்டதற்கு, அது மிகவும் ரகசியமான ஆவணம். தடயவியல் சோதனை நடந்து வருகிறது. அதனால், எல்லா ஆதாரங்களையும் சேகரித்து வருகிறோம். ஊடகங்களில் குறிப்பிடப்படுவது போல உயிரிழந்த பெண் அத்தகைய கொடுமையை அனுபவிக்கவில்லை என்று கூறினார்.

மேலும் அவர், அந்த பெண்ணின் நாக்கு அறுபடவில்லை, முதுகெலும்பு உடையவில்லை. அவரது கழுத்தின் குரல்வளை முறிந்துள்ளது. அது அவரது நரம்பு மண்டலத்தை பாதித்துள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, உத்தர பிரதேச மாநில காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரிவு கூடுதல் இயக்குநர் பிரசாந்த் குமார், தடயவியல் பரிசோதனையில் ஹாத்ரஸ் பெண் பாலியல் வல்லுறவால் உயிரிழக்கவில்லை என தெரியவந்துள்ளதாக கூறியதாக ஏஎன்ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

முன்னதாக, தங்களுடைய மகள் டெல்லி சஃப்தர்ஜங் மருத்துவமனையில் உயிரிழந்த மறுதினமே அதிகாலை 3 மணியளவில் உத்தர பிரதேச காவல்துறையினர் தங்களை கட்டாயப்படுத்தி அவரது சடலத்தை தகனம் செய்ய நடவடிக்கை எடுத்தனர் என்று உயிரிழந்த பெண்ணின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

ஆனால், பெற்றோரின் சம்மதத்துடனேயே சடலத்தை எரிக்க நடவடிக்கை எடுத்ததாகவும் சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் தவிர்க்கவே அவ்வாறு செய்ததாகவும் காவல்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தைக் கண்டித்தும் உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் கூறி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வியாழக்கிழமை நண்பகல் 12 மணிக்கு டெல்லியில் இருந்து ஹாத்ரஸ் நோக்கிப் புறப்பட்டனர்.

டெல்லியில் இருந்து தாஜ் எக்ஸ்பிரஸ் அல்லது யமுனை விரைவுச்சாலை வழியாக மொத்தம் 200 கி.மீ தூரம் கொண்ட ஹாத்ரஸ் பகுதியை அடைய 3.45 மணி நேரமாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹார்தரஸ் பெண் கூட்டுப்பாலியல் சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த பேரணியாக செல்லும் உள்ளூர் மக்கள்

ஹாத்ரஸில் 144தடை உத்தரவு

இதையடுத்து, ஹாத்ரஸ் மாவட்டத்தில் பரபரப்பான சூழல் நிலவியதை அடுத்து, அங்கு 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்தது. அந்த பகுதியில் வியாழக்கிழமை காலையில் இருந்து செய்தி சேகரிப்புக்காக டெல்லியில் இருந்து சென்றிருந்த நிருபர்கள், ஒளிப்பதிவுக்குழுவினர் அவசர, அவசராக காவல்துறையினரால் வெளியேற்றப்பட்டனர்.

இந்த நிலையில், தடையை மீறி பிரியங்கா காந்தியும், ராகுல் காந்தியும் ஹாத்ரஸ் மாவட்டத்துக்குள் நுழைய முற்பட்டால் அவர்களை கைது செய்வோம் என்று உள்ளூர் காங்கிரஸ் தலைவர்களிடம் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.

இதற்கிடையே, பிரியங்காவும் ராகுல் காந்தியும் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்களுடன் சென்றபோது, டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டா பகுதியை கடந்த நிலையில் எல்லையிலேயே அவர்களுடன் வந்த பாதுகாப்பு வாகனங்களை உத்தர பிரதேச மாநில காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதையடுத்து நடந்தே ஹாத்ரஸ் நோக்கிச் செல்வதாகக் கூறி பிரியங்கா காந்தி தமது ஆதரவாளர்களுடன் செல்லத் தொடங்கியினார். அவரை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

கிரேட்டர் நொய்டாவில் இருந்து ஹாத்ரஸுக்கு 142 கி.மீ தூரமாகும். இந்த நிலையில், ஹாத்ரஸ் எல்லையில் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் முகாமிட்டு நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

ஹாத்ரஸ் நோக்கி ராகுல், பிரியங்கா காந்தி புறப்பட்டதை அறிந்து நெடுஞ்சாலை சுங்கவரி சாவடியில் வாகனங்களை சோதனையிடும் காவல்துறையினர்

மற்றொரு பாலியல் சம்பவம்

உத்தர பிரதேசத்தில் 19 வயது பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட நிலையில், செவ்வாய்க்கிழமை இரவு அதேபோன்ற மற்றொரு கூட்டுப்பாலியல் சம்பவம் நடந்துள்ளதாக கூறப்படுவது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உத்தர பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், மாயாவதி ஆகியோர் கடும் கண்டனங்களை பதிவு செய்து, மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாத நிலையில் முதல்வர் யோகி ஆதித்யநாத் அரசு இருப்பதாக தெரிவித்தனர்.

உத்தர பிரதேசத்தின் பல்ராம்பூரில் 22 வயது பட்டியிலினத்தைச் சேர்ந்த பெண் இரண்டு நபர்களால் கூட்டுப்பாலியலுக்கு ஆளாக்கப்பட்டதாகவும் பிறகு லக்னெள மருத்துவனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் ஷாஹித், ஷாஹில் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறையினர் கூறியுள்ளனர்.

கல்லூரியல் சேர்க்கைக்காக சென்ற தங்களின் மகள் இரவு 7 மணியாகியும் வீடு திரும்பவில்லை என்றும், அவரை கடத்திய இருவரும் ஒரு இ-ரிக்ஷாவில் அவரை வீட்டுக்கு அனுப்பி வைத்ததாகவும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் கூறியுள்ளனர்.

ஒரு வகை போதை மருந்தை செலுத்தி தங்களின் மகளை இருவரும் கூட்டுப்பாலியல் செய்ததாகவும் கடுமையான வயிற்று வலியால் துடித்த தங்களின் மகளை உள்ளூர் மருத்துவமனையில் சேர்த்தபோது லக்னெ பெரிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லுமாறு அங்கிருந்த மருத்துவர்கள் அறிவுறுத்தினார்கள். அதன்படி அவரை கொண்டு செல்லும்போதே மகளின் உயிர் பிரிந்து விட்டது என்று அந்த பெண்ணின் பெற்றோர் தெரிவித்தனர்.

அடுத்தடுத்து மிகக் கொடூரமான வகையில் கூட்டுப்பாலியல் வல்லுறவுக்கு உள்ளானதாக கூறப்படும் இந்த இரு சம்பவங்களும் பதற்றமான நிலையை உத்தர பிரதேசத்தில் பரவலாக ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்புடைய காணொளி

காணொளிக் குறிப்பு,

உத்தர பிரதேசத்தில் "நிர்பயா" பாலியல் வன்கொடுமை - 19 பெண் உயிரிழப்பு

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: