"பாபர் மசூதி தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது": பத்திரிகையாளர் என். ராம்

"பாபர் மசூதி தீர்ப்பு அதிர்ச்சி அளிக்கிறது": என். ராம்

பட மூலாதாரம், Getty Images

"பாபர் மசூதி இடிப்பு திட்டமிட்டு நடத்தப்பட்டது. இந்த விவகாரத்தில் இந்திய புலனாய்வுத்துறை (சி.பி.ஐ) மேல் முறையீடு செய்யாவிட்டால் மற்றவர்கள் செய்ய வேண்டும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான என். ராம்.

பாபர் மசூதி இடிப்பு விவகாரத்தில் சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டிருக்கிறது. 2019ல் ராம ஜென்ம பூமி குறித்த வழக்கில், உச்ச நீதிமன்றமே இதனைச் சொல்லியிருக்கிறது. மேலும் பாபர் மசூதி இடிப்பு ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கை என்றும் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால், தற்போது வெளியாகியுள்ள தீர்ப்பில், "இந்த இடிப்பு விவகாரத்தில் எந்த சதித்திட்டமும் இல்லை; உண்மையில் இந்தத் தலைவர்கள் தடுக்கப் பார்த்தார்கள்" என்றெல்லாம் சொல்லியிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தை 16 ஆண்டுகளாக ஆய்வுசெய்த எம்.எஸ். லிபரஹான் ஆணையம் வேறு விதமாகச் சொல்கிறது.

"ராம ஜென்ம பூமி இயக்கத்திற்குத் தேவையான நிதி உள்ளிட்ட அனைத்தும் திட்டமிட்டு திரட்டப்பட்டன. பல்வேறு சங்க பரிவார அமைப்புகளின் பெயரிலும் தனி மனிதர்களின் பெயரிலும் வங்கிக் கணக்குகள் துவங்கப்பட்டன.

இதுதவிர, அடையாளம் தெரிய வேறு பல ஆதாரங்களில் இருந்தும் நிதி திரட்டப்பட்டது. இதில் ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க, வி.எச்.பி உள்ளிட்டவை தொடர்ச்சியாக ஈடுபட்டன" என்கிறது லிபரஹான் கமிஷன். யார் யாருக்கு பணம் சென்றது என்ற விவரமெல்லாம்கூட லிபரஹான் கமிஷன் அறிக்கையில் உள்ளது.

உச்சகட்டமாக நிகழ்ந்த 1992 டிசம்பர் 6ஆம் தேதி நடவடிக்கைக்காக கோடிக்கணக்கான ரூபாய் பணம் செலவழிக்கப்பட்டது.

கூட்டத்தைத் திரட்டுவது முதல், மசூதியை இடித்துத் தள்ளுவது வரை துல்லியமாகத் திட்டமிடப்பட்டது.

"அயோத்தியாவிற்கு கரசேவகர்கள் வந்து திரண்டது தன்னிச்சையாக நடக்கவில்லை. இது முழுமையாகத் திட்டமிடப்பட்டது" என்கிறது லிபரஹான் கமிஷன். இந்த விஷயம் முதலமைச்சர் கல்யாண் சிங்கிற்குத் தெரியாமல் இருக்க வாய்ப்பில்லை என்றெல்லாம் சொல்லியிருக்கிறது.

ஆனால் நீதிமன்றம் கொடுத்திருக்கக்கூடிய தீர்ப்பு, இதற்கு நேர்மாறாக இருக்கிறது. இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. நடத்திய புலனாய்வு சரியில்லை. அதனால்தான் பலரும் இந்தத் தீர்ப்பில் ஆச்சரியமில்லை என்கிறார்கள்.

"குற்றம்சாட்டப்பட்ட தலைவர்கள் இடிப்பின் பின்னணியில் இருந்தார்கள் என்பதற்கு சாட்சியமே இல்லை" என்று சொல்லியிருப்பது பெரும் அதிர்ச்சியை அளிக்கிறது.

பாபர் மசூதி இடிப்பிற்கு முன்பாக மிகப் பெரிய இயக்கம் ஒன்று நடந்திருக்கிறது, மக்கள் திரட்டப்பட்டிருக்கிறார்கள். இப்போது வந்த தீர்ப்பில், எல்லோரையும் விடுவித்துவிட்டார்கள். அப்படியானால் அதனைச் செய்தது யார்? இந்த நடவடிக்கையை அடுத்து நடந்த வன்முறைகளில் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகியுள்ளன. அதற்கெல்லாம் யார் பொறுப்பு? இந்த நீதிமன்றத்தில் நீதி கிடைக்கவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

காங்கிரஸ் இந்த விவகாரத்தை சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. லிபரஹான் கமிஷனே தனது அறிக்கையை சமர்பிக்க 16 ஆண்டுகள் எடுத்துக்கொள்ள அனுமதித்தார்கள்.

காங்கிரசைப் பொருத்தவரை, இதில் தீவிரமாகச் செயல்பட்டால் இந்துக்களின் ஒட்டு தங்களைவிட்டுப் போய்விடுமோ, அந்தச் சூழலை பா.ஜ.க பயன்படுத்திக்கொள்ளுமோ என்ற பயம் இருந்தது.

தவிர, இதில் காங்கிரசிற்கும் ஒரு பங்கு இருக்கிறது. 1949ல் ராமர் சிலை அந்த கட்டடத்திற்குள் கடத்திவரப்பட்டது. அந்த சிலையை அகற்ற வேண்டுமென சர்தார் படேல் சொல்லும்போது அப்போது காங்கிரஸ் முதல்வராக இருந்த பந்த், அதற்கு மறுத்துவிட்டார்.

இதற்குப் பிறகு ராஜிவ் காந்தி காலத்தில், ஷிலா நியாஸ் நடந்தது. நரசிம்மராவ் காலகட்டத்தில், மசூதி இடிக்கப்பட்டது. அதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளைக் கைதுசெய்வதில் மத்திய அரசு அரைமனதாகச் செயல்பட்டது. சி.பி.ஐயும் அதற்கேற்றபடியே நடந்துகொண்டது. வேண்டுமென்றே ஆதாரங்கள் சிதைக்கப்பட்டன.

இப்போது பா.ஜ.க. இந்தத் தீர்ப்பைக் கொண்டாடுகிறது. ஆனால், அரசியல் ரீதியாக அக்கட்சிக்கு பலன் கிடைக்குமா என்பதை இப்போதே சொல்ல முடியாது. இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்ட தலைவர்களுக்கு இந்தத் தீர்ப்பினால் புதிதாக அரசியல் எதிர்காலம் இருப்பதற்கு வாய்ப்பில்லை. அவர்கள் கிட்டத்தட்ட ஓய்வுபெற்று விட்டார்கள்.

பாபர் மசூதி விவகாரம், இந்திய அரசியலில் ஒரு குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதனை ஏணியாகப் பயன்படுத்தித்தான் பா.ஜ.க. அதிகாரத்தை அடைந்தது. பா.ஜ.கவுக்கு இந்த இயக்கத்தினால் நிச்சயமாக பலன் இருந்திருக்கிறது. ஆனால், அது மோசமான அரசியல்.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. மேல் முறையீடு செய்ய வேண்டும். அவர்கள் செய்யத் தவறினால் மற்றவர்கள் செய்ய வேண்டும். மேல் முறையீட்டு வழக்கு அலஹாபாத் உயர் நீதிமன்றத்திற்குத்தான் வரும் என்றாலும், நாம் நீதித் துறையை நம்ப வேண்டும். அலகாபாத் உயர்நீதிமன்றம்தான் கஃபீல்கான் வழக்கில் நல்ல தீர்ப்பை வழங்கியது.

என். ராம் சொல்லக் கேட்டு எழுதியவர் பிபிசி தமிழ் செய்தியாளர் முரளிதரன் காசி விஸ்வநாதன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: