ஏர் இந்தியா ஒன்: இந்திய பிரதமருக்காக வந்தது புதிய போயிங் 777 விமானம் - விலை எவ்வளவு தெரியுமா?

ஏர் இந்தியா ஒன்: இந்திய பிரதமர், குடியரசு தலைவருக்காக வாங்கிய விமானத்தின் விலை எவ்வளவு தெரியுமா?

பட மூலாதாரம், TWITTER

இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் பயணங்களுக்காக அமெரிக்காவிடம் இருந்து வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்ட இரண்டு போயிங் ரக விமானங்களில் ஒன்று வியாழக்கிழமை டெல்லி வந்தடைந்தது.

அமெரிக்காவில் அந்நாட்டு அதிபர், துணை அதிபரின் வான் வழி பயணங்களுக்காக பிரத்யேக வசதிகளுடன் ஏவுகணை துளைக்காத விமானங்கள் பயன்படுத்தப்படுகின்றன. அவை ஏர் ஃபோர்ஸ் ஒன்று அழைக்கப்படுகின்றன.

அதுபோல, இந்தியாவில், குடியரசு தலைவர் மற்றும் பிரதமரின் வான் வழி பயணங்களுக்காக தற்போது பயன்பாட்டில் உள்ள போயிங் 747 ரக விமானம், ஏர் இந்தியா 001 அல்லது ஏர் இந்தியா ஒன் என அழைக்கப்படுகிறது.

மிக முக்கிய பிரமுகர்களின் விமானங்கள் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இருப்பதை உறுதிப்படுத்தும் வகையில், அமெரிக்காவின் டல்லாஸில் உள்ள போயிங் நிறுவனத்துடன் இரண்டு சிறப்பு விமானங்களை வாங்க இந்தியா 2006ஆம் ஆண்டில் ஒப்பந்தம் செய்திருந்தது.

இதைத்தொடர்ந்து 2018ஆம் ஆண்டில் இந்த விமானம் இந்தியா வசம் ஒப்படைக்கப்பட்டாலும், நவீன தொழில்நுட்ப மேம்பாட்டு வசதிகளை நிறுவ இந்தியா கேட்டுக் கொண்டதால் மீண்டும் அந்த விமானம் தயாரிப்பு நிறுவனத்திடமே வழங்கப்பட்டது.

இதையடுத்து, ஏஐ-160 என்ற அடையாளத்துடன் தயாரிக்கப்பட்ட விமானம் அமெரிக்காவில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதி டெல்லி வந்தடைந்தது.

பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த விமானத்தில் மேம்படுத்தப்பட்ட ராணுவ தளவாட கருவிகள் நிறுவப்பட்டுள்ளன. இவை அமெரிக்க ராணுவ தரத்தில் தயாரிக்கப்பட்டவை என்று பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இதுவரை இந்திய குடியரசு தலைவர், பிரதமர் ஆகியோரின் வான்வழி பயணங்களுக்கு போயிங் நிறுவனத்தின் 747-400 என்ற ரக விமானங்களே பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த விமானங்களுக்கு மாற்றாக, புதிய போயிங் 777-300ER ரக விமானங்கள் திகழும்.

புதிய விமானத்தில், GE90-115 என்ற தரத்திலான இரட்டை எஞ்சின்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த ரக எஞ்சின்கள் அமெரிக்க அதிபருக்கான ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் நிறுவப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், Boeing

இவை மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலுடன் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும், இடைவிடாது 11,500 கிலோ மீட்டர் தூரத்துக்கு இந்த விமானத்தால் பறக்க இயலும். அதாவது, அமெரிக்காவில் இருந்து டெல்லிக்கு வழியில் எங்கும் நிற்காமல் இந்த விமானத்தால் தொடர்ந்து பயணம் செய்ய முடியும்.

ஏவுகணை தாக்குதல் எதிர்ப்புக்கு பயன்படுத்தப்படும் பாதுகாப்பு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி விமானத்தின் உடல் பகுதி தயாரிக்கப்பட்டுள்ளது. மிக முக்கிய பிரமுகர்கள் தங்கும் கேபின்கள் வெளி மற்றும் உள்ளிருந்து தாக்குதலுக்கு ஆளாகாத வகையில் சீலிடும் வகையில் வடிமைக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Boeing

வான் பயணத்தின்போது திடீர் தாக்குதல் அல்லது விபத்துக்குள்ளாகும் நிலை ஏற்பட்டாலும் இந்த கேபின்கள், பாதுகாப்பாக இருக்கும் வகையில் அதன் பகுதிகள் தயாரிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

இவை தவிர மேம்பட்ட மின்னணு போர்த்தளவாடத்தின் அங்கமாக ஏவுகணை எதிர்ப்பு தாக்குதலை எதிர்கொள்ளவும் திருப்பித் தாக்கவும் கூடிய நவீன ஆயுதங்களை தாங்கும் வசதியும் இந்த விமானத்தில் நிறுவப்பட்டுள்ளன.

பட மூலாதாரம், TWITTER

போயிங் நிறுவனத்தின் சொகுசு விமானங்களின் தயாரிப்புகளுக்கே உரித்தான இருக்கை வசதிகள், செயற்கைக்கோள் தொலைத்தொடர்பு செல்பேசி வசதிகள், விமானத்தின் அனைத்து பகுதிகள், வான் மற்றும் தரைவழி கேமிராக்கள் இணைக்கப்பட்ட இருக்கை வசதிகள் உள்ளிட்டவை இதில் நிறுவப்பட்டுள்ளன.

இந்த விமானம் 43,100 அடி உயரம் வரை பறக்கும் திறன் கொண்டது. இதில் மிக முக்கிய பிரமுகர்கள் பயன்படுத்துவதற்கான தனி அமரும் அறை, பார்வையாளர் அறை, படுக்கை அறை, கூட்ட அரங்கு, மருத்துவக்குழு தங்கும் அறை, அறுவை சிகிச்சை அறை, சமையல் அறை, பாதுகாப்பு வீரர்களின் ஆயுதங்களை வைக்கும் அறை உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

பட மூலாதாரம், Boeing

தற்போதையை போயிங் விமானத்தின் வருகையைத் தொடர்ந்து இரண்டாவது போயிங் 777 ரக விமானம் பின்னர் இந்தியாவுக்கு வரவுள்ளது.

உத்தேசமாக இந்த இரு விமானங்களின் மதிப்பு இந்திய ரூபாயில் எட்டாயிரத்து நானூறு கோடி இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. எனினும், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த தகவல்களை வெளியிட இந்திய பாதுகாப்புத்துறை மறுத்து விட்டது.

தற்போது பயன்பாட்டில் உள்ள ஏர் இந்தியா ஒன் விமானங்கள், ஏர் இந்தியா நிறுவனத்தின் கட்டுப்பாட்டிலும் இந்திய விமானப்படையின் பராமரிப்பிலும் இயக்கப்பட்டு வருகின்றன.

அதேசமயம், புதிய போயிங் 777 ரக ஏர் இந்தியா 001 விமானம், அலுவல்பூர்வமாக இயங்க அனுமதிக்கப்படும்போது, அதை இந்திய விமானப்படை தொழில்முறை விமானிகளே நேரடியாக இயக்குவார்கள் என்று பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :