கர்நாடகாவில் தமிழ் பள்ளிகளின் நிலை: தமிழக முதல்வர் கோரிக்கை

தமிழக முதல்வர் கோரிக்கை

பட மூலாதாரம், CMO TAMILNADU FACEBOOK PAGE

கர்நாடகா மாநிலத்தில் தமிழ்ப் பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; புதிய பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கர்நாடகா முதல்வர் எடியூரப்பாவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எடியூரப்பாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், கர்நாடகா மாநிலத்தில் உள்ள தமிழ் பள்ளிக்கூடங்கள் மற்றும் கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் தனக்கு ஒரு கடிதத்தை எழுதியிருப்பதாகவும் அதில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் இருப்பதாகவும் புதிதாக தமிழ்ப் பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதில்லையென்றும் கூறப்பட்டிருப்பதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

"கர்நாடகா மாநிலத்தின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சிக்கு தமிழர்கள் பெரும் பங்களிப்பைச் செலுத்துகிறார்கள். கோலார் தங்கச் சுரங்கம், ஹட்டி தங்கச் சுரங்கம், சந்தூர் மாங்கனீஸ் சுரங்கம், சிக்மகளூர், மங்களூரில் உள்ள காபித் தோட்டங்களை மேம்படுத்துவதிலும் கட்டுமானத் தொழில், விவசாயத் தொழிலும் தமிழர்கள் பெரும் பங்களிப்பைச் செலுத்தியுள்ளனர்" எனச் சுட்டிக் காட்டியிருக்கும் முதலமைச்சர், கர்நாடக அரசுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.

அரசு மற்றும் அரசு உதவிபெரும் பள்ளிக்கூடங்களில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், சமீபத்தில் மூடப்பட்ட தமிழ்ப் பள்ளிகளை மீண்டும் திறக்க வேண்டும், புதிய தனியார் தமிழ் வழிப் பள்ளிக்கூடங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும், பிற மொழிப் பள்ளிக்கூடங்களாக மாற்றப்பட்ட தமிழ் மொழிப் பள்ளிக்கூடங்களை மீண்டும் தமிழ்ப் பள்ளிகளாக மாற்ற வேண்டும் என தனது கடிதத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கோரியிருக்கிறார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: