கடலூரில் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதால் 3 காவலர்கள் இடமாற்றமா? என்ன நடந்தது?

பெரியார்

பட மூலாதாரம், FACEBOOK

கடலூர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த தமிழக காவல்துறையின் காவலர்கள் மூன்று பேர் கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதன் பின்னணியில் அவர்கள் கடந்த மாதம் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுதான் காரணம் என்று சமூக வலைதளங்களில் வெளிவரும் தகவல்கள், அரசியல் ரீதியில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

கடலூர் முதுநகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த காவலர்கள் ரங்கராஜ், அசோக், ரஞ்சித் உள்ளிட்டோர் கடந்த செப்டம்பர் 17ஆம் தேதி பெரியார் பிறந்தநாளையொட்டி அவரது சிலைக்கு மாலை அணிவித்து அந்த சிலையின் கீழ் நின்று எடுத்த படம் சமூக ஊடங்களில் பகிரப்பட்டது. அந்த படத்தை எடுத்தபோது மூன்று பேரும் காவல் சீருடையில் அல்லாமல் கறுப்பு நிற சட்டை அணிந்தவாறு படம் எடுத்து அதை சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்திருந்தனர்.

பட மூலாதாரம், FACEBOOK

இந்த நிலையில், அவர்கள் மூவரும் கடலூரில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இது தொடர்பான தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதையடுத்து, அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதன் பின்னணியிலேயே பணியிட மாற்றம் செய்யப்பட்டதாக தகவல் பரவியது.

தமிழகத்தில் உள்ள பல்வேறு நாளிதழ் இணையதளங்கள், சில தனியார் தொலைக்காட்சிகளில் இது தொடர்பான தகவல்கள் வெளிவந்தன.

இந்த நிலையில், திராவிட கட்சித் தலைவர் கி. வீரமணி மூன்று காவலர்கள் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதற்காக இடமாற்றம் செய்யப்பட்டிருந்தால் அது கண்டிக்கத்தக்க நடவடிக்கை என்றும் தமிழர்கள் கல்வி பெற வேண்டும், வேலை பெற வேண்டும் என்பதற்காக அரும்பாடுபட்ட பெரியாருக்கு மரியாதை செலுத்துவதில் எந்த தவறும் இருக்க முடியாது என்று தெரிவித்தார். மேலும் அவர் நடப்பது அண்ணா ஆட்சியா, ஆச்சாரியார் ஆட்சியா? என்றும் தமது டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதே விவகாரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவனும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர், பழிவாங்கும் நோக்கத்துடன் சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களையும் பணியிடமாற்றம் செய்துள்ள நடவடிக்கை சரியல்ல என்றும் அவர்களை மீண்டும் பழையபடி அதே காவல்நிலையத்திலேயே பணியமர்த்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். இது பெரியார் வழிவந்த எம்ஜிஆர், ஜெயலலிதா பெயரில் இயங்கும் ஆட்சி என்பதை இதன் மூலம் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பெரியார், அண்ணா பெயரை உச்சரித்துக் கொண்டிருக்கும் ஒரு ஆட்சியில் இப்படிப்பட்ட அவலம் நடைபெறுகிறது. 3 காவலர்கள் இடமாற்ற உத்தரவை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின், "தந்தை பெரியார் உள்ளிட்ட முன்னோடி தலைவர்களின் சிலைகளுக்கு காவித்துணி அணிவித்தும், காவி சாயத்தை பூசியும் அவமதிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முன்வராத தமிழக அரசு, சிலைக்கு மரியாதை செய்த காவலர்களை தண்டித்திருப்பது மக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது," என்று தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

காவல்துறை விளக்கம் என்ன?

இந்த நிலையில், காவலர்கள் பணியிட மாற்றத்தின் பின்னணியில் நடந்தது என்ன என்பது குறித்து விழுப்புரம் சரக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) எழிலரசனிடம் பிபிசி பேசியது.

இது பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்திய விவகாரத்தால் செய்யப்பட்ட இடமாற்றல் கிடையாது என்றும் அதையும் கடந்து வேறு பல நடத்தை தொடர்புடைய பிரச்னைகள் நிலவியதால்தான் அந்த காவலர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்று எழிலரசன் தெரிவித்தார்.

"தமிழ்நாட்டில் பெரியார் நிகழ்த்திய சீர்திருத்தம், அவர் பெற்றுத்தந்த உரிமை, நடத்திய போராட்டங்கள் போன்றவற்றை எவராலும் மறுக்கவோ மறைக்கவோ முடியாது. சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களும் பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்தியதில் எந்த பிரச்னையும் கிடையாது," என்று அவர் கூறினார்.

மேலும், "மூன்று காவலர்களும் காவல்துறை நடத்தை விதிகளை மீறி வேறு பல விஷயங்களில் வரம்பு மீறி செயல்பட்டு வந்துள்ளனர். அவர்களின் செயல்பாடுகள் காவலர்களுக்காக வகுக்கப்பட்ட நடத்தை மாண்புகளை மீறும் வகையில் சில மாதங்களாகவே இருந்தன," என்று அவர் குறிப்பிட்டார்.

"நிர்வாக காரணங்கள் அடிப்படையில் அவர்களுக்கு பணியிட மாற்றல் உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், இது பற்றி காவல்துறை தரப்பின் கருத்தைக் கேட்காமலேயே அவர்கள் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வுடன் பணியிட மாற்றல் நடவடிக்கையை ஒப்பிட்டு ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. அரசியல் தலைவர்களும் அறிக்கைகளை விட்டு வருகின்றனர். இதை முதலில் நாங்கள் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்," என்று டிஐஜி எழிலரசன் தெரிவித்தார்.

நடந்தது என்ன?

இது குறித்து கடலூர் காவல் வட்டாரத்தில் பிபிசி பேசியபோது, சம்பந்தப்பட்ட மூன்று காவலர்களும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு, தனியாக ஒரு வாட்ஸ்அப் குழுவில் இணைந்து அதில் சில தகவல்களை பரப்பி வந்ததாகவும், அதில் ஏற்கெனவே சில காவலர்கள் இடம்பெற்றிருந்த நிலையில் அவர்கள் ஒரு சங்கம் போல இயங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்தப் பின்னணியிலேயே அவர்கள் மீதான பணி மாற்றல் நடவடிக்கைக்கு காவல்துறை தலைவர் அலுவலகத்தில் இருந்து அனுமதி கிடைத்ததால் மூன்று காவலர்களும் பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிய வந்துள்ளது.

விதிகள் கூறுவது என்ன?

தமிழ்நாடு காவல்துறையின் சீருடைப்பணிகள் விதிகளின்படி காவலர் பணியில் சேரும்போதே அவர் எந்தவொரு இயக்கத்துக்கோ, அரசியல் கட்சிக்கோ, சித்தாந்தத்துக்கோ சாதகமாகவோ அதை பிரதிபலிக்கும் வகையிலோ செயல்படக்கூடாது என்று உறுதிமொழியேற்கப்படுகிறது. குறிப்பாக, சீருடைப்பணியில் உள்ள காவலர்கள், இந்த விதிகளை கட்டாயம் பின்பற்றுவது அவசியம்.

பணிக்கு பொருந்தாத வேறு பணிகளில் சீருடையிலோ, சீருடையில்லாமலோ அவர்கள் மேலதிகாரிகளின் அனுமதி பெறாமல் ஈடுபடக்கூடாது என்பதும் அவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறை.

அதே சமயம், அரசியலுக்கு அப்பாற்பட்ட பெரியாரின் சிலைக்கு அவர்கள் சீருடையின்றி கறுப்பு நிற சட்டை அணிந்து அவர்கள் மரியாதை செலுத்தியதில் தவறு இல்லை என்று காவல்துறை உயரதிகாரி ஒருவரே கூறியிருக்கிறார். அதே சமயம், அவர்கள் மீது நடத்தை அல்லது கீழ்படிதலில் தவறுகள் காணப்பட்டால், அதன் அடிப்படையில் அவர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கை, நிர்வாக காரணங்களுக்கானதாக வகைப்படுத்தப்படும். அந்த உத்தரவுக்கு அந்த காவலர்கள் கட்டுப்பட்டே ஆக வேண்டும் என்று காவல்துறை உயரதிகாரி கூறியுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: