தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணியா?: பொன். ராதாகிருஷ்ணன் கருத்தால் சலசலப்பு

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
பொன். ராதாகிருஷ்ணன்

பட மூலாதாரம், PON RADHAKRISHNAN FACEBOOK PAGE

திமுகவுடன் கூட தேர்தல் கூட்டணி அமையலாம் என பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த கருத்து தமிழக அரசியல் அரங்கில் பலத்த சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதன்கிழமையன்று நாகர்கோவிலில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "சட்டமன்றத் தேர்தலுக்கான கூட்டணி இனிமேல்தான் அமையும். அந்தக் கூட்டணி அ.தி.மு.கவுடன் இருக்கலாம் அல்லது தி.மு.கவுடன் இருக்கலாம். இரண்டும் இல்லாமல் இருக்கலாம்" என்று கூறினார்.

தமிழ்நாட்டில் பாரதிய ஜனதாக் கட்சியும் தி.மு.கவும் கடுமையாக மோதிவரும் நிலையில் பொன். ராதாகிருஷ்ணன் தெரிவித்த இந்தக் கருத்து பலத்த சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அ.தி.மு.கவும் பாரதிய ஜனதா கட்சியும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. தற்போது பொன். ராதாகிருஷ்ணன் இவ்வாறு குறியிருப்பது குறித்து தமிழக மீன்வளத் துறை அமைச்சர் டி. ஜெயக்குமாரிடம் கேட்டபோது, பா.ஜ.கவில் ஆளாளுக்கு கருத்துத் தெரிவிப்பதாகக் கூறினார்.

"பா.ஜ.கவில் ஆளாளுக்கு கருத்து சொல்வதற்கெல்லாம் நாங்கள் பதில் சொல்ல தயாராக இல்லை. பொன். ராதாகிருஷ்ணனின் கருத்து கட்சியின் கருத்தா, இல்லையா என்பதை அவருடைய கட்சி மேலிடம்தான் சொல்ல வேண்டும். கூட்டணி என்பது கட்சியின் கொள்கை முடிவு. தேர்தல் நெருங்கும்போதுதான் கட்சிகள் அதனைத் தெரிவிக்கும்" என்று ஜெயக்குமார் தெரிவித்தார்.

ஆனால், மக்கள் விரோத பா.ஜ.கவை தாங்கள் தொடர்ந்து எதிர்த்து வருவதாக தி.மு.க. தெரிவித்துள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன், "அவர்களுக்கும் அ.தி.மு.கவுக்கும் என்ன பிரச்சனையோ தெரியவில்லை.. பொன்னார் அப்படிச் சொல்லியிருக்கிறார். எங்களுடைய தற்போதைய கூட்டணி தொடர்கிறது. கூட்டணிகள் மாறினாலும், காங்கிரசும் பா.ஜ.கவும் சேராது அல்லவா? அதுபோலத்தான் நாங்களும். கூட்டணிகள் மாறும். ஆனால் எப்படி மாறும் என்பதில்தான் எல்லாம் இருக்கிறது. தி.மு.கவின் முடிவு என்பது மக்கள் நலன் சார்ந்தது. மக்கள் விரோத திட்டங்களுக்காக பா.ஜ.க.வை நாங்கள் எதிர்த்து வருகிறோம். அது தொடர்ந்தால், தொடர்ந்து எதிர்ப்போம்" என்று தெரிவித்திருக்கிறார்.

ஆனால், தி.மு.கவுடன் பா.ஜ.க. கூட்டணி அமையலாம் என்ற கூற்றுகளை அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி கடுமையாக மறுக்கிறார்.

பட மூலாதாரம், FACEBOOK / MK STALIN

"ஒரு நிருபர் கேட்ட கேள்விக்கு பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பதிலை, அறிக்கை போலக் கருதி பேசுவது தவறு. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து நீடிக்கின்றன.

'தேர்தல் நேரத்தில்தான் கூட்டணியில் எவன் இருப்பான், எவன் போவான் என்பது தெரியும்' என தி.மு.கவின் பொதுச் செயலாளர் சொன்னதை கண்டுகொள்ளாமல், நிருபர்கள் கேட்ட கேள்விக்கு பொன். ராதாகிருஷ்ணன் அளித்த பதிலை, பரபரப்புக்காக இவ்வளவு பெரிதுபடுத்துவது கூடாது. சட்டமன்றத் தேர்தலில் தே.ஜ.கூட்டணிதான் ஆட்சியமைக்குமென மாநிலத் தலைவர் தெளிவாகச் சொல்லியிருக்கிறார். அதுதான் தற்போதைய நிலை" என பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க., அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்தது. அந்தக் கூட்டணியில் இருந்தபடி ஐந்து இடங்களில் அக்கட்சி போட்டியிட்டது. 2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., இந்திய ஜனநாயகக் கட்சியுடன் இணைந்து போட்டியிட்டது. 2014ஆம் ஆண்டுத் தேர்தலில் தே.மு.தி.க, பாட்டாளி மக்கள் கட்சி, ம.தி.மு.க., ஐ.ஜே.கே உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து தேர்தலை சந்தித்தது பா.ஜ.க.

இதற்கு முன்பாக 2001ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தி.மு.கவுடன் இணைந்து போட்டியிட்டது. அப்போது தி.மு.க. கூட்டணியில் அக்கட்சிக்கு 21 இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் காரைக்குடி, மயிலாடுதுறை, மயிலாப்பூர், தளி ஆகிய நான்கு இடங்களில் அக்கட்சி வெற்றிபெற்றது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: