ராம் விலாஸ் பாஸ்வான் மறைவு- நரேந்திர மோதிக்கு தனிப்பட்ட இழப்பு ஏன்?

ராம் விலாஸ் பாஸ்வான்

பட மூலாதாரம், Getty Images

இந்திய பிரதமர் நரேந்திர மோதி அமைச்சரவையில் நுகர்வோர் துறை அமைச்சராக இருந்தவரும் லோக் ஜன சக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் (74) வியாழக்கிழமை காலமானார்.

இந்திய அரசியலில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிர பங்களிப்பை வழங்கிய அவர், நாட்டின் குறிப்பிடத்தக்க தலித் இயக்க தலைவர்களில் ஒருவராக அறியப்பட்டு வருகிறார்.

டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு கடந்த வாரம் சனிக்கிழமை இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவரது உயிர் வியாழக்கிழமை (அக்டோபர் 8) பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்த தகவலை அவரது மகன் சிராக் பாஸ்வானும் தமது டிவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.

அதில், அப்பா, இப்போது நீங்கள் இந்த உலகில் இல்லை. ஆனால், நீங்கள் எப்போதும் எங்களுடனேயே இருக்கிறீர்கள் என எனக்குத் தெரியும் என்று அவர் கூறியுள்ளார்.

தொடக்கத்தில் ராம் விலாஸ் பாஸ்வானுக்கு எத்தகைய உடல் நல பிரச்னை இருந்தது என்பதை அவரது குடும்பத்தினர் வெளிப்படுத்தவில்லை. அவர் வழக்கமான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு சென்றதாகவே அவர்கள் தெரிவித்தனர்.

ராம் விலாஸ் பாஸ்வான் நீண்ட காலமாகவே சிறுநீரகம் மற்றும் இருத நோய் பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்தனர்.

இந்திய பிரதமர் நரந்திர மோதியின் அமைச்சரவையில் ராம் விலாஸ் பாஸ்வான் மிக மூத்தவராக கருதப்படுகிறார். அவர் தலைமை வகித்த லோக் ஜன சக்தி கட்சியின் பொறுப்பை கடந்த ஆண்டு தனது மகன் சிராக் பாஸ்வானிடம் அவர் ஒப்படைத்தார்.

அதன் பிறகு அமைச்சர் பதவியில் மட்டும் தீவிர கவனம் செலுத்தி வந்த அவர், கொரோனா பொது முடக்க காலத்தில் செயல்படுத்தப்பட்ட பொதுமக்களுக்கு இலவச உணவு தானியங்கள் விநியோக திட்டத்தை விரிவான வகையில் மேற்பார்வையிட்டு வந்தார்.

தலைவர்கள் இரங்கல்

இந்திய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், அவசரநிலை பிரகடனத்துக்கு எதிரான இயக்கத்தில் ஜெயபிரகாஷ் நாராயணால் ஈர்க்கப்பட்டு சோஷலிஸ இளைஞராக சமூக பணியாற்ற புறப்பட்ட பாஸ்வான் தாழ்த்தப்பட்ட மக்களின் நல்வாழ்வுக்காக மிகக் கடுமையாக உழைத்தார் என்று கூறியுள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோதி, அவரது மறைவு தனிப்பட்ட முறையில் எனக்கு இழப்பு என்று கூறியுள்ளார்.

பாஸ்வானுடன் இணைந்து பணியாற்றியது அற்புதமான அனுபவம் என்றும், அமைச்சரவை கூட்டங்களில் அவர் தலையிட்டுப் பேசிய விஷயங்கள் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என்று பிரதமர் மோதி கூறியுள்ளார்.

பாஸ்வானின் மறைவு தன்னை தனிப்பட்ட முறையில் மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளதாக பிஹார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். அவரது மறைவு இந்திய அரசியலில் ஈடு செய்ய முடியாத இழப்பு என்று அவர் தமது டிவிட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.

இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஏழை, வறிய மக்களின் நலன்களுக்காக எப்போதும் போராடியவர் ராம் விலாஸ் பாஸ்வான். அது 1975இல் அவசரநிலைக்கு எதிரானதாக இருக்கட்டும், கொரோனா பரவல் காலத்தில் ஏழை மக்களின் நலன்களை நிறைவேற்றுவதாகட்டும், அவர் எல்லா காலங்களிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கினார். அவரது வெற்றிடத்தை இந்திய அரசியலும் சரி, பிரதமர் மோதியின் அமைச்சரவையும் சரி எப்போதும் உணரும் என்று கூறியுள்ளார்.

இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்காரி, வறிய நிலை மக்கள் மற்றும் சுரண்டப்படும் மக்களின் நலன்களுக்காக மிகப்பெரிய பங்களிப்பை பாஸ்வான் வழங்கியிருக்கிறார். அவரது மறைவு எனக்கு மிகுந்த அதிர்ச்சியை அளித்துள்ளது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ஏழை, வறிய நிலை மக்களின் வலுவான அரசியல் குரல் மறைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, "எனது தாயாரின் சிறந்த நண்பராக விளங்கிய பாஸ்வான், எங்களுடைய குடும்பத்துடனும் தனிப்பட்ட முறையில் நல்லுறவை வளர்த்து வந்தார். அவரது மறைவு எங்களை ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது" என்று கூறியுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பிஹார் முன்னாள் துணை முதல்வருமான தேஜாஸ்வி யாதவ் தமது டிவிட்டர் பக்கத்தில், "சமூக நீதிக்காகவும் தலித் பின்தங்கிய வகுப்பினருக்கான தூண் போலவும் விளங்கிய அவர்களின் பாதுகாவலரான ராம் விலாஸ் பாஸ்வான் மறைவால் மிகவும் வருத்தப்படுகிறேன். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட வர்க்கம் அவருடைய பங்களிப்பை எப்போதும் நினைவில் கொள்ளும்,' என்று கூறியுள்ளார்.

தமிழக தலைவர்கள் இரங்கல்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி விடுத்துள்ள இரங்கல் செய்தியில், நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக ராம் விலாஸ் பாஸ்வான் வாழ்ந்தவர் என்று கூறியுள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவுச்செய்தி அறிந்து மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார். அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பாஸ்வானின் அகால மரணத்தால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருக்கும் கட்சியினருக்கும் ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.

ராம் விலாஸ் பாஸ்வானின் மறைவால் பெருந்துயருக்கு ஆளாகியுள்ளதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தமது டிவிட்டர் பக்கத்தில், தனது தந்தையின் உற்ற நண்பராகவும் தன்னுடன் நெருக்கம் காட்டியும் வந்த பாஸ்வான், மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என நினைத்த நேரத்தில் அவர் மறைந்தார் என வந்த செய்தி பேரிடியாக இதயத்தை தாக்கியதாக கூறியுள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ராம் விலாஸ் பாஸ்வானுடன் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிய நட்புறவைக் கொண்டிருந்தார். அவர் பாஸ்வானின் மறைவு குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், பாஸ்வானின் மறைவு, சமூக நீதி அரசியலுக்குப் பேரிழப்பு-அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். அவரை இழந்து வாடுவோர் யாவருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று கூறியுள்ளார்.

மக்களவை திமுக துணைத் தலைவர் கனிமொழி, நெருக்கடி காலம் முழுவதும் சிறையில் கழித்த ராம் விலாஸ் பாஸ்வானை ஹாஜிபூர் தொகுதி மக்கள் கின்னஸ் ரெக்கார்டில் இடம்பெறும் அளவுக்கு அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தனர். தொடர்ந்து அமைச்சராக பதவி வகித்து தமது நிர்வாகத் திறமையை வெளிப்படுத்தியவர் பாஸ்வான். அவரது மறைவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல் என்று கூறியுள்ளார்.

"ஈழத்தமிழர்கள் நலனில் ஆர்வம் காட்டியவர்"

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விடுத்துள்ள இரங்கல் செய்தியில், "பாஸ்வான் மறைந்துவிட்டார் என்ற செய்தி, பெரும் அதிர்ச்சியைத் தந்தது. தலைசிறந்த நாடாளுமன்றவாதியான அவர், 1977 பொதுத் தேர்தலில் இந்தியாவிலேயே அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்திற்கு வந்து, தன் வாதங்கள் மூலம் அனைவருடைய கவனத்தையும் ஈர்த்தார். ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவெள்ளியாகத் திகழ்ந்தார். சமூக நீதியின் காவலரான வி.பி.சிங் அவர்களின் நம்பிக்கைக்கு உரியவராகத் திகழ்ந்து, மைய மண்டபத்தில் டாக்டர் அம்பேத்கர் அவர்களுடைய படத்தைத் திறந்து வைப்பதற்கும் காரணமாக இருந்தார். ஈழத்தமிழர்களின் துயரத்தில் பங்கேற்று, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் பேசினார். தனித் தமிழ் ஈழமே தீர்வு என்றும் கூறினார். சென்னை மெரினா கடற்கரையில் மே-17 இயக்கம் நடத்திய ஈழத்தமிழர்கள் புகழஞ்சலி நிகழ்ச்சியில் நான் அழைத்ததன்பேரில் வந்து கலந்துகொண்டார். நான் அவரிடம் உயர்ந்த நட்பு கொண்டிருந்தேன். அழகிய தோற்றமும், அறிவாற்றலும் கொண்ட அவர், சமூக நீதி, ஒடுக்கப்பட்டோர் வாழ்வு ஆகிய உன்னத இலட்சியங்களுக்காகவே வாழ்ந்தார்" என்று கூறியுள்ளார்.இன்னும் பல ஆண்டுகள் வாழ்ந்து, நாட்டுக்கு அரிய சேவை செய்ய வேண்டிய அந்த உத்தமர் மறைந்த செய்தி மனதை வாள் கொண்டு பிளக்கிறது. அவரது மறைவினால் வேதனையில் துடிக்கும் அவரது குடும்பத்தினருக்கும், லோக் ஜனசக்தி கட்சியினருக்கும் என்னுடைய ஆழ்ந்த கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: