ஸ்டேன் சுவாமி: பயங்கரவாத வழக்கை எதிர்கொண்ட மிக வயோதிக செயல்பாட்டாளர்

ஸ்டான் சுவாமி

பட மூலாதாரம், RAVI PRAKASH / BBC

தமிழகத்தைச் சேர்ந்தவரும் ஜார்கண்டில் பழங்குடியின நலன்களுக்காக குரல் கொடுத்தவருமான ஸ்டேன் சுவாமி கடந்த ஆண்டு ராஞ்சியில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட நிலையில், 2021 ஜூலை 5ஆம் தேதி காலமானார்.

84 வயதாகும் இவர் ஜார்க்கண்ட மாநிலத்தில் உள்ள பாகைய்சாவில் தனியாக வசித்து வந்தார்

பீமா கோரேகான் வழக்கில் இவருக்கு தொடர்புள்ளது என இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இவர் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் பிரிவிலும் குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

பழங்குடியின மக்களின் உரிமைக்காக பணியாற்றி வரும் ஆர்வலர் ஸ்டேன் ஸ்வாமியின் மீது பயங்கரவாத தடுப்புச் சட்டம் மற்றும் இந்தியக் குற்றவியல் சட்டத்தின் கடுமையான சில பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

’எந்த ஆணையும் வழங்காமல் விசாரணை`

ஸ்டேன் சுவாமியின் கைது குறித்து, சிவில் உரிமைகள் ஆர்வலர்கள் குழுவான ஜார்க்கண்ட் ஜனதிகர் மகாசபையை சேர்ந்த சிராஜ் தத்தா இதுதொடர்பாக பிபிசியிடம் தெரிவிக்கையில், என்ஐஏ குழுவினர் ஸ்டேன் ஸ்வாமியின் அலுவலகத்திற்கு வியாழன் மாலை வந்ததாகவும் அவரை அரை மணி நேரம் விசாரித்ததாகவும் தெரிவித்தார்.

அவர்கள் கைது செய்வதற்கான எந்த ஆணையையும் காட்டவில்லை என்கிறார் சிராஜ். ஸ்டேன் ஸ்வாமியுடன் இவர் என்ஐஏவின் அலுவலகம் சென்றுள்ளார். பல மணி நேரங்கள் கழித்து அவரை கைது செய்வதற்கான ஆணை வழங்கப்பட்டதாக தெரிவிக்கிறார்.

ஸ்டேன் சுவாமியுடன் பணியாற்றும் பீட்டர் மார்டின், "என்ஐஏ அதிகாரிகள் அவரின் உடைமைகளையும், துணியையும் கொண்டுவரச் சொன்னார்கள். இன்று இரவே கொண்டு வர வேண்டும் என்றனர். அவரை ராஞ்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போகிறார்களா அல்லது மும்பைக்கு அழைத்துச் செல்கிறார்களா என்பதைத் தெரிவிக்கவில்லை. அவர் மிக வயதானவர், உடல்நிலை சரியில்லாதவர், எனவே எங்களுக்குக் கவலையாக உள்ளது," என பிபிசியிடம் தெரிவித்தார்.

சுவாமியின் அறிக்கை

ஸ்டேன் ஸ்வாமி இதுகுறித்து அக்டோபர் 6ஆம் தேதி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில் என்ஐஏ தன்னை ஜூலை மாதம் 15 மணி நேரம் விசாரித்ததாகவும் இருப்பினும் மும்பை வர வேண்டும் என்று அழைப்பதாகவும் அதில் அவர் தெரிவித்திருந்தார்.

மேலும், "விசாரணையின்போது, எனக்கு மாவோயிஸ்ட் அமைப்பினர்களுடன் தொடர்புடையது போல கூறும் சில ஆவணங்கள் எனது கணினியிலிருந்து எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டு என் முன் வைக்கப்பட்டது. ஆனால் அது அத்தனையும் கணினியில் திருட்டுத்தனமாக புகுத்தப்பட்டது என்றும், எனக்கும் அதற்கும் தொடர்பில்லை என்றும் தெரிவித்தேன்," என அவர் கூறியிருந்தார்.

"ஆறு வார அமைதிக்குப் பிறகு நான் மும்பையில் உள்ள என்ஐஏ அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என கோரப்பட்டுள்ளது. என்னுடைய வயதையும், தற்போதுள்ள சூழலையும் கருத்தில் கொண்டு என்னால் பயணம் செய்ய இயலாது. என்ஐஏ என்னை விசாரிக்க வேண்டும் என்றால் வீடியோ கான்ஃபிரஸிங் மூலம் விசாரிக்கலாம்," என்றும் அவர் தெரிவித்திருந்தார்.

தமிழகத்தைச் சேர்ந்த ஸ்டேன் ஸ்வாமி கடந்த 30 வருடங்களாக ஜார்க்கண்ட் மாநிலத்தில் பழங்குடியின மக்களுக்காக பணியாற்றி வந்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: