அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: தலா 26 காளைகளை அடக்கிய இருவர் சிறந்த வீரர்களாக தேர்வு

ஜல்லிக்கட்டு

பட மூலாதாரம், Manoj

மதுரையில் களைகட்டிய அவனியாபுரம் ஜல்லிகட்டு போட்டியில் சிறந்த மாடு பிடி வீரர்களாக இருவர் தேர்வாகினர். இந்த போட்டியில் 60 பேருக்கு காயம் ஏற்பட்டது. ஒரு காளை உயிரிழக்க நேர்ந்தது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டி, இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

மாடு பிடி வீரர்கள் போட்டிக்கான உறுதிமொழி எடுத்துக்கொண்ட பின்னர் போட்டியை மாவட்ட ஆட்சியர் அன்பழகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாலை 4 மணிவரை 8 சுற்றுகளாக போட்டி நடைபெற்றது. இதில் 523 காளைகளும், 420 மாடுபிடி வீரர்களும் களம் கண்டனர்.

போட்டியின் முடிவில் அவனியாபுரம் பகுதியை சேர்ந்த விஜய் என்ற மாடுபிடி வீரரும் முத்துபட்டி பகுதியை சேர்ந்த திருநாவுக்கரசு என்ற மாடுபிடி வீரரும் தலா 26 காளைகளை அடக்கியதற்காக இருவரும் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு மோட்டார் பைக்குகள் பரிசாக வழங்கப்பட்டன. அத்துடன் பரிசுத் தொகை ரூபாய் ஒரு லட்சம் பகிர்ந்து வழங்கப்பட்டது.

சிறந்த காளைக்கான விருதுக்கு மதுரையை சேர்ந்த ஜி.ஆர். கார்த்திக் என்பவருக்கு சொந்தமான காளை தேர்வு செய்யப்பட்டு அதன் உரிமையாளருக்கு பைக் மற்றும் ரூபாய் ஒரு லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

எத்தனை பேருக்கு காயம்?

இந்த போட்டியில் மாட்டின் உரிமையாளர்கள், மாடு பிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 60 பேருக்கு காயம் ஏற்பட்டதால் அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதற்கிடையே போட்டியில் கலந்து கொள்வதற்காக வந்த தத்தனேரி பகுதியை சேர்ந்த ஜல்லிகட்டு காளை ஒன்று கயிறு இறுகியதால் உயிரிழந்தது.

முன்னதாக, போட்டியை பார்வையிட அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வந்திருந்தார். மாடு பிடி வீரர்களுக்கு தங்க காசு உள்ளிட்ட பரிசுகளை அவர் வழங்கினார். புதுச்சேரி முதல்வர் நாரயணசாமி, திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோரும் அவருடன் இருந்தனர். இந்த போட்டியின் நடுவே 6வது சுற்று நடைபெற்றுகொண்டிருந்தபோது மாடுபிடி வீரர்களாக வந்த வீரகுல அமரன் இயக்க நிர்வாகிகளான திருப்புவனம் பகுதியை சேர்ந்த வினோத், அவனியாபுரத்தை சேர்ந்த பால்பாண்டி ஆகிய இருவரும் அவனியாபுரம் வாடிவாசல் முன்பாக வேளாண் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடியை காட்டி போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து காவல்துறையினர் அவர்களை அழைத்துச் சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: