கொரோனா தடுப்பூசி: புதுச்சேரி முதல்வரின் திடீர் கோரிக்கை - தமிழக நிலவரம் என்ன?

  • நடராஜன் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
கொரோனா

பட மூலாதாரம், Getty Images

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் முதல் கட்டமாக வரும் 16ஆம் தேதி தொடங்கவிருக்கும் நிலையில், அது தொடர்பான மக்களின் சந்தேகங்களை களைய தாமும் தனது அமைச்சரவை சகாக்களுக்கும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பிரதமர் நரேந்திர மோதியை கேட்டுக் கொண்டுள்ளார்.

தற்போது இந்திய அரசு வகுத்துள்ள வழிகாட்டுதல்களின்படி வரும் 16ஆம் தேதி கொரோனா தடுப்பூசி போட, முன் கள மருத்துவ சுகாதார பணியாளர்கள் மட்டுமே தகுதி பெறுவார்கள். இது தொடர்பாக இந்த வார தொடக்கத்தில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் காணொளி காட்சி வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோதி, மக்கள் பிரதிநிதிகள் அவர்களுக்கான வாய்ப்பு வரும்வரை காத்திருக்க வேண்டும் என்று கூறினார்.

ஆனால், "பொது மக்கள் மத்தியில் கொரோனா தடுப்பூசிகள் தொடர்பாக சந்தேகம் இருக்கிறது. ஆகவே, அரசியல் கட்சித் தலைவர்கள், முதலமைச்சர்கள், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் முதற்கட்டமாக தடுப்பூசி போட்டுக்கொண்டால் மட்டுமே பொது மக்களுக்கு நம்பிக்கை வரும். இந்த விஷயத்தில் தாமும் தமது அமைச்சரவை சகாக்களும் தடுப்பூசி போட்டுக் கொண்டு முன்னுதாரணமாக விளங்க விரும்புவதாகவும் அதற்கு அனுமதி தர வேண்டும் என்றும் முதல்வர் நாராயணசாமி கோரிக்கை வைத்துள்ளார்.

ஆனால், அவரது கோரிக்கை தொடர்பாக பிரதமரோ இந்திய சுகாதாரத்துறையோ எந்த கருத்தையும் இதுவரை வெளியிடவில்லை.

படக்குறிப்பு,

புதுச்சேரிக்கு வந்துள்ள கொரோனா தடுப்பூசி மருந்துகள் அடங்கிய பேழைகளை சுகாதாரத்துறைனரிடம் ஒப்படைக்கும் அதிகாரி

இந்திய அரசின் கொரோனா தடுப்பூசி திட்டத்தின்படி முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக காவல், வருவாய் மற்றும் துப்புரவு துறை பணியாளர்கள், மூன்றாவது கட்டமாக 50 வயதிற்கு மேற்பட்டு நோய் தொற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசிகள் போடப்படும்.

கொரோனா தடுப்பூசி: மருத்துவ நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள்?

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தை கடந்திருக்கிறது. அதே சமயம் இந்த தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்குகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்திருக்கிறது.

இதையொட்டி புதுச்சேரிக்கு வந்தடைந்த 17,500 கோவிஷீல்ட் நிறுவன தடுப்பூசி, முதல் கட்டமாக கொரோனா முன் கள பணியாளர்களுக்குப் போடப்படும் என்று புதுச்சேரி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கோவிஷீல்ட் தடுப்பூசி குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் கூறுகையில், "புதுச்சேரிக்கு 1,750 கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. இதில் ஒவ்வொரு தடுப்பூசி மருந்திலும் 10 டோஸ்கள் உள்ளன. இதன் மூலம் 17,500 கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசிகள் டோஸ்கள் போடலாம். தற்போது இந்த மருந்துகள் புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனையில், பாதுகாப்பாக குளிர் பதனம் செய்யப்பட்டுள்ளது. ஜனவரி 16ஆம் தேதி முதல் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இருக்கும் முன்கள பணியாளர்களுக்கு ஏழு மையங்களில் இந்த கோவிஷீல்ட் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தானது புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள முன்கள சுகாதார பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவி பணியாளர்கள் என சுமார் 13,000 பேருக்கு போடப்படும்.

பட மூலாதாரம், Getty Images

குறிப்பாக இந்த கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்து செலுத்தப்பட்ட பிறகு ஒவ்வொருவரும் 30 நிமிடங்கள் கண்காணிக்கப்படுவர். இதில் தடுப்பூசி போட்டுக்கொண்ட நபருக்கு உடல் ஒத்துழைக்காத பட்சத்தில், மத்திய அரசு அறிவுறுத்திய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தயார் நிலையில் வைத்துள்ளோம்," என மோகன்குமார் தெரிவித்தார்.

"நாம் தடுப்பூசி போடும் கட்டத்தை எட்டிவிட்டோம். இது நிபுணர்கள் கூறியபடி பாதுகாப்பான தடுப்பூசி. இதை இரண்டு கட்டங்களாக செலுத்த வேண்டும். முதல் கட்டத்தில் இந்த தடுப்பு ஊசி செலுத்தப்படும் பயனர், இரண்டாவது டோஸ் போடும் நாள்வரை முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்," என புதுச்சேரி யூனியன் பிரதேச தலைமைச்செயலர் அஸ்வனி குமார் தெரிவித்தார்.

இந்த கொரோனா தடுப்பூசி, சுகாதார ஊழியர்களுக்கு முதல் கட்டமாக போடப்பட்டாலும், இதை விரிவான தடுப்பூசி திட்டத்துக்கான அடிப்படை முன்னோட்டமாகவே பார்க்கிறோம்," என்று மருத்துவ வல்லுநர்கள் கூறுகின்றனர்.

சந்தேகம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இது தொடர்பாக இந்திய மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி பிரிவு முன்னாள் செயலர் மருத்துவர் மணிகண்ட ஜோதியிடம் கேட்டபோது, "இந்த கொரோனா தடுப்பு மருந்து பாதுகாப்பானது எனது தெரிவித்திருக்கின்றனர். பொதுவாக தடுப்பு மருந்துகள் எடுத்துக்கொள்ளும் போது, அதன் பக்க விளைவுகள் ஒரு வருடத்திற்குப் பிறகு கூட தெரிய வரலாம். ஆனால், இந்த கொரோனா தடுப்பூசி எப்படிப்பட்ட தன்மை கொண்டது என்று யாருக்கும் தெரியாது. இருந்தபோதிலும் இதனால் பாதிப்புகள் இல்லாமல், கொரோனா தொற்றைக் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று கூறுகின்றனர்.

இந்திய மருத்துவ சங்கமானது ஒரு தேசிய அமைப்பு. பல்வேறு மருத்துவ ஆய்வாளர்கள், உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் ஆகியவற்றுடன் அந்த அமைப்பு கலந்து ஆலோசித்துள்ளது. மேலும் பல ஆய்வு அறிக்கைகள், விஞ்ஞான ரீதியான புள்ளி விவரங்கள் அனைத்தையும் கருத்தில் கொண்ட பிறகே கோவிட் தடுப்பூசி வழங்கும் பணியில் அரசு முழுமையாக இணைந்து செயல்படுவதாக தெரிவித்திருக்கிறது," என்கிறார் மருத்துவர் மணிகண்ட ஜோதி.

இந்தியா முழுவதிலும் உள்ள இந்திய மருத்துவ சங்கத்தின் 3.5 லட்ச உறுப்பினர்கள் தாமாக முன்வந்து தடுப்பூசியை போட்டுக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் இந்த கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது மற்றும் திறன் வாய்ந்தது என்பதை மக்களுக்கு எடுத்துக்காட்ட வேண்டும் என்று இந்திய மருத்துவ சங்கம் கூறியுள்ளதாக மருத்துவர் மணிகண்ட ஜோதி கூறுகிறார்.

"இந்த கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் உலக அளவில் மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டுள்ளன. ஆனால் இதுவரை எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை என மருத்துவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது நிலவும் சூழலில் இது தொடர்பாக கேள்வி எழுப்ப முடியாது. இந்த தடுப்பூசியை பெற்றுக்கொள்ளத்தான் வேண்டும்," என்கிறார் மருத்துவர் மணிகண்ட ஜோதி.

தமிழ்நாட்டில் என்ன நிலவரம்?

படக்குறிப்பு,

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி முன்னேற்பாடுகளை ஆய்வு செய்யும் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்த ராதாகிருஷ்ணன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், "தமிழகத்தில் வரும் 16ஆம் தேதி முதல் கோவிஷீல்ட் தடுப்பூசி மருந்தானது அனைத்து மாவட்டங்களில் உள்ள மொத்தம் 166 மையங்களில் போடப்படும். இந்தியா முழுவதிலும் சுமார் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறி இருக்கின்றனர். தமிழகத்தைப் பொறுத்தவரை 21 ஆயிரம் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பயிற்சி அளிக்கப்பட்டு தயார் நிலையில் இருக்கின்றனர். தமிழகத்திற்கு முதற்கட்டமாக 5,56,500 டோஸ் தடுப்பூசி மருந்துகள் வந்துள்ளன. அவை அனைத்தும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பாக முழுமையாகப் பாதுகாக்கப்பட்டுள்ளன," என்றார்‌.

"இந்தியாவில் 2.9 கோடி மக்களுக்கு பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்பட்டு வருகின்ற நிலையில் தடுப்பூசியைப் போட்டுக் கொள்ள மக்கள் அச்சப்பட வேண்டாம். கொரோனா தடுப்பூசி தமிழக மக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் காலம் வரும் வரை விழிப்புடன் இருக்க வேண்டும். சமூக வலைதள வதந்திகளை நம்ப வேண்டாம். இந்த தடுப்பூசி போடுவதற்காக தமிழகம் முழுவதும் 4 லட்சத்து 39 ஆயிரத்து 11 பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன," என்று ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: