கொரோனா தடுப்பூசி: மாநிலங்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது?

கொரோனா தடுப்பூசி

பட மூலாதாரம், Getty Images

கொரோனா தடுப்பூசி மருந்துகளான கோவிஷீல்டு, கோவேக்சின் ஆகியவற்றை போடுவதற்கான திட்டம் சனிக்கிழமை (ஜனவரி 16) தொடங்குகிறது. இந்த நிலையில், இந்த திட்டத்தின்போது மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எதை செய்ய வேண்டும், எதை செய்யக்கூடாது என்ற விதிகளை இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்டது.

இதன்படி 18 வயதை எட்டியவர்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். இதில் கர்ப்பிணிகள், பாலூட்டும் நிலையில் உள்ள தாய்மார்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது.

முதல் கட்டமாக எந்த தடுப்பூசி மருந்தை பயனர் பெறுகிறாரோ அதே மருந்தைதான் இரண்டாவது டோஸ் பெறும்போதும் அவர் போட்டுக் கொள்ள வேண்டும்.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவேக்சின் ஆகியவற்றின் தடுப்பூசி மருந்துகளின் முதல் டோஸுக்கும் இரண்டாவது டோஸுக்கும் 28 நாட்கள் இடைவெளி இருக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவராக இருந்தால், அவருக்கான தடுப்பூசி போடும் நடைமுறை கடுமையாக பின்பற்றப்பட வேண்டும். அதாவது தொற்றில் இருந்து மீண்டவர், குறைந்தபட்சம் நான்கு முதல் எட்டு வார இடைவெளியிலேயே தடுப்பூசியை போட வேண்டும். இதில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு பிளாஸ்மா சிகிச்சை பெற்றவர் அல்லது வேறு காரணங்களுக்காக மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களும் அடங்குவர்.

கொரோனா தடுப்பூசிக்கும் வேறு தடுப்பு மருந்து பெறுவதற்குமான இடைவெளி 14 நாட்களுக்கு இருக்க வேண்டும்.

அலர்ஜி பாதிப்புள்ளவர்களுக்கு தடுப்பூசி போடக்கூடாது.

சீரற்ற ரத்த பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசி போடும்போது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

கோவிஷீல்டு தயாரிப்பாக இருந்தால் அதன் பேழையில் தலா 10 டோஸ் மருந்துகள் இருக்கும். அதாவது ஒரு வயல் எனப்படும் பேழையில் 10 டோஸ் மருந்துகள் இருக்கும். அதுவே கோவேக்சின் தயாரிப்பு என்றால் அதில் 20 டோஸ் மருந்துகள் இருக்க வேணடும். இவற்றின் இருப்பு ஆயுள் ஆறு மாதங்களாகும்.

தடுப்பூசி மருந்து உறைநிலை அல்லது கெட்டியாக இருந்தால் அதை நிராகரிக்க வேண்டும்.

கோவேக்சின் தடுப்பூசியாக இருந்தால் அதை பயன்பாட்டுக்கு முன்பாக நன்றாக குலுக்கிய பிறகு உபயோகிக்க வேண்டும் என்று இந்திய சுகாதாரத்துறை கூறியிருக்கிறது.

இந்தியாவில் முதல் கட்டமாக போடப்படும் தடுப்பூசி, முன் கள பணியாளர்களுக்கு போடப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள 3,006 மையங்களில் 3 லட்சம் பேருககு தடுப்பூசி போடப்படுகிறது. இதற்காக மத்திய அரசு CoWIN என்ற செயலியை உருவாக்கியிருக்கிறது. அதில் பதிவு செய்தவர்களுக்கு இந்த தடுப்பூசி போடப்படுகிறது. இந்த செயலியை வெளி நபர்கள் பயன்படுத்த அனுமதியில்லை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: