நீலகிரி யானை - மனித மோதல்: தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மசினகுடி யானை மரணம்

தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட மசினகுடி யானை மரணம்

நீலகிரி மாவட்டம் மசினகுடி பகுதியில் காது மற்றும் முதுகுப் பகுதியில் தீவிர காயங்களோடு சிகிச்சைப் பெற்று வந்த 40 வயது மதிக்கத்தக்க ஆண் யானை சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தது.

இந்த ஆண்டு தொடங்கி இன்னும் ஒரு மாதம் கூட நிறைவடையாத சூழலில், தமிழகத்தின் மேற்குப் பகுதியில், தற்போது வரை மட்டுமே யானை - மனித மோதல் காரணமாக மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன.

தற்போது, மசினகுடியில் உயிரிழந்த யானையின் பிரேத பரிசோதனை நடைபெற்று வருகிறது. முன்னதாக, வனத்துறை சார்பில் யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோது அதன் காது மற்றும் முதுகுப் பகுதியில் தீவிர காயங்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

யானை மற்றும் பிற வனவிலங்குகள் மனிதர்கள் வசிக்கும் பகுதிகளுக்குள் வந்தால் அவற்றை பட்டாசு வெடித்தும், தீ பந்தங்களை காட்டியும் காட்டுக்குள் விரட்டுவர்.

அவ்வாறு இந்த யானை ஊருக்குள் வந்தபோது சிலர் அதன் மீது பெட்ரோல் ஊற்றிய சாக்கை தூக்கி எரிந்து பின்னர் நெருப்பு வைத்தாகவும், ஆசிட் போன்ற திரவங்களை வீசி காட்டுக்குள் விரட்ட முயற்சித்த போது ஏற்பட்ட காயத்தால் யானை உயிரிழந்துள்ளதாக வனவிலங்கு நல ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து பிபிசியிடம் பேசிய முதுமலை புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், தீக்காயத்தால் யானை உயிரிழந்ததாக கூறப்படுவதை முற்றிலுமாக மறுத்தார்.

"மரக்கிளைகளில் ஏற்பட்ட சிராய்ப்பு காரணமாக யானையின் முதுகுப் பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. நாளடைவில் அந்த காயம் சீல் வைத்து யானையின் நுரையீரல் வரை சென்று பாதித்துள்ளது. இதன் காரணமாகத்தான் யானை உயிரிழந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது."

"மேலும், யானையின் காதுப்பகுதியில் தீக்காயங்கள் இருப்பது உண்மைதான். ஆனால், அதனால்தான் யானை உயிரிழந்ததாக கூறப்படுவது உண்மையல்ல. இதற்கு முன்னர் யானைகள் தீக்காயங்களோடு சுற்றித் திரிவதை பார்த்ததில்லை. யானைக்கு தீக்காயங்கள் ஏற்பட காரணமானவர்களை கண்டறிய வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறோம்" என்றார்.

முன்னதாக, மசினகுடி அருகே முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள சிங்கார வனச்சரகத்திற்குட்பட்ட பகுதியில் காயங்களோடு நின்றிருந்த யானைக்கு பழங்களில் மருந்து வைத்து வனத்துறையினர் சிகிச்சை அளித்து வந்தனர். ஒரு கட்டத்தில் யானையின் காயம் குணமடையாமல், காதுப்பகுதி முழுவதுமாக கிழிந்து விழுந்தது. இதனால், யானைக்கு ரத்த போக்கு ஏற்பட்டது.

பின்னர், மயக்க ஊசி செலுத்தி கும்கி யானைகளின் உதவியோடு தெப்பக்காடு முகாமுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க வனத்துறையினர் முயற்சித்தனர். இருந்தும் யானையின் உடல்நிலை மேலும் மோசமடைந்ததால் உயிரிழந்தது.

பிரேதப் பரிசோதனை அறிக்கை என்ன சொல்கிறது?

உயிரிழந்த யானையின் பிரேதப் பரிசோதனைக்காக கொண்டுசெல்லப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் யானை காதில் ஏற்பட்ட தீக்காயங்களால் உயிரிழக்கவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், முதுகு பகுதியில் ஏற்பட்டிருந்த காயத்தில் சீழ் வைத்து நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு அதிக ரத்தப் போக்கு காரணமாக யானை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில்...

இம்மாதம் கோவை மாவட்டத்தில் உள்ள தொண்டாமுத்தூர் பகுதியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஒரு யானை பலியானது. கடந்த 15ஆம் தேதி கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பேரண்டப்பள்ளி வனப்பகுதி அருகே சாலையைக் கடக்க முயன்ற ஆண் யானை ஒன்று கண்டெய்னர் லாரி மோதியதில் பலியானது.

தற்போது, தீக்காயங்களோடு மசினகுடியில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இதனால், இந்த ஆண்டு தொடங்கிய சில நாட்களிலேயே தமிழகத்தின் மேற்குப்பகுதியில் யானை மனித மோதல் காரணமாக மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: