தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை எப்படி இருக்கிறது? - கொரோனா சிகிச்சை

தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜின் உடல்நிலை எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், @RKamarajofl facebook page

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைபெற்றுவந்த தமிழக உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜின் உடல்நிலை சற்று மேம்பட்டிருப்பதாக அவர் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காமராஜ் சிகிச்சைபெற்றுவரும் எம்.ஜி.எம். மருத்துவமனை வெளியிட்டிருக்கும் அறிக்கையில், ஜனவரி 19ஆம் தேதியன்று ராஜீவ்காந்தி அரசு தலைமை மருத்துவமனையிலிருந்து வென்டிலேட்டர் பொறுத்தப்பட்ட நிலையில் அவர் தங்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவர் அங்கு சேர்க்கப்பட்டவுடனேயே செய்யப்பட்ட சிடி ஸ்கேனில் கொரோனா பாதிப்பின் காரணமாக அவரது நுரையீரல் கடுமையான மாற்றத்திற்கு உள்ளாகியிருப்பது தெரியவந்திருந்தது. இதையடுத்து, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனால், அவரது உடல்நிலை சற்று மேம்பட்டிருப்பதாகவும் முக்கியமான உடல் நலக் குறியீடுகள் நிலையாக இருப்பதாகவும் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் ஜனவரி மாத ஆரம்பத்தில் தனது சொந்த ஊரான மன்னார்குடியில் நடைபெற்ற பொங்கல் பரிசு வழங்கும் விழாவில் பங்கேற்கச் சென்றார்.

அவற்றை முடித்துவிட்டு சென்னைக்கு காரில் திரும்பிக்கொண்டிருந்தபோது அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள மியாட் என்ற தனியார் மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், கொரோனா பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது. சில நாட்களுக்குப் பிறகு அவருக்கு கொரோனா பாதிப்பு நீங்கியது தெரியவந்ததால் அவர் வீடு திரும்பினார்.

சென்னையில் இருந்த காமராஜ் பொங்கலை ஒட்டி தனது சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆனால், அங்கு அவருக்கு மீண்டும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக சென்னை திரும்பி ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைபெற்றுவிட்டு, மீண்டும் மியாட் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

ஆனால், அங்கு நிலைமை மோசமடைந்ததால் ஜனவரி 19ஆம் தேதியன்று சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா ஐசியுவில் சேர்க்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு மூச்சுத் திணறல் இருந்த நிலையில், அவரை சுகாதாரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர், சுகாதாரத் துறைச் செயலர் உள்ளிட்டோர் சென்று பார்த்தனர்.

அன்று இரவே ராஜீவ் காந்தி மருத்துவமனையில் இருந்து, சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள எம்.ஜி.எம். மருத்துவமனைக்கு அவர் கொண்டுசெல்லப்பட்டார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் அவரை மருத்துவமனையில் சென்று பார்த்து, அவரது உடல்நலம் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இந்த நிலையில்தான் அவரது உடல்நலம் சற்று மேம்பட்டிருப்பதாக எம்.ஜி.எம். மருத்துவமனை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் ஏற்கனவே வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு, தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் ஜெ. அன்பழகன் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர். அமைச்சர்கள் தங்கமணி, செல்லூர் ராஜு, கே.பி. அன்பழகன், நிலோபர் கபில் உள்ளிட்டவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டிருக்கிறார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: