ஜெயலலிதாவின் தோழி சசிகலா பெங்களூரு மருத்துவமனையில் திடீர் அனுமதி

ஜெயலலிதாவின் தோழி சசிகலா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

கோப்புப்படம்

வரும் ஜனவரி 27ஆம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து விடுதலையாக இருக்கும் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று மாலை பெங்களூருவில் உள்ள போரிங் மருத்துவமனையில் திடீர் என அனுமதிக்கப்பட்டார்.

பரப்பன அக்ரஹார சிறையில் தண்டனை அனுபவித்து வரும் சசிகலாவின் உடல்நிலை தொடர்பாக அந்த மருத்துவமனை அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

63 வயதாகும் சசிகலா காய்ச்சல் மற்றும் சளியுடன் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் நீரிழிவு நோய் மற்றும் ஹைப்பர் தைராய்டிசம் ஆகிய இணை நோய்கள் உள்ளன என்று அந்த மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஆக்சிஜன் அளவு 79 சதவிகிதமும் காய்ச்சலுக்கான அறிகுறிகளும் இருந்தன என்று போரிங் மருத்துவமனை தெரிவித்துள்ளது.

ஆன்டிபயாடிக் மருந்துகள், ஆக்சிஜன் மற்றும் மருத்துவ உதவி நடவடிக்கைகள் மூலம் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சசிகலா தொடர்ந்து கண்காணிக்கப்படுவார் அவரது உடல்நிலை மேலும் மதிப்பீடு செய்யப்படும் என்றும் அந்த மருத்துவமனை தெரிவித்துள்ளது.

சசிகலாவுக்கு செய்யப்பட்ட உடல் பரிசோதனை முடிவுகள் இன்னும் வெளிவரவில்லை என்று மருத்துவமனை தெரிவிக்கிறது.

வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில், சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி, வி.என்.சுதாகரன் ஆகியோர் பெங்களூரில் உள்ள பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெண்கள் சிறை வளாகத்தில் உள்ள சிறையில் சசிகலா, இளவரசி ஆகியோர் அடைக்கப்பட்டுள்ளனர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: