விவசாயிகள் போராட்டம்: டெல்லியில் போக்குவரத்து துண்டிப்பு - இணைய சேவை முடக்கம்

விவசாயிகள்

பட மூலாதாரம், Getty Images

வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் மேற்கொண்ட டிராக்டர் பேரணி சில இடங்களில் வன்முறையாக உருவெடுத்துள்ளதை அடுத்து டெல்லி முழுவதும் பரபரப்பான சூழ்நிலை நிலவுகிறது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெல்லியின் பெரும்பாலான பிரதான சாலைகள் மறுஉத்தரவு வரும்வரை மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், தீவிரமடைந்து வரும் போராட்டத்தை கருத்திற்கொண்டு டெல்லியின் முக்கிய பொதுப் போக்குவரத்தான மெட்ரோ ரயில் சேவையும் பல இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, கிரே நிற வழித்தடம் முழுவதும் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக டெல்லி மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளின் போராட்டத்தை கட்டுப்படுத்தும் விதமாக டெல்லியில் பதற்றம் நிலவும் பல்வேறு இடங்களில் இன்று நள்ளிரவு வரை இணைய சேவையை முடக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுளளதாக ஏ.என்.ஐ. முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

டெல்லி காவல்துறை வேண்டுகோள்

இந்நிலையில் போராட்டக்காரர்கள் அமைதியாக டெல்லியில் இருந்து எல்லைப்பகுதிக்கு திரும்ப வேண்டுமென்று டெல்லி காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

"போராட்டக்காரர்கள் சில இடங்களில் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் காவல்துறையை சேர்ந்த பலர் காயமடைந்தனர்; பொது சொத்துக்களும் சேதமடைந்தன. தேவைப்பட்ட சூழ்நிலையில் மட்டுமே காவல்துறையினர் பயன்படுத்தப்பட்டனர். ஏற்கனவே, திட்டமிடப்பட்ட சாலைகள் வழியாக திரும்பி அமைதியை காக்குமாறு போராட்டக்காரர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று டெல்லி காவல்துறையின் மக்கள் தொடர்பு அதிகாரியான ஈஷ் சிங்கால் தெரிவித்துள்ளதாக ஏ.என்.ஐ முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக கருத்துத் தெரிவித்துள்ள டெல்லியின் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவாஸ்தவா, "டிராக்டர் பேரணிக்கான நேரம் மற்றும் வழிகள் பல சுற்று கூட்டங்களுக்குப் பிறகு இறுதி செய்யப்பட்டன. ஆனால் விவசாயிகள் டிராக்டர்களை மாற்று வழித்தடங்களிலும், குறிப்பிட்ட நேரத்திற்கு முன்பும் பேரணியை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையின் காரணமாக காவல்துறையினர் பலர் காயமடைந்தனர்" என்று ஏ.என்.ஐ. செய்தி முகமை செய்தி வெளியிட்டுள்ளது.

"இந்த வன்முறையால் பொது சொத்துக்களும் சேதமடைந்துள்ளன. போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகளிடம் வன்முறையில் ஈடுபட வேண்டாம், அமைதியை நிலைநாட்டவும், திட்டமிடப்பட்ட சாலைகள் வழியாகவும் திரும்ப நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி கண்டனம்

பட மூலாதாரம், Getty Images

விவசாயிகள் பேரணியில் வன்முறை நிகழ்ந்தது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் மத்திய அரசு நிலையை கையை மீறி செல்லவிட்டது குறித்து வருத்தமளிப்பதாகவும் அக்கட்சி தெரிவித்துள்ளது.

அந்த கட்சியின் அறிக்கையில், "கடந்த இரு மாதங்களாக அமைதியான முறையில் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. வன்முறையில் ஈடுபட்டவர்கள் போரட்டக் குழுவை சேர்ந்தவர்கள் அல்ல வெளி நபர்கள் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர். அது யாராக இருந்தாலும், அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் நடந்து கொண்டிருந்த போராட்டத்தை வலுவிழக்க செய்துவிட்டனர்," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எல்லைக்கு திரும்புக"

டெல்லியில் நிலவும் காட்சிகள் அதிர்ச்சியளிப்பதாக பஞ்சாப் மாநில முதல்வர் அமரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், "சிலர் வன்முறையில் ஈடுபட்டது ஏற்றுக்கொள்ள முடியாதது. இது விவசாயிகளின் அமைதியான போராட்டத்தால் உருவான நல்லெணத்தை சீர்குலைக்கும். வன்முறை சம்பவங்களிலிருந்து தங்களை விலக்கிக்கொண்டுள்ள விவசாய சங்கங்களின் தலைவர்கள் டிராக்டர் பேரணியை நிறுத்தியுள்ளனர். எனவே, நான் அனைத்து உண்மையான விவசாயிகளையும் டெல்லியிலிருந்து கிளம்பி எல்லைக்கு செல்லுமாறு கேட்டுக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக தலைநகர் டெல்லியில் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒன்றான செங்கோட்டைக்குள் விவசாயிகள் நுழைவதை தடுக்கும் வகையில், அதன் வெளிப்புறத்தில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டிருந்த நிலையில், அதையும் மீறி செங்கோட்டை வளாகத்துக்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் தங்களது வசமிருந்த கொடியை அங்குள்ள கம்பத்தில் ஏற்றி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :