நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூக்கி வழக்கில் `இத்தகையோருக்குப் பாதுகாப்பு கிடைக்கக்கூடாது` என்று கூறிய நீதிபதி – என்ன நடந்தது?

  • ஷுரைஹ் நியாஸி
  • பிபிசிக்காக, போபாலிலிருந்து
முனாவர் ஃபாரூக்கி

பட மூலாதாரம், FACEBOOK / MUNAWAR FARUQUI

நகைச்சுவை நடிகர் முனாவர் ஃபாரூக்கியின் ஜாமீன் மனு மீது மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் இந்தூர் கிளை திங்கள்கிழமைக்குத் தீர்ப்பை ஒத்திவைத்தது. எனவே, அவர் இன்னும் சில நாட்கள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும்.

யார் இந்த முனாவர் ஃபாரூக்கி?

முனாவர் ஃபாரூக்கி ஒரு `ஸ்டாண்டப் காமெடியன்` . இவரின் இன்ஸ் டாகிராம் பதிவிகள் பிரபலமானவை. இவர் ஜனவரி முதல் தேதி இந்தூர் போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவரைத் தவிர, மேலும் 4 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இந்து தெய்வங்களை அவதூறு செய்ததாகவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மீது அநாகரீகமான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

முனாவர் ஃபாரூக்கி இந்தூரில் உள்ள முனரோ கஃபே-வில் நிகழ்ச்சி நடத்த வந்திருந்தார். ஹிந்த் ரக்ஷக் கூட்டமைப்பின் தலைவர்களும் அங்கு வந்ததில் பதற்றம் உருவானது.

நிகழ்ச்சி அமைப்பாளரும் நகைச்சுவை நடிகரும் பின்னர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அப்போது முதல், முனாவர் ஃபாரூக்கி சிறையில் தான் உள்ளார். அவர், பல முறை ஜாமீனுக்கு விண்ணப்பித்துள்ளார்.

பட மூலாதாரம், FACEBOOK / MUNAWAR FARUQUI

திங்களன்று, நீதிபதி ரோஹித் ஆர்யாவின் தனி நபர் அமர்வு, "மற்றவர்களின் மத உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக நடந்தது ஏன்? என்ன மன நிலையில் அவ்வாறு செய்கிறீர்கள்? உங்கள் தொழில் லாபத்துக்காக இப்படிச் செய்வது எவ்வகையில் நியாயம்? என்ற கேள்விகளை எழுப்பியது.

முனாவர் ஃபாரூக்கி சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விவேக் தன்கா, "இந்த வழக்கில் அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. அவருக்கு ஜாமீன் வழங்கப்பட வேண்டும்" என்று வாதாடினார்.

"இப்படிப் பட்டவர்களை விட்டு விடக் கூடாது"

நீதிபதி ரோஹித் ஆர்யா, "இதுபோன்றவர்களை விட்டுவிடக்கூடாது. தகுதியின் அடிப்படையில் இதன் தீர்ப்பை நான் ஒத்திவைக்கிறேன்" என்றார்.

ஃபாரூக்கியுடன் கைது செய்யப்பட்ட மற்ற 4 பேர் எட்வின் அந்தோணி, பிரகர் வியாஸ், பிரியம் வியாஸ் மற்றும் நலின் யாதவ்.

ஃபாரூக்கியின் இந்த நிகழ்ச்சிக்கு பாஜக எம்எல்ஏ மாலினி கவுரின் மகன் ஏக்லவ்யா சிங் கவுரும் வந்திருந்தார். தானும் தனது நண்பர்களும் அந்த நிகழ்ச்சிக்குச் சென்றதாகவும், அந்த நேரத்தில் ஃபாரூக்கி அநாகரீகமான கருத்துக்களைத் தெரிவித்ததாகவும் கவுர் கூறியிருந்தார். கவுர் ஹிந்த் ரக்ஷக் கூட்டமைப்பின் நிருவனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

"நிகழ்ச்சியின் போது சமூக இடைவெளியும் பராமரிக்கப்படவில்லை, கோவிட் தொற்றுக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் பின்பற்றப்படவில்லை," என்று அவர் குற்றம் சாட்டினார்.

கவுரும் அவரது கூட்டாளிகளும் ஃபாரூக்கியையும் அவரது கூட்டாளிகளையும் தாக்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது, ஆனால் கவுர் இதை மறுத்துள்ளார்.

ஜாமீன் கிடைத்தாலும் சிக்கல் தீராது

பட மூலாதாரம், FACEBOOK

திங்களன்று நீதிமன்றத்தில் ஆஜரான ஒரு வழக்கறிஞர், "முனாவர் ஃபாரூக்கி இந்துக் கடவுள்கள் குறித்து விரும்பத்தகாத கருத்துகள் வெளியிட்ட பல காணொலிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன," என்று கூறி ஜாமீன் மனுவை எதிர்த்தார்.

இதன் காரணமாக மற்ற நகைச்சுவை நடிகர்களும் இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

காவல் துறையினர் வழக்கு ஆவணங்களைச் சமர்ப்பிக்காததால், உயர் நீதிமன்றத்தில் சென்ற வாரம், இந்த வழக்கு விசாரணக்கு எடுத்துக்கொள்ளப்படவில்லை. முன்னதாக, ஜனவரி 5 ஆம் தேதி, அவரது ஜாமீன் மனுவை அமர்வு நீதிமன்றம் நிராகரித்தது குறிப்பிடத்தக்கது.

ஆனால் முனாவர் ஃபாரூக்கி ஜாமீன் பெற்றாலும் சிக்கல்கள் தொடரும். உத்தரபிரதேசத்தின் பிரயாகராஜ் காவல் துறை, மிகவும் பழைய வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கான ஆணையைப் பிறப்பித்தது. கடந்த வாரம், இந்தூர் மாவட்டத் தலைமை நீதிபதிக்கும் இந்தூர் மத்திய சிறை அதிகாரிக்கும் இந்த ஆணையைச் சமர்ப்பித்தது காவல் துறை.

ஏப்ரல் 19, 2020 அன்று, ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆஷுதோஷ் மிஷ்ரா, முனாவர் ஃபாரூக்கி மீது ஒரு வழக்கு தொடர்ந்தார். அதில், அவர் மத உணர்வுகளைத் தூண்டுவதாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்தது. அவர் சமூக ஊடகங்களில் தனது வீடியோ ஒன்றில், இந்து கடவுளர்கள் குறித்தும் கோத்ரா ரயில் படுகொலையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தும் கேலியாகப் பேசியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ஃபாரூக்கி மீது வழக்கு பதிவு செய்யப்பட்ட ஒன்பது மாதங்களுக்கு பிரயாகராஜ் காவல்துறை எதுவும் செய்யவில்லை. ஆனால் இந்தூர் வழக்கு வெளிச்சத்துக்கு வந்த பிறகு, பிரயாகராஜ் காவல்துறை தனது நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளது.

இந்தூரில் நிவாரணம் கிடைத்தாலும், ஃபாரூக்கி உத்தரபிரதேச சிறையிலும் சிறிது காலம் கழிக்க வேண்டும் என்பதற்காகவே இந்த நடவடிக்கை என்று அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :