தமிழக சட்டப்பேரவை கூட்டம்: ஆளுநர் உரையில் இருந்த முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?

பன்வாரிலால் புரோகித்

பட மூலாதாரம், Twitter

படக்குறிப்பு,

பன்வாரிலால் புரோகித்

இந்த ஆண்டிற்கான முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் இன்று ஆளுநர் உரையுடன் துவங்கியது. ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தனது உரையை ஆங்கிலத்தில் வாசித்தார். அவர் வாசித்து முடித்தவுடன், அதனை சபாநாயகர் தனபால் தமிழில் வாசித்தார்.

தமிழக ஆளுநர் உரையில் இடம்பெற்றிருந்த முக்கிய அம்சங்கள்:

1. கோவிட்டிற்கு எதிராக அனைத்து அரசுத் துறைகளையும் ஒருங்கிணைத்த பெருமை முதலமைச்சரையே சாரும். சரியான நேரத்தில் தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. கோவிட் நோயை எதிர்கொள்ள பொது சுகாதார கட்டமைப்பில் பெருமளவில் முதலீடு செய்யப்பட்டு, அது பலனளித்தது.

2. தற்போது கோவிட் தடுப்பூசி சுகாதாரப் பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த கட்டமாக முன்களப் பணியாளர்களுக்கும் அளிக்கப்படும்.

3. தமிழ்நாட்டின் உரிமைகளை அரசு தொடர்ந்து பாதுகாக்கும். காவிரியிலோ, அதன் கிளை நதிகளிலோ அணைகளியோ, திசை திருப்பும் அமைப்புகளை கட்டக்கூடாது என மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. கர்நாடக அரசால் முன்மொழியப்பட்ட மேகதாது அணை திட்டத்தை நிராகரிக்க வேண்டும்.

4. முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்த தேவையான அனுமதிகளை மத்திய அரசும் கேரள அரசும் வழங்க வேண்டுமென கேட்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

முல்லைப் பெரியாறு அணை

5. காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் முதற்கட்டமாக காவிரி - வெள்ளாறு இணைப்புப் பணிகள் விரைவில் துவங்கப்படும். மேட்டூர் அணையின் உபரி நீரைக் கொண்டு 100 வறண்ட ஏரிகளை நிரப்பும் சரபங்கா நீரேற்றுப் பாசனத் திட்டத்தின் பணிகள் மார்ச் மாதத்திற்குள் நிறைவடையும்.

6. தமிழக மீனவர்களின் படகின் மீது இலங்கைக் கடற்படையினரின் படகு மோதிய விவகாரத்தை இலங்கை அரசிடம் எடுத்துச் செல்ல மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. 12 மீனவர்களையும் மீட்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

7. தமிழ்நாடு அரசு, ஒரே நாடு - ஒரே குடும்ப அட்டை திட்டத்தைச் செயல்படுத்தியிருக்கிறது. குறு, சிறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்கும் வகையில், தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழகத்தில் தமிழக அரசு 1,000 கோடி ரூபாயை மூன்று ஆண்டுகளில் முதலீடு செய்யும்.

8. மாநிலத்தில் உள்ள மூன்றில் ஒரு பங்கு கிராமங்களில் மார்ச் மாத இறுதிக்குள்ளும் மீதமுள்ள கிராமங்களில் நவம்பர் மாத இறுதிக்குள்ளும் பாரத் நெட் திட்டம் செயல்படுத்தப்படும்.

9. வண்ணாரப்பேட்டையிலிருந்து விம்கோ வரையிலான மெட்ரோ நீட்டிப்பு வழித்தடம் இம்மாத இறுதியில் பிரதமரால் துவக்கிவைக்கப்படும்.

10. ஊரகப் பகுதிகளில் வீடற்ற ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திற்கும் கான்க்ரீக்ட் கூரையுடன் வீடும், நகர்ப்புறப் பகுதிகளில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடும் வழங்கப்படும்.

11. 2014- 2018க்குள் தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் எண்ணிக்கை 224லிலிருந்து 269ஆக உயர்ந்துள்ளது.

12. மொழிச் சிறுபான்மையினருக்கு பிரதிநிதித்துவம் அளிக்கும் வகையில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவாக்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

கூட்டத்தொடரைப் புறக்கணிக்க தி.மு.க. முடிவு

தமிழக சட்டசபையின் 2021ஆம் ஆண்டுக்கான முதல் சட்டப்பேரவைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் துவங்கியுள்ளது. ஆளுநர் உரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தி.மு.க. வெளிநடப்புச் செய்ததோடு, கூட்டத்தொடரைப் புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது.

சட்டப்பேரவைக் கூட்டம் செவ்வாய்க்கிழமையன்று காலை 11 மணிக்கு கூடியது. சமூக இடைவெளி இருக்க வேண்டும் என்பதற்காக கடந்த முறையைப் போலவே இந்த முறையும் கலைவாணர் அரங்கத்தில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உரையுடன் கூட்டம் துவங்கியது. காலையில் ஆளுநர் தனது உரையை படிக்கத் துவங்குவதற்கு முன்பாக தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பேச முயற்சித்தார். அதற்கு ஆளுநர் அனுமதிக்கவில்லை.

"நேற்று மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் உட்கட்டமைப்புத் திட்டங்களுக்கு ஒரு லட்சம் கோடிக்கு மேல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் வளம் பெறும்" என்றார் ஆளுநர். இதற்கு தி.மு.கவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.

இதில் எதிர்ப்புத் தெரிவிக்க என்ன இருக்கிறது என்று கேள்வியெழுப்பிய ஆளுநர், தி.மு.கவினர் எதிர்ப்புத் தெரிவிக்க விரும்பினால் வெளிநடப்புச் செய்துவிட்டு, மீண்டும் வரலாம் என்றார். தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.கவினர் பிறகு வெளிநடப்புச் செய்தனர்.

வெளியில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க. ஸ்டாலின், "2015ஆம் ஆண்டு மத்திய பட்ஜெட்டில் மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படுமென அறிவித்தார்கள். பிறகு 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோதி அதற்கு அடிக்கல் நாட்டுவிழா என்ற நாடகத்தை நடத்தினார். இதுவரைக்கும் அந்தப் பகுதியில் ஒரு செங்கலைக்கூட எடுத்துவைக்கவில்லை. இதுதான் பட்ஜெட்டில் அறிவிக்கக்கூடிய லட்சணம். இது மக்களுக்கான பட்ஜெட் இல்லை. கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான பட்ஜெட்.

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு,

மு.க. ஸ்டாலின்

இப்போது ஆளுநர் பேசியதிலேயே மிகவும் பிடித்தது என்னவென்றால், உட்காருங்க, இதுதான் கடைசி பட்ஜெட் என்றார். அதுதான் உண்மை. அதை வரவேற்கிறோம். ஆளுநர் உரையை நாங்கள் புறக்கணிப்பதாக முடிவுசெய்துள்ளோம்.

கடந்த டிசம்பர் 22ஆம் தேதி ஆளுநரைச் சந்தித்து இந்த அ.தி.மு.க. அரசு மீது, முதல்வர், அமைச்சர்கள் மீது ஊழல் புகார்களை ஆதாரங்களோடு கொடுத்திருக்கிறோம். இதுவரை ஆளுநர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவர் அமைச்சர்களுக்கு துணை நிற்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது.

இதுதவிர, பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்றி அனுப்பி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. அதிலும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இதனையும் கண்டித்து இந்தக் கூட்டத் தொடர் முழுவதையும் புறக்கணிக்கிறோம். அமைச்சர்கள் ஓராண்டு பட்ஜெட்டிற்குத் தேவையான அளவுக்கு கொள்ளையடித்துள்ளனர். இதைப் பேச அனுமதிக்கமாட்டார்கள். ஆகவே மக்கள் மன்றத்திற்குச் செல்லவிருக்கிறோம்." என்று தெரிவித்தார்.

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடர்ந்து தனது உரையைப் படித்து வருகிறார். ஆளுநர் தனது உரையைப் படித்து முடித்ததும் சபாநாயகர் ப.தனபால் அதனை தமிழில் வாசிப்பார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: