ஜெயலலிதா தோழி சசிகலா சென்னை வந்தார்: வரவேற்பு அளித்தவர்கள் அதிமுகவில் இருந்து நீக்கம் - தமிழ்நாடு அரசியல்

பட மூலாதாரம், Ani twitter page
சொத்துக் குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட வி.கே. சசிகலா திங்கட்கிழமையன்று புறப்பட்டு செவ்வாய்க்கிழமை அதிகாலையன்று சென்னையை வந்தடைந்தார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டிக்கப்பட்டு பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் தோழி வி.கே. சசிகலாவுக்கு விதிக்கப்பட்டிருந்த 4 ஆண்டுகால சிறை தண்டனைக் காலம் கடந்த ஜனவரி 27ஆம் தேதி முடிவுக்குவந்தது.
ஆனால், தன் தண்டனைக் காலத்தின் கடைசி சில நாட்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், பெங்களூரில் இருந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைபெற்றார். கொரோனாவிலிருந்து குணமடைந்த பிறகு சில நாட்கள் கர்நாடக மாநிலத்திலேயே தங்கியிருந்தார் சசிகலா.
இதற்குப் பிறகு, திங்கட்கிழமையன்று காலையில் பெங்களூருக்கு அருகில் உள்ள தேவனஹள்ளியிலிருந்து புறப்பட்டார் சசிகலா. அவருக்குப் பின்னால் வந்த வாகனத்தில் டி.டி.வி. தினகரன் பயணம் செய்தார். பெங்களூர் - சென்னை இடையிலான வழிநெடுக சசிகலாவின் ஆதரவாளர்களும் அ.ம.மு.க. தொண்டர்களும் அவருக்கு வரவேற்பளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
சசிகலாவின் பயணத் திட்டத்திற்கு கிருஷ்ணகிரி மாவட்ட காவல்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்ததால், பெங்களூர் - தமிழக எல்லைவரை, தன்னுடைய காரிலேயே அ.தி.மு.க. கொடியுடன் வந்தவர் தமிழக எல்லைக்குள் வந்தவுடன், அ.தி.மு.க. கொடி கட்டப்பட்டிருந்த அக்கட்சியின் நிர்வாகி ஒருவரின் காரில் ஏறி, அந்த வாகனத்திலேயே சென்னை நோக்கிய பயணத்தைத் தொடர்ந்தார்.
பெங்களூர் முதல் சென்னை வரை சசிகலாவுக்கு 56 இடங்களில் வரவேற்பளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், தேவனஹள்ளியிலிருந்து சென்னை இடையிலான சுமார் 380 கி.மீ. தூரத்தை அவர் கடக்க 20 மணி நேரத்திற்கும் மேலானது.
பட மூலாதாரம், BBC / MADAN PRASAD
தமிழக - கர்நாடக எல்லையில் சசிகலாவை வரவேற்று வைக்கப்பட்டிருந்த பதாகை
வாணியம்பாடி அருகில் வாகனத்தை நிறுத்தி பேசிய சசிகலா, அடக்கு முறைக்குத் தான் அடிபணியப் போவதில்லை என்றும் நிச்சயமாக தொடர்ந்து அரசியலில் ஈடுபடப்போவதாகவும் தெரிவித்தார்.
ஓரிடத்தில் கிரேன் மூலம் அவரது வாகனத்திற்கு மிகப் பெரிய மாலை அணிவிக்கப்பட்டது. சாலையின் பல்வேறு இடங்களில் காத்திருந்த தொண்டர்கள் சசிகலாவின் வாகனம் மீது பூக்களை வீசினர். ட்ரோன் மூலம் சசிகலா படம் பொறிக்கப்பட்ட பதாகை ஓரிடத்தில் பறக்கவிடப்பட்டது.
அதிகாலை மூன்றே முக்கால் மணியளவில் சென்னை நகருக்குள் நுழைந்த சசிகலாவின் வாகன ஊர்வலம், 4.15 மணியளவில் ராமாபுரத்தில் உள்ள எம்.ஜி.ஆரின் இல்லத்தை வந்தடைந்தது. அங்கு எம்.ஜி.ஆரின் இல்லத்திற்குள் சென்று சிறிது நேரம் அமர்ந்திருந்த சசிகலா, பிறகு அங்கிருந்த எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலையிட்டார்.
பிறகு, அங்கிருந்து புறப்பட்டு தி.நகரில் உள்ள தனது உறவினரி வீட்டிற்கு காலை ஆறே முக்கால் மணியளவில் சென்றடைந்தார் சசிகலா.
இவரது பயண ஊர்வலத்தின் காரணமாக, வழியெங்கும் பல இடங்களில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. எம்.ஜி.ஆர். இல்லத்திலிருந்து சசிகலா புறப்பட்ட பிறகு அரை மணி நேரத்திற்கும் மேலாக போரூர் முதல் கிண்டி மேம்பாலம் வரையிலான சாலையில் கடுமையான போக்குவரத்து நெரிசல் நீடித்தது.
இதற்கிடையில், சசிகலாவுக்கு வாகனம் மற்றும் வரவேற்பு அளித்தவர் உள்பட ஏழு அ.தி.மு.க. நிர்வாகிகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருப்பதாக அக்கட்சி அறிவித்துள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: