அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34,000 மோசடி

அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளிடம் ஆன்லைன் மூலம் ரூ.34,000 ஏமாற்றிய நபர்

பட மூலாதாரம், Pti

இந்திய நாளிதழ்கள் மற்றும் அவற்றின் இணையப் பக்கங்களில் வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம்.

அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளை ஏமாற்றிய நபர்

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகளை ஒரு நபர் ஆன்லைன் மூலம் 34 ஆயிரம் ரூபாய் ஏமாற்றியுள்ளார் என்று தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் கடந்த திங்களன்று இணையதளம் ஒன்றின் மூலமாக ஒரு பழைய சோஃபாவை விற்பதற்கான விளம்பரத்தை செய்துள்ளார்.

அதை வாங்க முன் வருவதாகக் கூறிய நபர் ஒருவர் அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் ஹர்ஷிதா அளித்திருந்த வங்கிக் கணக்கில் சிறிய தொகை ஒன்றை செலுத்தியுள்ளார்.

அதன் பின்னர் அந்த சோஃபாவை வாங்குவதற்கு அரவிந்த் கேஜ்ரிவாலின் மகள் கூறிய தொகையைத் தருவதாக கூறி க்யூ.ஆர் கோடு (QR Code ) ஒன்றை ஸ்கேன் செய்யுமாறு அவரிடம் தெரிவித்துள்ளார்.

ஆனால் ஹர்ஷிதாவின் வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் ரூபாய் அவரது கணக்குக்கு மாறியது.

இது குறித்து ஹர்ஷிதா கேள்வி எழுப்பிய பொழுது தவறாக வேறு க்யூ.ஆர் கோடு அனுப்பி விட்டதாகவும் புதிய க்யூ.ஆர் கோடு ஒன்றை ஸ்கேன் செய்யுமாறும் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது முறையாக ஸ்கேன் செய்தபோது 14,000 ரூபாய் அவரது கணக்கிலிருந்து பறிபோனது.

ஹர்ஷிதா அளித்த புகாரின் பேரில் தற்போது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில்69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கில், மத்திய அரசுவரும் பிப்ரவரி 17ஆம் தேதிக்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது என்கிறது இந்து தமிழ் திசை செய்தி.

தமிழகத்தைச் சேர்ந்த மாணவிகள் சிலர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த வழக்கில், "தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்."

"எனவே தமிழக அரசின் 69 சதவீத இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும். அத்துடன் இந்த வழக்கை மகாராஷ்டிரா மாநில இடஒதுக்கீடு தொடர்பான வழக்குடன் சேர்த்து அரசியல் சாசன அமர்வு விசாரிக்க உத்தரவிட வேண்டும்," எனக் கோரியிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கில் தமிழக அரசு தாக்கல் செய்திருந்த பதில் மனுவில், ''சாதி வாரியான கணக்கீடு என்பது தமிழகத்தில் மட்டுமே உள்ளது. அந்த சாதிவாரி கணக்கீட்டின் அடிப்படையில்தான் தமிழகத்தில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் பின்தங்கியவர்களுக்கு 69 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தமிழக அரசின் இந்த 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. ஆனால் மகாராஷ்டிர மாநில இடஒதுக்கீட்டுக்கு அந்த ஒப்புதல் பெறப்படவில்லை," என தெரிவித்திருந்தது.

கல்லூரிகள் மீண்டும் தொடக்கம்

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 11 மாதங்களுக்கு பிறகு அனைத்து கலை, அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகள் திறக்கப்பட்டன என்று தினத்தந்தி செய்தி தெரிவிக்கிறது.

கொரோனா தொற்று காரணமாக பள்ளி, கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டு இருந்தன.

நோய்த்தொற்றின் தாக்கம் சற்று குறைந்ததன் காரணமாக கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டன.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: