தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: சசிகலா வருகை, மெளனம் காக்கும் எடப்பாடி பழனிசாமி - அடுத்த அதிரடியை விளக்கும் ஜெய்ஆனந்த்
- ஆ. விஜயானந்த்
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், JAIANAND
சென்னை தியாகராய நகரில் உள்ள இளவரசியின் மகள் கிருஷ்ணபிரியாவின் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் வி.கே.சசிகலா. திங்கள்கிழமையன்று பெங்களூரு தேவனஹள்ளியில் இருந்து புறப்பட்ட அவருக்கு வழிநெடுகிலும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
`அவரது வருகை அ.தி.மு.க-வில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும்?' என்பது குறித்து சசிகலாவின் சகோதரரான திவாகரனின் மகன் ஜெய் ஆனந்திடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.
கேள்வி: நான்காண்டு சிறைவாசத்துக்குப் பிறகு வி.கே.சசிகலா வெளியில் வந்திருக்கிறார். எப்படிப் பார்க்கிறீர்கள்?
பதில் : இன்றுதான் அவர் தமிழகம் வந்திருக்கிறார். தொண்டர்கள் அளித்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். இதன்பிறகு அடுத்து மேற்கொள்ள வேண்டிய பணிகளைத் திட்டமிட இருக்கிறார். குடும்பத்தினருடன் செலவிடும் அளவுக்கு அவருக்கு நேரம் இல்லை.
கே: சசிகலாவின் வருகை அ.தி.மு.க-வில் ஏதேனும் விளைவுகளை ஏற்படுத்துமா?
ப: அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் அவரது வருகையால் உற்சாகத்தில் உள்ளனர். `பிளவுபட்டிருந்தால் தேர்தலில் எதையும் சாதிக்க முடியாது. தி.மு.க வெற்றிபெறுவதற்கு வழி ஏற்படுத்திவிடக் கூடாது' என்பதில் தொண்டர்கள் உறுதியாக உள்ளனர். பொதுவாக, இங்கே "ஆப்ஷன்" என்று எதுவும் இல்லை. சின்னம்மா களமிறங்கினால் மட்டுமே தி.மு.க-வை வீழ்த்த முடியும். அது அவர்களால் மட்டுமே சாத்தியமாகும். மனிதர்கள் உயிர்வாழ குடிநீர் எப்படித் தேவையோ, அதுபோலத்தான் சின்னம்மாவின் தேவையும். `அவர் தேவையில்லை' என்று யாராவது சொன்னால், `நான் சாகும் வரையில் தண்ணீரே குடிக்க மாட்டேன்' எனக் கூறுவது போலத்தான் பார்க்க வேண்டும். அ.தி.மு.க-வுக்குள் அவர் வர வேண்டாம் என்று யார் சொன்னாலும் இந்தப் பதில்தான்.
கே: `சசிகலா வருகையால் சட்டம்-ஒழுங்கு சீர்கெடும்' என அமைச்சர்கள் சி.வி.சண்முகம், ஜெயக்குமார், அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்டோர் டிஜிபியை சந்தித்து மனு கொடுத்தார்களே?
ப: சட்டம் ஒழுங்கு அவர்களின் கைகளில் இருக்கிறது. நாங்கள் பெங்களூருவில் இருந்து காரில் வந்து கொண்டிருந்தபோது, சாலையின் குறுக்கே கண்டெய்னர் லாரியை நிறுத்தினார்கள். அந்த கண்டெய்னரின் சாவியைத் தூக்கிக் கொண்டு அதன் டிரைவர் ஓடுகிறார். தமிழகத்துக்குள் சசிகலா வருவதை முடிந்த வரையில் தடுக்கப் பார்த்தார்கள். தொண்டர்கள் ஏராளமானோர் குவிந்ததுதான் இதற்குக் காரணம். இதையெல்லாம் தாண்டித்தான் அவர் சென்னை வந்தார்.
பட மூலாதாரம், JAIANAND
கே: `அ.தி.மு.க-வின் அடிப்படை உறுப்பினராகக்கூட சசிகலா கிடையாது' என அ.தி.மு.க அமைச்சர்கள் பேசுகிறார்களே?
ப: அ.தி.மு.க பொதுச் செயலாளராக இருந்த காலகட்டத்தில் சி.வி.சண்முகத்துக்கு மாவட்டச் செயலாளர் பதவியைக் கொடுத்ததே சின்னம்மாதான். நான் ஒரு விஷயத்தைச் சொல்ல விரும்புகிறேன். சின்னம்மாவை `அம்மா', `அம்மா' என்று அழைத்தார் சி.வி.சண்முகம். ஒருகட்டத்தில் அவரை `என் தாய்' எனவும் பேசினார். இப்படியெல்லாம் பேசிவிட்டு திடீரென இவ்வாறு பேசுகிறவர்களை எல்லாம் எந்தப் பட்டியலில் சேர்ப்பது என்றே தெரியவில்லை.
கே: உங்கள் பதிலில் இருந்தே கேட்கிறேன். `அம்மா' என அழைத்துவிட்டு தற்போது தங்கள் நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் அமைச்சர்களுக்கு ஏன் வந்தது?
ப: அவர்களது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதற்கு அவசியம் எதுவும் இல்லை. இவை அனைத்தும் தங்களின் சொந்த லாபத்துக்கு அவர்கள் செய்யக் கூடிய விஷயங்கள். என்ன திட்டத்துக்காக இவ்வாறு செய்கிறார்கள் எனத் தெரியவில்லை. இதன்பிறகு, `அ.தி.மு.க உயிர்த்தெழக் கூடாது' என்பதற்காக செய்கிறார்களா எனவும் தெரியவில்லை. அவர்களின் நோக்கம் எல்லாம், `அ.தி.மு.க அழிந்துவிட வேண்டும்' என்பதுதான். இவர்கள் எல்லாம் மாவட்ட செயலாளர், அமைச்சர் எனப் பல பதவிகளை அனுபவித்துவிட்டார்கள். இந்த இயக்கத்தை நம்பி ஏராளமான தொண்டர்களும் இளைஞர்களும் உள்ளனர். அவர்களும் பதவிக்கு வந்து மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள். அவர்களின் கனவுகளோடும் இவர்கள் விளையாடுகிறார்கள்.
கே: அமைச்சர்களின் பின்னணியில் பா.ஜ.க தூண்டுதல் இருக்கலாம் என கூறப்படுகிறதே?
ப: இதன் பின்னணியில் பா.ஜ.க இருப்பதற்கு வாய்ப்பில்லை.
கே: `கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்த நினைப்பவர்கள் எண்ணம் பலிக்காது' என அமைச்சர்கள் பேசுகின்றனர். உண்மையில் சசிகலாவின் வருகை தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா?
ப: என்ன மாதிரியான சலசலப்பு என்பதை தமிழ்நாடு பார்த்துக் கொண்டுதான் இருக்கிறது. பெங்களூருவில் இருந்து சசிகலா வருகிறார் என்றால் அமைதியாக இருக்க வேண்டியதுதானே. எதற்காகக் கூடிக் கூடி விவாதிக்கிறார்கள்? ஆர்.டி.ஓ அதிகாரிகள் மூலம், `வாகனங்கள் தேவையின்றிக் கிளம்பினால் வழக்கு போடுவோம்' என மிரட்டுகிறார்கள். அவர் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தப் போவதில்லை என்றால் எதற்காக இவ்வளவு நெருக்குதல்களைக் கொடுக்க வேண்டும்? எதற்காக கண்டெய்னரை சாலையின் குறுக்கே போட வேண்டும்? ஆட்சி அதிகாரம் இருக்கும்போதே இப்படியென்றால், எந்த அதிகாரமும் இல்லையென்றால் எப்படியெல்லாம் நடந்து கொள்வார்கள் என்பதைத் தொண்டர்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
கே : அப்படியானால், சசிகலா வருகையால் முதல்வர் பயப்படுகிறார் என எடுத்துக் கொள்ளலாமா?
ப : ஆமாம். அது வெட்டவெளிச்சமாகத் தெரிகிறது.
பட மூலாதாரம், Jaianand
கே : ஜெயலலிதா நினைவிடம் மூடப்படுவதும் தலைமைக் கழகத்துக்குக் கூடுதல் பாதுகாப்பு கொடுக்கப்படுவதும் இதன் நீட்சியாகப் பார்க்கலாமா?
ப : ஆமாம். பதற்றம் இல்லையென்றால் இயல்பாக இருக்க வேண்டியதுதானே. கடந்த நான்கைந்து நாள்களாக முதல்வர் இயல்பாகத் தூங்கியிருப்பாரா எனத் தெரியவில்லை. ஒன்றைச் சொல்ல விரும்புகிறேன். சின்னம்மா குறித்து முதல்வர் பேசியதெல்லாம் ஜனவரி 27 ஆம் தேதிக்கு முந்தைய நிலைப்பாடுகள். அவர் விடுதலையான பிறகு முதல்வர் எதுவும் பேசவில்லை. ஒரு சில வழக்கறிஞர்கள் கூறுகையில், `ஒரு முதல்வராக இருப்பவர் சின்னம்மாவோடு சேர்ந்து அரசியல் செய்வேன்' எனக் கூறினால் சட்டரீதியாக சிக்கல் வரலாம்' என்றனர். அதுவும் ஒரு காரணமாக இருக்கலாம். அவர் விடுதலையான பிறகு முதல்வர் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
கே : சசிகலா வருகையால் அ.தி.மு.க வாக்குகள் பிரிந்து தி.மு.க-வின் வெற்றி எளிதாகும் எனக் கூறப்படுகிறதே?
ப : எங்களைப் பொறுத்தவரையில் ஸ்டாலின் முதல்வராக வருகிறாரோ இல்லையோ, தி.மு.க-வை கண்டுகொள்ளாமல் இருந்தாலே ஆளும்கட்சி என்ற நிலையை நோக்கி அவர்கள் நகர வாய்ப்பில்லை. அ.தி.மு.க-வில் உள்ளவர்கள் வழி ஏற்படுத்திக் கொடுத்தால்தான் தி.மு.க ஆட்சியமைக்கும். தொண்டர்களை பிளவுபடுத்தி ஒரு குட்டி ராஜ்ஜியம் நடத்த சிலர் திட்டமிடுகின்றனர். இதனை தொண்டர்கள் நன்றாகவே புரிந்து வைத்துள்ளனர்.
கே : இனி சசிகலாவின் அடுத்தகட்ட திட்டங்கள் என்னவாக இருக்கும்?
ப : அம்மாவின் பயணத் திட்டம் என்னவோ அதேதான். தமிழகத்தை தி.மு.க-விடம் இருந்து அம்மா காத்துக் கொண்டிருந்தார். அதையேதான் இவரும் செய்யப் போகிறார். வரும் நாட்களில் சுற்றுப்பயணம் குறித்து அவரே அறிவிப்பார்.
கே: கடைசியாக ஒரு கேள்வி. டி.டி.வி.தினகரனோடு முரண்பட்டு அண்ணா திராவிடர் கழகத்தை திவாகரன் தொடங்கினார். இப்போது உங்களுக்குள் இருந்த முரண்பாடுகள் நீங்கிவிட்டதா?
ப : எங்களுக்குள் எந்த வேறுபாடுகளும் கிடையாது. எல்லோரும் அ.தி.மு.க-வில் இருந்தவர்கள்தான். இடையில் ஏற்பட்ட குழப்பத்தால் பிரிந்திருந்தோம். எங்களுக்குள் இருந்த பிளவு என்பது மிகவும் சாதாரணமானதுதான். அதில் பேசுபொருளாக எதுவும் இல்லை.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: