தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: எடப்பாடியோடு ஓ.பி.எஸ் சமாதானமா? நரேந்திர மோதி காட்டிய சமிக்ஞை என்ன?
- ஆ. விஜயானந்த்
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், Daily Thanthi
சென்னையில் பிரதமர் மோதி பங்கேற்ற விழாவுக்கு முன்னதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கொடுத்த விளம்பரம் ஒன்று பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. என்ன மனநிலையில் இருக்கிறார் ஓ.பி.எஸ்?
தமிழக சட்டமன்றத்துக்கு விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. கூட்டணிகள், தொகுதிப் பங்கீடு ஆகியவை தொடர்பாக மார்ச் மாதம் முதல் வாரத்தில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் தங்கள் அணிகளிடம் பேச்சுவார்த்தையை நடத்த உள்ளன. `எத்தனை இடங்கள்', `எந்தெந்த தொகுதிகள்' ஆகியவை இறுதி செய்யப்படாததால் கூட்டணிக் கட்சிகளும் நடப்பதை மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கின்றன.
`பரதன்' ஓ.பி.எஸ்!
அதேநேரம், சசிகலா வருகை, ஓ.பி.எஸ்ஸின் தனி ஆவர்த்தனம் என அ.தி.மு.க தொண்டர்களை சற்றே குழப்பக் கூடிய நிகழ்வுகளும் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் முதல்வர் பழனிசாமி தரப்பினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர். அதிலும், நேற்று பிரதமரின் வருகையில் அரங்கேறிய சில சம்பவங்களும் முதல்வர் தரப்பை ரொம்பவே கோபப்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது. நேற்று ஒரு சில நாளிதழ்களில் பிரதமர் வருகை தொடர்பாக முழுப்பக்க விளம்பரங்கள் ஆக்ரமித்திருக்க, பிரதான நாளேடு ஒன்றில் முழுப் பக்க அளவில் விளம்பரம் ஒன்றைக் கொடுத்திருந்தார் ஓ.பன்னீர்செல்வம்.
`அயோத்திக்குக் கிடைத்த பரதனைப் போல தமிழகத்துக்கு கிடைத்த ஓ.பி.எஸ்' என அந்த விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதே விளம்பரம் முன்னரே சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், `பிரதமர் வருகையின்போது இப்படிப்பட்ட ஒரு விளம்பரம் தேவையா. அதுவும் அந்த நாளேட்டில் குடியரசு துணை தலைவர் வெங்கய்ய நாயுடு தொடர்ந்து கட்டுரைகளை எழுதி வருகிறார். நான் ஆட்சியை ஒப்படைத்தேன் என பிரதமருக்கு சுட்டிக் காட்டுகிறாரா ஓ.பி.எஸ்?' என்ற கேள்விகளும் அரசியல் அரங்கில் அணிவகுத்தன.
பட மூலாதாரம், Edappadi Palanisamy Twitter
அதிர்ச்சியில் ஓ.பி.எஸ்!
இதனையடுத்து, நேரு உள்விளையாட்டரங்கில் கூட்டம் முடிந்த கையோடு, முதல்வர் பழனிசாமியிடம் 15 நிமிடங்கள் வரையில் பிரதமர் மோதி பேசியுள்ளார். `தனித்தனியாக இருவரிடமும் பிரதமர் பேசுவார்' எனக் கூறப்பட்டு வந்த நிலையில், முதல்வரிடம் மட்டும் பிரதமர் பேசியது ஓ.பி.எஸ் தரப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அதேநேரம், விழா மேடையில் இருவரது கைகளையும் உயர்த்திப் பிடித்து உற்சாகத்தை வெளிப்படுத்தினார் பிரதமர். இதன்மூலம், `இருவரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுங்கள்' எனக் கூறியதாகவே அ.தி.மு.க அமைச்சர்கள் அர்த்தப்படுத்திக் கொண்டனர். இதன் நீட்சியாக இன்று கோவையில் நடந்த திருமண விழாவில் பேசிய ஓ.பி.எஸ், `அம்மா வழியில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார் எடப்பாடி பழனிசாமி" எனப் பாராட்டியவர், ``விட்டுக் கொடுத்தவர்கள் கெட்டுப் போவதில்லை" எனவும் தெரிவித்தார்.
வருத்தப்பட்டாலும் பரவாயில்லை!
``விளம்பரம் மூலம் என்ன சொல்ல வருகிறார் ஓ.பி.எஸ்?'' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.
``நேற்று இருவரின் கைகளையும் உயர்த்திப் பிடிக்காமல் பிரதமர் சென்றிருந்தால் ஒட்டுமொத்தமாக ஓ.பி.எஸ்ஸை புறக்கணித்துவிட்டார் என்ற தகவல் பரவியிருக்கும். இதற்காகத்தான் பலரும் காத்துக் கொண்டிருந்தனர். அப்படிச் செய்யாமல் அவரை அருகில் அழைத்துக் கரங்களை உயர்த்திப் பிடித்தார். சொல்லப் போனால், ஓ.பி.எஸ் மீது பிரதமர் தனிப்பாசம் வைத்துள்ளார். அவரது விளம்பரத்தில் எந்தத் தவறும் இல்லை. அந்த விளம்பரம் நியாயமானது. 3 முறை முதல்வராக இருந்தவர். அம்மாவின் பாராட்டைப் பெற்றவர். மக்களின் மனதில் இடம்பிடித்துள்ள மனிதர் அவர். இந்த விளம்பரத்துக்காக யாராவது வருத்தப்பட்டால், இன்னொரு முறை விளம்பரம் கொடுக்கவும் அவர் தயார்" என்றார்.
பட மூலாதாரம், OPS Twitter
எடுபட்டதா சமாதானம்?
``ஓ.பி.எஸ்ஸின் செயல்பாடுகளை எப்படி எடுத்துக் கொள்வது?" என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம்.
`` கோவையில் பேசும்போது முதல்வரின் ஆட்சியை ஓ.பி.எஸ் பாராட்டிப் பேசியுள்ளார். இதன்மூலம் உள்கட்சியில் என்ன நடந்திருக்கும் எனத் தெரியவில்லை. நேற்று ஓ.பி.எஸ் கொடுத்த விளம்பரம், `இரு தரப்பும் சமாதானம் ஆகவில்லை' என்பதன் வெளிப்பாடுதான். இருவரின் கைகளையும் பிரதமர் உயர்த்திப் பிடித்தாலும், அடுத்து இதுபோன்ற விளம்பரங்களை ஓ.பி.எஸ் மேற்கொள்ளாமல் இருந்தால், சமாதானம் ஆகிவிட்டதாக எடுத்துக் கொள்ளலாம்.
அதேநேரம், `எடப்பாடி பழனிசாமியின் வழியைப் பின்பற்றி ஓ.பி.எஸ் செல்ல வேண்டும்' என்பதையே பிரதமர் சுட்டிக் காட்டியுள்ளதாகவும் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். இல்லாவிட்டால் துணை முதல்வரையும் பிரதமர் அழைத்துப் பேசியிருப்பார். இ.பி.எஸ்ஸின் செயல்பாடுகளை பிரதமர் ஏற்றுக் கொள்வதாகவே இந்த நிகழ்ச்சியின் மூலம் கவனிக்க வேண்டியுள்ளது" என்கிறார்.
``சசிகலா வருகையை மையமாக வைத்து, தனக்கான இடத்தை உறுதி செய்யும் முயற்சிகளில் துணை முதல்வர் ஈடுபட்டு வந்தார். அதற்கேற்ப அவரது அண்மைக்கால செயல்பாடுகள் அமைந்தன. டெல்லியில் பிரதமரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர், `சசிகலாவை அ.தி.மு.கவில் சேர்க்க 100 சதவிகிதம் வாய்ப்பில்லை' என்றார். இந்தக் கருத்தையொட்டியே அமைச்சர்கள் சிலரின் பேச்சுகளும் அமைந்தன. இதே வழியில் பா.ஜ.கவும் பயணிப்பதாகவே நேற்றைய கூட்டத்தைப் பார்க்கலாம். `முதல்வரின் வழியை துணை முதல்வரும் பின்பற்ற வேண்டும். சசிகலா ஆதரவுக் குரல்கள் எழுந்துவிடக் கூடாது' என்பதையே பிரதமரின் நிகழ்ச்சி வெளிப்படுத்தியுள்ளது" என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள் சிலர்.
பிரதமரின் சென்னை வருகைக்குப் பிறகு துணை முதல்வரின் நடவடிக்கையில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பதை, அடுத்து அவர் கொடுக்கப் போகும் விளம்பரங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.
பிற செய்திகள்:
- IND vs ENG டெஸ்ட்: ரவிச்சந்திரன் அஸ்வின் 5வது டெஸ்ட் சதம்
- சியாச்சின் - உலகின் மிக ஆபத்தான போர்க்களத்தில் இந்திய ராணுவத்தின் வீர சாகச கதை
- செவ்வாய் கிரகம்: எரிமலை, பள்ளத்தாக்குகளை படமெடுத்த ஐக்கிய அரபு அமீரக விண்கலம்
- "இலங்கை, நேபாளத்தில் ஆட்சியமைக்க பா.ஜ.க திட்டம்" - திரிபுரா முதல்வரின் பேச்சால் சர்ச்சை
- மியான்மரில் சாலைகளை சூழ்ந்த போர் வாகனங்கள் - மீண்டும் இணைய சேவை முடக்கம்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: