தமிழக சட்டமன்ற தேர்தல் 2021: தே.மு.தி.க தலைமை மீது அ.தி.மு.க கோபம் ஏன்? பா.ம.கவுக்கு உள்ள முக்கியத்துவம் கூட இல்லையா?
- ஆ. விஜயானந்த்
- பிபிசி தமிழுக்காக

பட மூலாதாரம், HTTP://DMDKPARTY.COM/
தமிழக சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெற உள்ளதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்காததால், தே.மு.தி.க தனித்துப் போட்டியிட உள்ளதாகவும் தகவல் பரவியது. என்ன நடக்கிறது தே.மு.தி.கவில்?
கூட்டணிக் கட்சிகளின் பதற்றம்
தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி, தி.மு.க தலைவர் ஸ்டாலினும் அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வர் வேட்பாளருமான எடப்பாடி பழனிசாமியும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகாததால், இரு பிரதான கட்சிகளும் தங்களின் கூட்டணிக் கட்சிகளிடம் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையை தொடங்கவில்லை. இதனால், `கூட்டணியில் எவ்வளவு இடங்கள் ஒதுக்கப்படும்?' என்ற பதற்றம் கூட்டணிக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
அதிலும், கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்காததில் தே.மு.தி.க தலைமை மிகவும் அதிருப்தியில் உள்ளதாகக் கூறப்படுகிறது. அண்மையில் தே.மு.தி.கவின் கொடி அறிமுக நாளையொட்டி அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா தனது இல்லத்தில் கொடியேற்றினார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், `கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் அ.தி.மு.கவிடம்தான் இனி கூட்டணி குறித்துக் கேட்க வேண்டும். தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானவுடன் எங்கள் கட்சியின் செயற்குழு, பொதுக்குழு கூடி நல்ல செய்தியை அறிவிக்கும்" என்றார்.
234 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு
பட மூலாதாரம், Getty Images
"தே.மு.தி.கவுக்கு 234 தொகுதிகளிலும் வெற்றிவாய்ப்பு அதிகமாக இருக்கிறது. சட்டமன்றத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள்தான் இருக்கின்றன. எனவே, தி.மு.கவும் அதிமுகவும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளைத் துரிதப்படுத்த வேண்டும்" என்றார்.
பிரேமலதாவின் பேச்சுக்குப் பதில் கொடுத்த அமைச்சர் ஜெயக்குமார், ``கூட்டணி குறித்து பேச வேண்டிய நேரத்தில் அழைத்துப் பேசுவோம்" என்றார்.
இந்நிலையில், 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெற உள்ளதாக தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும் தொண்டர்களும் தேர்தல் விருப்ப மனுக்களை கோயம்பேட்டில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் 25 ஆம் தேதி முதல் மார்ச் 5 ஆம் தேதி வரையில் பெற்றுக் கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க கோபம் ஏன்?
தே.மு.தி.க தலைவரின் இந்த அறிவிப்பு அ.தி.மு.க கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தே.மு.தி.கவின் முக்கிய நிர்வாகி ஒருவரிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், ``2019 நாடாளுமன்றத் தேர்தலின்போது பா.ம.கவுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம்கூட தே.மு.தி.கவுக்குக் கொடுக்கப்படவில்லை. மருத்துவர் ராமதாஸின் தைலாபுரம் தோட்டத்துக்கு அமைச்சர்கள் அடிக்கடி சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் அதிருப்தியடைந்து பா.ஜ.கவின் மேல்மட்ட நிர்வாகிகளோடு தே.மு.தி.க பேச்சுவார்த்தையை நடத்தியது. `அவர்களிடம் ஏன் பேசுகிறார்கள்?' என அ.தி.மு.க தரப்பில் அதிருப்தி நிலவியது. இந்தக் கோபத்தைத் தற்போது வெளிக்காட்டுவதாகவும் கருதுகிறோம்" என்கிறார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், ``நாடாளுமன்றத் தேர்தலில் 4 தொகுதிகளிலும் தோல்வியடைந்தோம். அதற்கு முன்னதாக 2016 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி சார்பாக 104 இடங்களில் போட்டியிட்டோம். இதனால் வாக்கு சதவிகிதம் 2.41 என்ற அளவில் குறைந்துவிட்டது. இதையே காரணமாக வைத்துக் கொண்டு வரவிருக்கும் தேர்தலில் ஒற்றை இலக்கத்தில் இடங்களை ஒதுக்கும் முடிவில் அ.தி.மு.க இருக்கிறது. அக்கட்சியின் நிர்வாகிகளோ, `தே.மு.தி.கவுக்குப் பரவலாக வாக்குகள் உள்ளன. ஆனால், அதுவும் குறைவான வாக்குகளாகத்தான் உள்ளன. இதற்காக ஏன் அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும்?' என்ற மனநிலையில் உள்ளனர்.
பூத் கமிட்டி குளறுபடி
அதைவிட பிரதான காரணம் ஒன்றும் இருக்கிறது. நாடாளுமன்றத் தேர்தலில் தே.மு.தி.க சரியான முறையில் தேர்தல் செலவுகளை மேற்கொள்ளவில்லை என்ற கோபமும் அ.தி.மு.க நிர்வாகிகளிடம் உள்ளது. `தேனியைத் தவிர அனைத்து தொகுதிகளிலும் தோல்வியைத் தழுவினாலும், தே.மு.தி.க தரப்பில் பூத் கமிட்டிக்குக்கூட சரியான முறையில் பணத்தை விநியோகிக்கவில்லை. அதனால்தான், தே.மு.தி.க வேட்பாளர்களை எதிர்த்துக் களமிறங்கியவர்கள் எல்லாம் 2 லட்சம், 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றனர்' என அ.தி.மு.கவினர் கருதுகின்றனர்" என்கிறார்.
மேலும், ``பிரேமலதாவின் தொடர் பேச்சுகளும் அ.தி.மு.க தலைமைக்குக் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதன் காரணமாக, `நாங்கள் கொடுப்பதுதான் சீட்' என்ற மனநிலைக்கு வந்துவிட்டனர். அதேநேரம், `நாங்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை' என்பதைக் காட்ட பிரேமலதா முற்படுகிறார். அதன் ஒருபகுதியாக விருப்ப மனுவைப் பெறும் தேதியை அறிவித்துள்ளனர். பொதுவாக, தேர்தலில் போட்டியிடும் தொகுதியை வேறு கட்சிக்கு ஒதுக்கினால் அதற்கான பணத்தைத் திருப்பித் தரும் வழக்கம் பிற கட்சிகளிடம் உள்ளன. ஆனால், தே.மு.தி.க பணத்தைத் திருப்பிக் கொடுத்த வரலாறே இல்லை. எனவே, `பணம் கட்டலாமா?' என்ற யோசனையிலும் நிர்வாகிகள் உள்ளனர். அதிலும், சட்டமன்றத் தேர்தலின் முடிவில் கட்சிக்கான அங்கீகாரம் கிடைக்குமா?" என்ற வேதனையும் தலைமையை வாட்டி வருகிறது" என்கிறார்.
அங்கீகாரம் கிடைக்குமா?
``காரணம், 30 தொகுதிகளில் போட்டியிட்டு தொகுதிக்கு 75,000 வாக்குகளைப் பெற வேண்டும்; அதில் 2 தொகுதிகளில் வென்றால் மட்டுமே கட்சியின் சின்னம் அங்கீகரிக்கப்படும். தனித்துப் போட்டியிட்டால் தொகுதிக்கு 75,000 வாக்குகளைப் பெறுவதற்கும் வாய்ப்பில்லை. `கட்சியின் நிலைமை இன்னமும் சிக்கலாகிவிடும்' என்பதாலேயே கூட்டணிப் பேச்சுவார்த்தையை துரிதப்படுத்தி அதிக இடங்களைப் பெறும் முனைப்பில் பிரேமலதா இருக்கிறார். அதற்கான ஆயத்தப் பணிகளை அ.தி.மு.க தொடங்காததால் கோபத்தை வெளிப்படுத்துகிறார்" எனவும் தே.மு.தி.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
பட மூலாதாரம், EDAPPADI FB
அவசரம் கூடாது
``பேச்சுவார்த்தை தொடங்காத அதிருப்தியில் தே.மு.தி.க விருப்ப மனு பெறுகிறதா?" என அ.தி.மு.கவின் வழிகாட்டுக்குழு உறுப்பினர் ஜே.சி.டி பிரபாகரிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். ``234 தொகுதிகளுக்கு நாங்களும் விருப்ப மனு வாங்குகிறோம். தேர்தலில் யாருக்கு எந்தத் தொகுதி என்பது இன்னமும் முடிவாகவில்லை. அதற்குள் விருப்ப மனு பெறுவது என்பது இயல்பான ஒன்று. பேச்சுவார்த்தை தொடங்காதது குறித்து அவர்கள் அதிருப்தி தெரிவிப்பதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அரசியலில் அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது. அ.தி.மு.க தலைமை நிதானமாக முடிவெடுக்கும்" என்றார்.
``தே.மு.தி.க செல்வாக்கு சரிந்துவிட்டதாக அ.தி.மு.க தலைமை கருதுகிறதா?" என்றோம். `` அதைப் பற்றி நான் கருத்துக்கூற விரும்பவில்லை. அரசியலில் அவசரமும் ஆத்திரமும் கூடாது" என்றார்.
அ.தி.மு.க வருத்தப்படாது
``பேச்சுவார்த்தையில் ஏற்படும் தாமதம் தே.மு.தி.க தலைமைக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளதா?" என அக்கட்சியின் மாநில துணைச் செயலாளர் பார்த்தசாரதியிடம் கேட்டோம். `` கூட்டணியில் எந்தத் தொகுதியை ஒதுக்குவார்கள் எனத் தெரியாது என்பதால் 234 தொகுதிகளுக்கும் விருப்ப மனுக்களை வாங்குகிறோம். 2011, 2016 தேர்தலிலும் இதேபோல் விருப்ப மனுக்களை வாங்கினோம். இதனால் அ.தி.மு.க தரப்பில் வருத்தப்பட மாட்டார்கள். அவர்கள் கட்சி சார்பாக அவர்கள் அனைத்து தொகுதிகளுக்கும் விருப்ப மனு வாங்க உள்ளனர். நாங்கள் எங்கள் கட்சியின் சார்பாக வாங்குகிறோம்" என்கிறார்.
தொடர்ந்து பேசுகையில், ``அ.தி.மு.கவோடு அதிருப்தி என்பதெல்லாம் இல்லை. விரைவில் பேச்சுவார்த்தையைத் தொடங்குங்கள் என்றுதான் சொல்கிறோம். கடந்த சட்டமன்றத் தேர்தலில் டிசம்பர் மாதமே பேச்சுவார்த்தை தொடங்கிவிட்டது. பிப்ரவரி 5 ஆம் தேதி அனைத்தையும் முடிவு செய்துவிட்டோம். தற்போது எவ்வளவு தொகுதிகள் என்பது தொடர்பாக அவர்களும் முடிவெடுக்கவில்லை. நாங்களும் முடிவெடுக்கவில்லை. சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்ததும் முடிவு செய்வார்கள் என நம்புகிறோம்" என்றார்.
வலுவான தலைமை எங்கே?
`தே.மு.தி.கவை அ.தி.மு.க அலட்சியமாகக் கையாள்கிறதா? என மூத்த பத்திரிகையாளர் என்.அசோகனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``விஜயகாந்த் ஆரோக்கியமாக இருந்தவரையில் தே.மு.தி.கவும் ஆரோக்கியமான கட்சியாகவே இருந்தது. அவரது உடல் நலப்பின்னடைவு அக்கட்சியைப் பாதித்திருக்கிறது என்றுதான் சொல்லவேண்டும். இல்லையெனில் கடந்த நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளிடமும் வெளிப்படையாகவே கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தி பேசி அம்பலப்படுவார்களா? இதிலிருந்தே தே.மு.தி.க பேரம் பேசும் தன்மையைக் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவிட்டது" என்கிறார்.
பட மூலாதாரம், DMDK PARTY
மேலும், ``ஆளுங்கட்சியின் கூட்டணியில் இருந்துகொண்டிருந்த காரணத்தால் மக்களைப் பாதிக்கும் விஷயங்களில்கூட காட்டமான எந்த கருத்தைக் கூறுவதோ போராட்டம் நடத்துவதோ எதையும் செய்யமுடியாத நிலையில் தே.மு.தி.க என்ற கட்சி சோர்வடைந்து செல்வாக்கை இழந்துகொண்டே வந்துள்ளது. `தங்களை வலுவான வாக்கு வங்கி உள்ள கட்சி' என தே.மு.தி.க மீண்டும் நிரூபிக்கும் வரை பிற கட்சிகள் மதிக்கும் என எதிர்பார்க்க முடியாது. அதனால்தான் கூட்டணிக்கு கதவுகளைத் திறந்து வைத்துக் காத்திருந்தும் அ.தி.மு.க தலைமை சற்று அலட்சியமாகவே இக்கட்சியை கையாள்கிறது. இந்நிலையில் சுயமரியாதையைக் காத்துக்கொள்ள தே.மு.தி.க பழையபடி தனித்து நின்று போட்டியிட்டு வீறுகொண்டு எழுவதுதான் ஒரே வழி. ஆனால் அதற்கான வலுவான தலைமையோ போராட்ட குணமோ அங்கு உள்ளதா என்பது கேள்விக்குறி" என்கிறார்.
சட்டமன்றக் கூட்டத் தொடர் நிறைவடைந்த பிறகு அ.தி.மு.கவுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கலாம் என நம்புகிறார் பிரேமலதா. கூட்டணிப் பேச்சுவார்த்தையின் முடிவில் தே.மு.தி.க எதிர்பார்க்கும் கௌரவமான இடங்கள் கிடைக்குமா அல்லது வேறு முடிவை நோக்கி தே.மு.தி.க தள்ளப்படுமா என்பதும் தெரிந்துவிடும்.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: