தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: காமராஜர் தலைமையில் காங்கிரஸ் திமுகவை வென்ற 1962 தேர்தல் - தமிழக அரசியல் வரலாறு

  • முரளிதரன் காசி விஸ்வநாதன்
  • பிபிசி தமிழ்
காமராஜர்

பட மூலாதாரம், TWITTER

1962ஆம் வருடம் நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில் காமராஜர் தலைமையில் காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றாலும், தமிழ்நாடு எதிர்கொள்ளவிருந்த மாற்றங்களை முன்னறிவிக்கும் தேர்தலாக அந்தத் தேர்தல் அமைந்தது.

சீனாவுடனான யுத்த மேகங்கள் இந்தியாவைச் சூழ்ந்திருந்த நேரத்தில் இந்தியாவின் மூன்றாவது பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் 1962 பிப்ரவரி 21ஆம் தேதி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்குமென தேர்தல் ஆணையம் அறிவித்தது.

கடந்த தேர்தலோடு ஒப்பிட்டால், தமிழ்நாட்டில் பல சம்பவங்கள் நடந்திருந்தன. சென்னை மாகாணத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த ராஜாஜி, சுதந்திரா கட்சியை உருவாக்கி, காமராஜரைத் தோற்கடிக்கக் காத்திருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் 15 இடங்களில் மட்டும் வென்றிருந்த தி.மு.க. 1959ல் நடந்த உள்ளாட்சித் தேர்தலில், சென்னை சட்டமன்றத்தைக் கைப்பற்றியிருந்தது.

ஆனால், அதே நேரம் கட்சி அப்போதுதான் முதல் பிளவைச் சந்தித்திருந்தது. 1961ல் ஈ.வெ.கி. சம்பத் தி.மு.கவை உடைத்து வெளியேறியிருந்தார். அவருடன் கண்ணதாசன், எம்.பி. சுப்ரமணியன் உள்ளிட்டோரும் சென்றனர். புதிதாக தமிழ் தேசியக் கட்சி என்ற கட்சியைத் துவங்கியிருந்தார்.

இந்தத் தேர்தலின்போது சென்னை மாகாணச் சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 206ஆக இருந்தது. இதில் 168 தொகுதிகள் பொதுத் தொகுதிகள். 38 தொகுதிகள் தனித் தொகுதிகள்.

இந்தத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரஸ் தனித்தே போட்டியிட்டது. காங்கிரசிற்கு ஆதரவாக திராவிடர் கழகத் தலைவர் பெரியாரும் அவரது இதழான விடுதலையும் களமிறங்கியிருந்தன. தமிழ் தேசியத்தின் முகமாக காமராஜரை முன்னிறுத்தினார் பெரியார். 206 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தியது காங்கிரஸ்.

தி.மு.கவைப் பொறுத்தவரை கம்யூனிஸ்டுகளுடனும் சுதந்திரா கட்சியுடனும் கூட்டணி அமைக்க விரும்பியது. ஆனால், அது நடக்கவில்லை. முடிவில் தி.மு.க. முஸ்லீம் லீகுடன் மட்டும் வெளிப்படையாகக் கூட்டணி அமைத்தது. சில இடங்களில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் சில இடங்களில் சுதந்திரா கட்சிக்கும் ஆதரவளித்தது. முடிவாக 142 சட்டமன்றத் தொகுதிகளில் மட்டுமே போட்டியிட்டது அக்கட்சி. சுதந்திரா கட்சி 94 தொகுதிகளிலும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 68 இடங்களிலும் போட்டியிட்டன.

தி.மு.கவிலிருந்து மனம் கசந்து வெளியேறியிருந்த ஈ.வி.கே. சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி 9 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. முத்துராமலிங்கத் தேவரின் ஃபார்வர்ட் பிளாக் 6 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. ராஜாஜியின் சுதந்திரா கட்சியும் முத்துராமலிங்கத் தேவரின் ஃபார்வர்ட் பிளாக் கட்சியும் கூட்டணி அமைந்திருந்தன.

ராஜாஜிக்கும் காமராஜரைப் பிடிக்காது; முத்துராமலிங்கத் தேவருக்கும் அவரைப் பிடிக்காது. அதன் அடிப்படையில் அமைந்த கூட்டணி அது. தேர்தல் பிரசாரத்தின் போது ராஜாஜியும் முத்துராமலிங்கத் தேவரும் இணைந்துகூட மேடைகளில் பங்கேற்றனர். சி.பா. ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சியும் களத்தில் இறங்கியது.

பட மூலாதாரம், DMK/Website

படக்குறிப்பு,

1962 தேர்தலில் வெற்றி பெற்றபோது

இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவோம் என்ற நம்பிக்கை காமராஜருக்கு இருந்தாலும், ஒரு விஷயத்தில் மிகக் கவனமாக இருந்தார் காமராஜர். திராவிட நாடு கோரிக்கையை தொடர்ந்து எழுப்பிவந்த தி.மு.க. வளர்ந்து வருவதை எச்சரிக்கையுடன் கவனித்துவந்தார் அவர்.

ஆகவே, கடந்த முறை தி.மு.க. வென்றிருந்த 15 தொகுதிகளிலும் அதனைத் தோற்கடிக்க விரும்பினார். பணபலமும் செல்வாக்கும் மிக்க நபர்கள் இந்த பதினைந்து பேரை எதிர்த்து நிறுத்தப்பட்டனர். கட்சியின் பொதுச் செயலாளர் சி.என். அண்ணா துரைக்கு எதிராக, மிகப் பெரிய பேருந்து கம்பனி ஒன்றின் உரிமையாளரான எஸ்.வி. நடேச முதலியார் நிறுத்தப்பட்டார்.

தி.மு.க. வெளியிட்டிருந்த தேர்தல் அறிக்கையில், வரி குறைப்பு, சீர்திருத்தத் திருமணத்தை செல்லுபடியாக்கச் சட்டம், பேருந்துப் போக்குவரத்தை நாட்டுடமையாக்குவது, தமிழை ஆட்சி மொழி ஆக்குவது, விருப்பப்பாடம் என்ற பெயரில் கட்டாயமாக இந்தி திணிக்கப்படுவதை எதிர்ப்பது, தூத்துக்குடி துறைமுகத் திட்டம், கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம், கட்டாய இலவகச் கல்வி, எல்லா நகரங்களிலும் பாதாளச் சாக்கடை போன்றவற்றை முன்னிறுத்தியது.

பட மூலாதாரம், DHILEEPAN RAMAKRISHNAN

காங்கிரசைப் பொறுத்தவரை தனது தேர்தல் பிரசாரத்தில், நெய்வேலி அனல் மின்நிலையத்தைக் கொண்டுவந்தது, பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையைக் கொண்டுவந்தது ஆகியவற்றை சாதனைகளாகச் சொன்னது காங்கிரஸ். பெரியாரின் விடுதலை, தி.மு.கவை கண்ணீர்த் துளிகளாக வர்ணித்து, கடுமையாக விமர்சித்தது. "எனக்கு வயதாகிவிட்டது. நான் அதிக நாள் இருக்க மாட்டேன். நான் போன பிறகு, காமராஜர் தமிழர்களின் நலனைப் பாதுகாப்பார். அவர்தான் என் வாரிசு" என்றார் பெரியார்.

இதற்கு பதிலடி தந்த தி.மு.க., "வடநாட்டு ஆதிக்கம் வளர்ந்திருக்கிறது. அதனைக் கண்டிக்க காமராசரால் முடியவில்லை. விருப்பமும் இல்லை. தென்னாடு தேய்கிறது. வாழவைக்க காமராசரால் முடியவில்லை. அப்படியிருக்கும்போது காங்கிரசை ஆதரிக்கலாமா? பெரியாரைக் கேட்க வேண்டாம்; நீங்களே சிந்தித்துப் பாருங்கள்" என்றது தி.மு.க.

இந்தத் தேர்தல் பிரசாரத்தில் சினிமா நட்சத்திரங்கள் பெரும் பங்கு வகித்தனர். எம்.ஜி. ராமச்சந்திரனும் எஸ்.எஸ். ராமச்சந்திரனும் தி.மு.கவுக்கு ஆதரவாகக் களமிறங்க, சிவாஜி கணேசன் தமிழ் தேசியக் கட்சிக்காகப் பிரசாரம் செய்தார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்தபோது ஆச்சரியம் காத்திருந்தது. மொத்தமுள்ள 206 இடங்களில் 139 இடங்களைப் பிடித்திருந்தது காங்கிரஸ். கடந்த தேர்தலோடு ஒப்பிட்டால் 12 இடங்கள் குறைவு. அதிர்ச்சிக்குக் காரணம் அதுவல்ல. கடந்த தேர்தலில் 15 இடங்களையே பிடித்திருந்த தி.மு.க. இந்தத் தேர்தலில் 50 இடங்களைப் பிடித்திருந்தது. சுதந்திரா கட்சி 6 இடங்களிலும் ஃபார்வர்டு பிளாக் மூன்று இடங்களிலும் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும் சோஷலிஸ்ட் கட்சி ஒரு இடத்திலும் சுயேச்சைகள் 5 இடங்களிலும் வெற்றிபெற்றனர்.

பல இடங்களில் காங்கிரஸின் வாக்குகளை சுதந்திரா கட்சி பிளந்திருந்தது. ஆகவே எங்கெல்லாம் காங்கிரசை எதிர்த்து சுதந்திரா வேட்பாளர்களை நிறுத்தியிருந்ததோ, அங்கெல்லாம் குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தி.மு.க. வெற்றிபெற்றிருந்தது. ஆனால், கடந்த தேர்தலில் வெற்றிபெற்ற தி.மு.கவினர், இந்த முறை வெற்றிபெறக் கூடாது என்ற காமராஜரின் திட்டம் கிட்டத்தட்ட முழு வெற்றியைப் பெற்றிருந்தது.

தி.மு.கவின் சார்பில் 1957ல் வெற்றிபெற்றிருந்த 15 பேரில் 14 பேர் தோல்வியைத் தழுவினர், சி.என். அண்ணாதுரை உட்பட. கடந்த முறை வெற்றிபெற்றவர்களில், மு. கருணாநிதி மட்டுமே இந்த முறையும் வெற்றிபெற்றிருந்தார்.

தனக்கு தோல்வி ஏற்படப்போவதை முன்பே உணர்ந்திருந்தார் அண்ணா. வாக்கு எண்ணும் தினத்தன்று எம்.ஜி.ஆரின் மனைவி சதானந்தவதி உயிரிழந்தார். எம்.ஜி.ஆருக்கு ஆறுதல் சொல்ல வந்த அண்ணா அங்கேயே நீண்ட நேரம் இருந்தார். ஓட்டு எண்ணும் நேரத்தில், "நீங்க இங்க இருக்கீங்களே.. ஏதாவது தப்பு நடந்துட்டா?" என்று எம்.ஜி.ஆர். கேட்க, "இனிமே தப்பு நடப்பதற்கு ஒன்றுமே இல்லை" என்றார் அண்ணா.

தி.மு.க. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றிருந்தாலும் கட்சியின் பொதுச் செயலாளர் அண்ணாவின் தோல்வி அவர்களை நிலைகுலைய வைத்திருந்தது. ஆனால், அண்ணா உற்சாகமாகப் பேசினார்.

"எப்படி எங்கள் 15 பேரையும் ஒழிப்போம் என்று கூறி ஐம்பது இடங்களைக் கோட்டைவிட்டார்களோ, அதுபோல அடுத்த தேர்தலில் ஐம்பது பேரையும் ஒழிப்போம் என்றுகூறி இன்னொரு எழுபத்தைந்து இடங்களைக் கோட்டைவிடுவார்கள்" என்றார் அண்ணா. மக்களை மிரட்டியும் மயக்கும் வாக்குகள் பறிக்கப்பட்டன. பணம் விளையாடியது எனக் குற்றம்சாட்டினார் அண்ணா.

வெற்றிபெற்ற காமராஜர் அமைத்த அமைச்சரவையில் அவரையும் சேர்த்து ஒன்பது பேர் இடம்பெற்றிருந்தனர். நிதி அமைச்சராக பக்தவத்சலமும் வருவாய்த் துறை அமைச்சராக ஆர். வெங்கட்ராமனும் விவசாயத் துறை அமைச்சராக பி. கக்கனும் தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சராக பூவராகனும் நியமிக்கப்பட்டனர்.

ஆனால், 'கே' பிளான் திட்டப்படி, விரைவிலேயே காமராஜர் பதவிவிலகிக்கொள்ள, பக்தவத்சலம் முதல்வரானார். சட்டமன்றத் தேர்தலில் தோல்வியடைந்திருந்த அண்ணா, மாநிலங்களவைக்குத் தேர்வானார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: