கொரோனாவிலிருந்து மீண்ட தூத்துக்குடி செவிலியரை தாக்கிய அரிய நோய் - எப்படி நடந்தது?

  • பிரபுராவ் ஆனந்தன்
  • பிபிசி தமிழ்
அரிய நோய்

தூத்துக்குடியில் கொரோனா வார்டில் பணியாற்றியதால் தொற்று ஏற்பட்டு குணமடைந்த செவிலியர் ஒருவர் "மியூகோர்மைகோசிஸ்" என்ற அரிதான பூஞ்சைத் தாக்குதலால் பாதிக்கப்பட்டு போராடிக் கொண்டிருக்கிறார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்றிய செவிலியர்களில் ஒருவரான ஜெபசெல்வி, கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்ட நிலையில் அரிதான பூஞ்சைத் தொற்று ஒன்றால் பாதிக்கப்பட்டார்.

தூத்துக்குடி, அண்ணாநகரைச் சேர்ந்த 46 வயதான ஜெபசெல்வி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துனையில் 16 வருடங்களாக செவிலியராக பணியாற்றி வருபவர். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.

இந்த நிலையில்தான், ஜெபசெல்வி மியூகோர்மைகோசிஸ் (Mucormycosis) என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க வசதி இல்லாமல் ஜெபசெல்வியின் குடும்பத்தினர் அவதிப்பட்டு வருகின்றனர்.

மியூகோர்மைகோசிஸ் என்றால் என்ன?

மியூகோர்மைகோசிஸ் என்பது புதிய நோயல்ல. ஒருவகை பூஞ்சைக் காளானால் ஏற்படும் இந்த நோய் ஏற்கனவே கண்டறியப்பட்ட ஒன்றுதான். ஆனால், அரிதாகவே இந்நோய் மனிதர்களுக்கு ஏற்படும்.

முதலில், மூக்குப் பகுதியில் ஏற்படும் இந்த நோய், விரைவிலேயே தொண்டை, கண்கள், மூளை எனப் பரவிவிடும். இந்தத் தொற்று மூளையை எட்டும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாக மாறிவிடுகிறது.

பொதுவாக, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களையே மியூகோர்மைகோசிஸ் தாக்கும். கொரோனாவிலிருந்து மீண்டவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு இந்த நோய் அதிகம் பரவும் ஆபத்து உள்ளது.

முன் களப்பணியாளருக்கு நடந்த கொடுமை

இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஜெபசெல்வியின் கணவர் சகாயராஜ் "நான் ஒரு தனியார் நிறுவத்தில் குறைந்த சம்பளத்தில் வேலை பார்த்து வருகிறேன். எங்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்தவள் பி.எஸ்.சி. நர்சிங் முடித்து வேலை தேடிக்கொண்டிருக்கிறார். இரண்டாவது மகள் நர்சிங் இறுதியாண்டு படித்து வருகிறார். மனைவி ஜெபசெல்வி, 10 வருடம் தனியார் மருத்துவனையில் செவிலியராக பணிபுரிந்தார்.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார். கொரோனா சிறப்பு வார்டில் பணியாற்ற செவிலியர்களை தேர்வு செய்தபோது முதல் ஆளாய் பெயர் கொடுத்தவள் என் மனைவி.

கடந்த ஆகஸ்ட் மாதம் இவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து, ஆகஸ்ட் மாதம் 28ஆம் தேதி கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பத்து நாட்கள் சிகிச்சைக்குப் பிறகு தொற்றிலிருந்து மீண்டார். ஆனாலும் தலைவலி தொடர்ந்து இருந்ததால் தலைவலிக்காக அங்கேயே சிகிச்சை அளிக்கபட்டது. அதற்குப் பிறகுதான் அவருக்கு இந்த நோய் இருப்பது கண்டறியப்பட்டது" என்கிறார் கனவர் சகாயராஜ்.

இதற்குப் பிறகு, ஜெபசெல்விக்கு எம்.ஆர்.ஐ மற்றும் சி.டி. ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, அவருக்கு சைனஸ் பிரச்சனை இருப்பதாக முடிவுசெய்யப்பட்டு, அதற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்குப் பிறகு அவருக்கு ஸ்டீராய்ட் ஊசிகள் போடப்பட்டதால், முகத்தின் ஒரு பகுதி அழுகிவிட்டதாகக் கூறுகிறார் சகாயராஜ்.

"36 நாள் மருத்துவ சிகிச்சைக்கு பிறகு என் மனைவியின் முகத்தில் பல பாகங்கள் அழுகியிருந்தன. ஒரு பெண்ணின் முகம் சேதம் அடைந்தால் அவரது மனநிலை எப்படி இருக்கும்? இது தவிர வலி வேறு இருந்தது. அவர் ரண வேதனையில் துடித்தார்" என்கிறார் சகாயராஜ்.

இதற்குப் பிறகு, தூத்துக்குடியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் பரிசோதனை செய்ததில் ஜெபசெல்விக்கு மியூகோர்மைகோசிஸ் என்ற நோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. தூத்துக்குடியில் அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவர்கள் இல்லை என்பதால் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெபசெல்வி சேர்க்கப்பட்டார்.

"அங்கு என் மனைவிக்கு அறுவை சிகிச்சை செய்து முகத்தில் உள்ள பல், தாடை அனைத்தையும் அகற்றிவிட்டனர். வாயில் தசைகள் அகற்றப்பட்டுவிட்டதால் வாய் வழியாக தண்ணீர் கொடுத்தால் அது மூக்கு வழியாக வெளியே வந்துவிடும் அபாயம் ஏற்பட்டது. இதற்கு நிரந்தரத் தீர்வு ஏற்பட வேண்டுமானால் தலையில் இருந்து தசையை எடுத்து வாய்க்குள் வைத்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியதால் திண்டுக்கல்லில் உள்ள ஒரு மருத்துவமனையில் அதற்கான அறுவை சிகிச்சை செய்தோம். இப்போதும் வாய் வழியாக கொடுக்கும் தண்ணீர் மூக்கு வழியாக வரத்தான் செய்கிறது. ஆனால், முன்பு மாதிரி இல்லை" என்கிறார் சகாயராஜ்.

இதற்கு நிரந்தர தீர்வாக முகத்தில் இருந்து எடுக்கப்பட்ட மூக்கு, தாடைகளை பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் சரி செய்யும் 'ப்ளாப் கவர்' அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். அதற்கு 20 லட்சம் ரூபாய் வரை செலவாகுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"எங்களிடம் இருந்த பணத்தை எல்லாம் செலவு செய்துவிட்டோம். இரண்டு பெண்பிள்ளைகள் கல்யாண வயதில் இருக்கிறார்கள். எங்கள் நிலையை பார்த்து தூத்துக்குடி அரசு மருத்துவமனை செவிலியர்கள் ஒன்றிணைந்து சிகிச்சைக்காக மூன்றரை லட்சம் ரூபாய் பணம் வசூல் செய்து கொடுத்துள்ளனர். என் மனைவிக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்தும், அவரை காப்பாற்ற அரசு உதவவேண்டும் என்றும் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜிடம் மனு கொடுத்து உதவி கோரியுள்ளேன்" என்கிறார் சகாயராஜ்.

விரக்தியில் கவலைப்படும் குடும்பம்

படக்குறிப்பு,

ஜெபசெல்வியின் கணவர் சகாயராஜ்

கொரோனா பரவல் காலத்தில் முன்கள சுகாதார பணியாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதிநவீன சிகிச்சை அளிக்கப்படும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்தன. ஆனால், தன் மனைவி ஜெபசெல்விக்கு இதுவரை ஒன்றும் நடக்கவில்லை என குற்றம்சாட்டுகிறார் சகாயராஜ்.

இது குறித்து தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவனை டீன் டாக்டர் ரேவதி பாலனிடம் பிபிசி இது குறித்துக் கேட்டபோது, "மியூகோர்மைகோசிஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஜெபசெல்வி இன்றைக்கு உயிரோடு இருக்கிறார் என்றால் அதற்கு காரணம் எங்கள் மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் இளங்கோவும் அவரது குழுவினரும்தான். அவர்கள் ஜெபசெல்விக்கு இரவு பகலாக சிகிச்சை அளித்தனர்.

மியூகோமிகோசிஸ் நோய் சிகிச்சை வழிமுறைகளை செவிலியர் முழுமையாக பின்பற்றாததின் விளைவு தான் இன்று அவருக்கு நோய் தொற்று அதிகரிக்க காரணம். இந்த நோய்கான சிகிச்சைகளை அளிக்க தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் மருத்துவ குழு தயாராக உள்ளது.

அரசு மருத்துவமனை சிகிச்சையில் நம்பிக்கை இல்லாமல் அவர்கள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றனர். அதுமட்டுமின்றி கிறிஸ்தவ மிஷினரி மருத்துவமனை மீது அதீத நம்பிக்கை வைத்து திண்டுக்கலில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இப்போது கூட அவர்களின் சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவருக்கு மேல் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று மருத்துவ கல்லூரி இயக்குநர், சுகாதாரத்துறை செயலாளர் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம்.

கொரோனா பெருந்தொற்று காலங்களில் முன் களபணியானராக இருந்த செவிலியர் ஒருவருக்கு உடல் நிலையில் பாதிப்பு ஏற்பட்டால் அவர்களை பாதுகாக்க வேண்டிய முழு பொறுப்பும் எங்களுக்கு உண்டு.

செவிலியர் ஜெபசெல்வியின் வீட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி உடல்நிலை குறித்தும் அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் குறித்தும் முழுமையான தகவல்கள் சேகரிக்கபட்டுள்ளது" என்று தெரிவித்தார்.

ஜெபசெல்விக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியரை நிச்சயம் நாங்கள் கைவிடமாட்டோம் என்கிறார் ரேவதிபாலன்.

"இதுவரை 30,000க்கும் அதிகமான கோவிட் நோயாளிகளை கையாண்டிருக்கிறோம். சென்னையைப் பொறுத்தவரை, கோவிட் - 19லிருந்து மீண்டவர்களுக்கு இந்நோய் தாக்கியதாகத் தகவல் இல்லை. வேறு இடங்களில் இதுபோல நடந்திருக்கலாம். பொதுவாக எல்லோரையும் இந்நோய் தாக்குவதில்லை. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், நோய் எதிர்ப்பு சக்தியைக் குறைக்கக்கூடிய மருந்துகளை சாப்பிடுபவர்களுக்கு, கோவிட் - 19 தாக்கி, அவர்கள் குணமடைந்த பிறகு இந்நோய் வரலாம். ஆனால், துவக்கத்திலேயே கண்டுபிடித்தால் மருந்துகள் மூலம் குணப்படுத்தலாம். தேவைப்பட்டால் அறுவை சிகிச்சையும் செய்யலாம். ஆனால், மூளைக்குப் பரவினால் ஆபத்துதான்" என்கிறார் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் பரந்தாமன்.

இது குறித்து மாநில சுகாதாரத் துறைச் செயலர் ஜெ. ராதாகிருஷ்ணனிடம் கேட்டபோது, "இது தொடர்பான தகவல்களைக் கொடுங்கள். விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்" என்று தெரிவித்தார்.

மியூகோர்மைகோசிஸ் நோயின் அறிகுறிகள் என்ன?

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ச்சியான தலைவலி, முகத்தில் அழுத்தம், வீக்கம் ஆகியவை துவக்கத்தில் இருக்கும். அதற்கடுத்தபடியாக கண்கள் வீங்குவதோடு, வீக்கமுள்ள பகுதிகளில் கருநிற புள்ளிகளும் தோன்றும். தொண்டை அடைத்துக்கொள்வதும் உண்டு.

இதற்கான சிகிச்சை என்ன?

சிடி ஸ்கேன், எண்டோஸ்கோபி மூலம் நோய் தாக்கியதை உறுதிசெய்தவுடன், பூஞ்சை தாக்குதலுக்கு எதிரான மருந்துகள் அளிக்கப்படும். அதற்குப் பிறகு, அறுவை சிகிச்சை மூலம், அந்த பூஞ்சைகள் அகற்றப்படும். எவ்விதமான சிகிச்சை அளிப்பது பரிசோதனைக்குப் பிறகு என்பதை மருத்துவர்கள் முடிவுசெய்வார்கள்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: