இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி: அர்ஜுனமூர்த்தியின் புதிய கட்சிக்கு ரஜினிகாந்த் வாழ்த்து - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், Getty Images
ரஜினிகாந்த் துவங்க இருந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று அறிவிக்கப்பட்டிருந்த அர்ஜுனமூர்த்தி தனிக்கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார்.
இந்திய மக்கள் முன்னேற்ற கட்சி என்று பெயரிடப்பட்டுள்ள அந்தக் கட்சி தொடங்கப்பட்டுள்ளதற்கு ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து மடலில், "தனி அரசியல் கட்சித் துவங்கியிருக்கும் அர்ஜுன மூர்த்திக்கு என்னுடைய வாழ்த்துக்கள்" என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
"உங்களால் அடையாளப்பட்டு, உங்கள் நட்பினால் மதிக்கப்பட்டு, இன்று உங்கள் ஆசியினால் உயர்வு பெற்றேன். என் மனப்பூர்வமான நன்றிகள்," என்று ரஜினியின் வாழ்த்துக்கு தமது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார் அர்ஜுனமூர்த்தி.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால்...
புதிய கட்சியை தொடங்கியது குறித்து ஊடகங்களிடம் பேசிய அர்ஜுன மூர்த்தி , ''நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஐந்து திட்டங்களை முதலில் அமல்படுத்த இருக்கிறோம். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பஸ் பாஸூடன் பெட்ரோல் கார்ட் வழங்கப்படும். அதன் மூலம் இலவச பெட்ரோல் வழங்கப்படும். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நான்கு துணை முதல்வர் இருப்பார்கள். 10ம் வகுப்புக்கு பிறகு படிப்பை கைவிட்ட மாணவர்களை மீண்டும் இலவசமாக தொழிற்கல்வி பயில பல்கலைக்கழகம் அமைப்போம். கிராமங்கள் தோறும் கிராம வளர்ச்சி அலுவலரை நியமித்து வர்த்தகத்தை பெருக்குவோம்'' என்றார்.
ரஜினிகாந்த் கட்சி துவங்கப்போவதாக அறிவித்தபோது, பா.ஜ.கவின் அறிவுசார் பிரிவின் தலைவராக இருந்த அர்ஜுனமூர்த்தி, தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் என்று தெரிவித்தார்.
ரஜினி கட்சி தொடங்கவுள்ளதாக கூறிய சமயத்தில், பாஜகவின் அறிவுசார் பிரிவின் மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகி ரஜினியுடன் இணைந்தார் அர்ஜுன மூர்த்தி.
பிறகு ரஜினி கட்சி துவங்கும் திட்டத்தைக் கைவிட்ட நிலையில், தான் தனியாக கட்சி துவங்கப்போவதாக அறிவித்திருந்தார் அர்ஜுனமூர்த்தி.
உடல்நலக் குறைவு காரணமாக கட்சி தொடங்கப்போவதில்லை என அறிவித்த பின்னர், ரஜினி ஆதரவாளர்கள் மனவருத்தம் அடைந்தனர்.
அடுத்து அறிக்கை வெளியிட அர்ஜுன மூர்த்தி, ''ரஜினியின் ஆசீர்வாதம் மட்டும் போதும். மாற்றத்தின் சேவகனாக விரைவில் வருவேன். ரஜினிகாந்தின் ஆசையை நாம் நிறைவேற்றுவோம். ரஜினியின் நல்ல எண்ணம், நல்ல மனது, தமிழகத்தின் மீது கொண்ட அக்கறை நிறைவேறும் என நம்புங்கள். ரஜினி ரசிகன் என்ற அக்கறையில் ரஜினியின் புகழுக்கு எந்தவித கெட்ட பெயரும் ஏற்படுத்தமாட்டோம். புதிய சிந்தாந்தத்துடன் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கவுள்ளேன். நான் ஆரம்பிக்கப்போகும் எனது புதிய கட்சியின் கோட்பாடுகள், கொள்கைகள் நிச்சயம் பாஜகவிலிருந்து மாற்றாகவே இருக்கும். ரஜினி ரசிகர்கள் எனது கட்சியில் இணைந்து கொள்ளலாம்" என்றும் தெரிவித்திருந்தார்.
அந்த புதிய அரசியல் கட்சி அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. கட்சிக்கான கொடியும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
ஆனால் ஏற்கனவே மனவருத்தம் அடைந்த ரஜினி ரசிகர்கள் அர்ஜுன மூர்த்தியுடன் இணைவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: