அதிமுக - பாமக கூட்டணி உறுதி; பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

பட மூலாதாரம், ANBUMANI RAMADOSS TWITTER
கோப்புப்படம்
எதிர்வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-பாமக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 23 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கப்படும் என அதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழக துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
ஆளும் கட்சியான அதிமுகவிடம் பாமக தொடர்ந்து வலியுறுத்திவந்த மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு அறிவிக்கப்பட்ட மறுநாளே கூட்டணி உறுதியாகியுள்ளது.
வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இருபது சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தி வந்தார். அதற்காக போராட்டங்களையும் நடத்தினார். அதோடு, வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளித்தால் மட்டுமே கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் என்று ராமதாஸ் உறுதியாக இருந்ததாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில மணிநேரத்திற்கு முன்னதாக, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் 20 சதவீத இடஓதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் ஒரு தனியார் விடுதியில், அதிமுக-பாமக கூட்டணியின் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றதை அடுத்து அதிமுக, பாமக தலைவர்கள் பங்கேற்ற செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில், அதிமுக தரப்பில் முதல்வர் மற்றும் அதிமுக கழக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி , துணை முதல்வர் மற்றும் அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பங்கெடுத்தனர்.
பாமக சார்பில் அன்புமணி ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, ஏ.கே.மூர்த்தி ஆகியோர் பங்கேற்றனர்.
'குறைத்துத்தான் பெற்றிருக்கிறோம்'- அன்புமணி
அதிமுக கூட்டணியில் ஒதுக்கப்படும் தொகுதிகளின் எண்ணிக்கை பற்றி மட்டுமே அறிவிக்கப்பட்ட நிலையில், எந்தெந்த தொகுதிகள் பாமகவுக்கு அளிக்கப்படும் என செய்தியாளர்கள் கேட்டபோது, அந்த விவரங்கள் பின்னர்தான் வெளியிடப்படும் என பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
பின்னர் பேசிய அன்புமணி ராமதாஸ், ''பாமக, அதிமுக கூட்டணியில் சேர்ந்த சட்டமன்ற தேர்தலை சந்திக்கிறோம். எங்கள் கூட்டணி மிகபெரிய வெற்றி பெறும். எங்களுடைய நோக்கம், எங்கள் கோரிக்கை வன்னியர்களுக்கு தனியாக இடஒதுக்கீடு வேண்டும் என்றோம்.''
''அரசாங்கம் அதை நிறைவேற்றியுள்ளது. எங்களுடைய கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதால், நாங்கள் போட்டியிடும் சட்டமன்ற தொகுதிகளில் கடுமையாக உழைத்து வெற்றி பெற்றுத் தருவோம். தொகுதி எண்ணிக்கையை நாங்கள் குறைத்துத்தான் பெற்றிருக்கிறோம். ஆனால் எங்கள் பலம் குறையாது. எங்கள் கூட்டணி பெரிய வெற்றி பெறும்,''என்றார்.
20 ஆண்டுகளுக்கு பின்
20 ஆண்டுகளுக்கு பின்னர் சட்டமன்ற தேர்தலில் அதிமுக - பாமக கூட்டணி ஏற்பட்டுள்ளது. முன்னதாக 2001 தேர்தலில், அதிமுக பாமகவுக்கு 27 தொகுதிகளை ஒதுக்கியிருந்தது. அதில் 20 தொகுதிகளை பாமக வென்றது. அதன் பின்னர் 2006 மற்றும் 2011 தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக இணைந்தது.
2006இல் 31 தொகுதியில் போட்டியிட்டு 18 தொகுதிகளில் வென்றது பாமக. 2011ல் திமுக கூட்டணியில் 30 தொகுதிகளில் போட்டியிட்டாலும், வெறும் மூன்று தொகுதிகளில் மட்டும்தான் பாமக வெற்றி பெற்றது. அதனை அடுத்து, 2016ல் தனித்து நின்று பாமக சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது. பாமக தலைவர் ராமதாஸின் மகன் மற்றும் கட்சியின் மாநில இளைஞர் அணி தலைவரான அன்புமணி ராமதாஸ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தார்.
தற்போது 2021 சட்டமன்ற தேர்தலில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை பாமக பெற்றுவிட்டதால், வடமாவட்டங்களில் பாமகவின் வாக்குவங்கி அதிமுகவுக்கு கிடைக்கும் என இந்தக் கூட்டணியினரால் எதிர்பார்க்கப்படுகிறது.
பிற செய்திகள்:
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: