கொரோனா தடுப்பூசிகள் கோவிஷீல்ட் - கோவேக்சின்: இந்திய தடுப்பூசிகள் பற்றி நமக்குத் தெரிந்தவை என்ன?

பட மூலாதாரம், EPA
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டு அரசால் ஆதரிக்கப்படும் இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசி, 81% செயல்திறன் விகிதத்தைக் கொண்டுள்ளது என்று அதன் 3 ஆம் கட்ட பண்டுவப் (கிளினிகல்) பரிசோதனையின் தொடக்க நிலைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
மூன்றாம் கட்ட பரிசோதனை நடந்து கொண்டிருக்கும் நிலையிலேயே இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டாளர்கள் ஜனவரி மாதத்தில் இந்தத் தடுப்பூசிக்கு அவசர ஒப்புதல் அளித்தனர். இது சந்தேகங்கள் மற்றும் நிபுணர்களின் கேள்விகளுக்கு வழிவகுத்தது.
சமீபத்திய கண்டுபிடிப்புகள், அறிவியலுக்கும், கொரோனா வைரஸுக்கும் எதிரான எங்கள் போராட்டத்திற்கும் 'ஒரு முக்கியமான மைல்கல்' என்று தடுப்பூசி உற்பத்தியாளரான பாரத் பயோடெக் கூறியுள்ளது.
"எங்கள் 3 வது கட்ட மருத்துவ சோதனைகளின் இன்றைய முடிவுகளுடன், இப்போது நாங்கள் எங்கள் கோவிட் -19 தடுப்பூசி பற்றிய 1, 2, மற்றும் 3 ஆம் கட்ட சோதனைகளின், 27,000 பங்கேற்பாளர்கள் சம்பந்தப்பட்ட தரவுகளை வெளியிட்டுள்ளோம்" என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கோவிஷீல்ட் என அழைக்கப்படும் ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி பயன்பாட்டுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
நாடு தனது கொரோனா தடுப்பூசித் திட்டத்தை ஜனவரி தொடக்கத்தில் அறிமுகப்படுத்தியது. இது உலகின் மிகப்பெரிய தடுப்பூசி முயற்சியாகும். இதுவரை கிட்டத்தட்ட 15 மில்லியன் பேருக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. முதல் கட்டத்தில் சுகாதார மற்றும் முன்னணி கள ஊழியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டது. திங்கள்கிழமை தொடங்கிய இரண்டாவது கட்டத்தில், 60 வயதுக்கும் மேற்பட்டவர்கள் மற்றும் பிற நோய்கள் உள்ள 45 முதல் 59 வயதுக்கு உட்பட்டவர்களும் தடுப்பூசி தரலாம்.
ஜூலை இறுதிக்குள் 300 மில்லியன் "முன்னுரிமை மக்களுக்கு" தடுப்பூசி போடுவது அரசின் நோக்கமாகும். தடுப்பூசி வழங்கல் மிகவும் மந்த கதியில் நடப்பதாகவும், இது முடுக்கிவிடப்படாவிட்டால் இலக்கை எட்டமுடியாமல் போகலாம் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியா தடுப்பூசிகளை அண்டை நாடுகளுக்கும், பிற நாடுகளுக்கும் வழங்கி வருகிறது. பல நாடுகளுக்கு பல்லாயிரக்கணக்கான இலவச டோஸ் கோவிட் -19 தடுப்பூசிகளை அது அனுப்பியுள்ளது. இது "தடுப்பூசி ராஜதந்திரம்" என்று பரவலாக விவரிக்கப்படுகிறது.
நாடு ஒரு மாபெரும் தடுப்பூசி சக்தியாக உருவாகியுள்ளது. இது உலகின் 60% தடுப்பூசிகளை உருவாக்குகிறது மற்றும் அரை டஜன் பெரிய உற்பத்தியாளர்கள் இங்கு தடுப்பூசிகளை தயாரிக்கின்றனர்.
இந்தியாவின் தடுப்பூசிகளைப் பற்றி நமக்கு என்ன தெரியும்?
கோவேக்சின் எவ்வாறு செயல்படுகிறது?
24 ஆண்டுகளாக தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ள பாரத் பயோடெக் நிறுவனம்,16 வகையான தடுப்பூசிகளை உற்பத்தி செய்து, 123 நாடுகளுக்கு அவற்றை ஏற்றுமதியும் செய்கிறது.
கோவேக்சின் செயலிழப்பு செய்யப்பட்ட(deactivated) தடுப்பூசி ஆகும். அதாவது இது இறந்த கொரோனா வைரஸ்களால் ஆனது. ஆகவே இதை உடலுக்குள் செலுத்துவது பாதுகாப்பானது. இந்தியாவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் வைராலஜி அமைப்பால் தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸின் மாதிரியை, பாரத் பயோடெக் இதற்கு பயன்படுத்தியது,
இதை உடலில் செலுத்தும்போது நோயெதிர்ப்பு செல்கள் , இறந்த வைரஸை அடையாளம் காண்கிறது. மேலும் தொற்று நோய் வைரஸுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்க நோயெதிர்ப்பு மண்டலத்தை தூண்டுகிறது.
பட மூலாதாரம், Getty Images
பாரத் பயோடெக், ஹைதராபாதில் இயங்கும் மருந்து நிறுவனம்.
இரண்டு டோஸ்கள் நான்கு வார இடைவெளியில் போடப்படுகின்றன. தடுப்பூசியை 2 டிகிரி செல்ஷியஸ் முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வரை உள்ள தட்பநிலையில் சேமிக்க முடியும்.
தன்னிடம் 20 மில்லியன் டோஸ் கோவேக்சின் கையிருப்பில் உள்ளதாக பாரத் பயோடெக் கூறுகிறது. மேலும் இரண்டு நகரங்களில் உள்ள நான்கு உற்பத்திப்பிரிவுகளில், இந்த ஆண்டு இறுதிக்குள் 700 மில்லியன் டோஸை உற்பத்திசெய்யவும் அது இலக்கு நிர்ணயித்துள்ளது.
கோவேக்சின் பற்றிய சர்ச்சை என்ன?
மக்கள் நலனை கருத்தில்கொண்டு ஏராளமான முன்னெச்சரிக்கைகளுடன், மருத்துவ சோதனை முறையில், குறிப்பாக வைரஸ் திரிபுகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் அவசரகால பயன்பாட்டிற்காக இந்த தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கப்படுவதாக ஜனவரி மாதத்தில் , மருந்து கட்டுப்பாட்டாளர் அறிவித்த போது சர்ச்சை துவங்கியது.
ஒரு தடுப்பூசியின் சோதனைகள் நடந்து கொண்டிருக்கும்போதே, லட்சக்கணக்கான மக்களுக்கு அவசரகால பயன்பாட்டிற்காக அதற்கு எவ்வாறு ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று நிபுணர்கள் கேள்வி எழுப்பினர். "சோதனைகள் முழுமையடையாத தடுப்பூசியை" அங்கீகரிப்பதில் உள்ள விஞ்ஞான தர்க்கத்தைப் புரிந்துகொள்ள முடியாமல் தான் குழப்பம் அடைந்திருப்பதாக, ஆல் இந்தியா ட்ரக் ஆக்ஷன் நெட்வொர்க் (பல அரசுசாரா அமைப்புகளை உள்ளடக்கியது) கூறியது. "செயல்திறன் தரவு இல்லாததால் கடுமையான கவலைகள் எழுகின்றன" என்று அது கூறியது.
இது "பாதுகாப்பானது மற்றும் வலுவான நோயெதிர்ப்பு சக்தியை வழங்குகிறது" என்று கூறி இதன் உற்பத்தியாளரும், மருந்து தர கட்டுப்பாடாளரும் கோவேக்சின் ஒப்புதலை நியாயப்படுத்தினர்.
"நாட்டில் கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான நோய்களின் மருத்துவ தேவைகளுக்காக" இரண்டாம் கட்ட சோதனைகளுக்குப் பிறகு மருந்துகளைப் பயன்படுத்த, "விரைவான" அங்கீகாரத்தை இந்திய மருத்துவ சோதனைச் சட்டங்கள் அனுமதிக்கின்றன என்று பாரத் பயோடெக் கூறியிருந்தது. பிப்ரவரி மாதத்திற்குள் தடுப்பூசிக்கான செயல்திறன் தரவை வழங்குவதாக அது உறுதியளித்தது. அதை இப்போது நிறைவேற்றியுள்ளது.
கோவிஷீல்ட் பற்றிய தகவல் என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி, சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவால், உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது
ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராசெனிகா தடுப்பூசி, உலகின் மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தியாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவால், உள்நாட்டில் தயாரிக்கப்படுகிறது. மாதத்திற்கு 50 மில்லியனுக்கும் அதிகமான டோஸை உற்பத்தி செய்வதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
சிம்பன்சிகளிடமிருந்து பெறப்பட்ட சளி வைரஸின் (அடினோவைரஸ் என அழைக்கப்படுகிறது) பலவீனமான பதிப்பிலிருந்து இந்த தடுப்பூசி தயாரிக்கப்படுகிறது. இது ஏறக்குறைய கொரோனா வைரஸைப் போல தோற்றமளிக்கும்படி மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இது நோயை ஏற்படுத்தாது.
ஒரு நோயாளிக்கு தடுப்பூசி செலுத்தப்படும்போது, ஆன்டிபாடிகளை உருவாக்கத் தொடங்க நோயெதிர்ப்பு மண்டலத்தைத் தூண்டுகிறது மற்றும் எந்தவொரு கொரோனா வைரஸ் தொற்றுநோயையும் தாக்கும்படி தகவல் அளிக்கிறது.
நான்கு முதல் 12 வாரங்களுக்கு இடையில் இரண்டு டோஸ்களாக தடுப்பூசி போடப்படுகிறது. இதை 2 டிகிரி செல்ஷியஸ் முதல் 8 டிகிரி செல்ஷியஸ் வரையிலான தட்பநிலையில் பாதுகாப்பாக சேமிக்கலாம். இது உள்நாட்டு குளிர்சாதனபெட்டிக்கு ஒப்பானது. மேலும் தற்போது நாட்டில் இருக்கும் சுகாதார அமைப்புகளில் இதை எளிதாக மக்களுக்கு செலுத்தலாம்.
இது வேறு சில தடுப்பூசிகளை ஒப்பிடும்போது விநியோகத்திற்கு எளிதானது.
தற்போது பல நாடுகளில் போடப்பட்டுவரும் ஃபைசர்-பயோஎன்டெக் உருவாக்கிய தடுப்பூசி, -70 டிகிரியில் சேமிக்கப்பட வேண்டும், மேலும் அவற்றை ஒரு இடத்திலிருந்து மற்ற இடங்களுக்கு சிலதடவைகள் மட்டுமே கொண்டுசெல்லமுடியும். இந்தியாவில் கோடை வெப்பநிலை 50 டிகிரியை எட்டும் நிலையில் இது மிகவும் சவால் நிறைந்ததாகும்.
கோவிஷீல்ட் எவ்வளவு பயனுள்ளதாக இருக்கும்?
மக்களுக்கு முதலில் அரை டோஸையும் பின்னர் முழு டோஸையும் வழங்கும்போது அதன் செயல்திறன் 90% ஐ எட்டுவதாக ஆக்ஸ்ஃபோர்டு-அஸ்ட்ராசெனிகா தடுப்பூசியின் சர்வதேச மருத்துவ பரிசோதனைகள் தெரிவிக்கின்றன.
ஆனால் அரை-டோஸ், முழு டோஸ் யோசனையை அங்கீகரிக்க போதுமான தெளிவான தரவுகள் இல்லை.
இருப்பினும், முதல் மற்றும் இரண்டாவது டோஸ்களுக்கு இடையில் நீண்ட இடைவெளியை விடுவதால் தடுப்பூசியின் ஒட்டுமொத்த செயல்திறன் அதிகரிக்கிறது என்று வெளியிடப்படாத தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதுபோல தடுப்பூசி கொடுக்கப்பட்ட ஒரு துணைக் குழுவில், முதல் டோஸுக்குப் பிறகு 70% பயன் ஏற்பட்டதாக கண்டறியப்பட்டது.
சில கோவிட் தடுப்பூசிகளின் ஒப்பீடு
கோவிஷீல்ட் "மிகவும் பயனுள்ளதாக" இருப்பதாகவும், பிரேசில் மற்றும் பிரிட்டனில் இருந்து மூன்றாம் கட்ட சோதனை தரவுகளால் இது உறுதி செய்யப்படுவதாகவும், இந்திய தடுப்பூசி தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் (SII), கூறுகிறது. தடுப்பூசி நல்ல நோயெதிர்ப்பு திறனை தூண்டுகிறதா என்பதையும், ஏற்றுக்கொள்ள முடியாத பக்க விளைவுகளை உருவாக்குமா என்பதையும் தீர்மானிக்க மருத்துவ பரிசோதனைகள் மூன்று கட்ட செயல்முறையாக நடத்தப்படுகின்றன. ஆனால் உற்பத்தியாளர்கள் இந்தியர்கள் மீதான "இணை ஆய்வை" முடிக்கவில்லை என்று நோயாளிகளின் உரிமைக் குழுவான ஆல் அண்டியா ட்ரக் ஆக்ஷன் நெட்வொர்க் கூறுகிறது.
பிப்ரவரி மாதம் இந்தியாவில் தடுப்பூசி இணை சோதனையை நடத்த முயற்சிப்பதாக நிறுவனம் தெரிவித்திருந்தது. இந்த தடுப்பூசி பயனளிக்காது என்று சந்தேகிக்க எந்தக் காரணமும் இல்லை, ஏனென்றால் ஏற்கனவே முடிக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளில், பல்வேறு வயதினர் மற்றும் இனத்தினர் சேர்க்கப்பட்டிருந்தனர் என்று சில நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
வேறு தடுப்பூசிகள் வரப்போகின்றனவா?
பாதுகாப்பு மற்றும் செயல்திறனை சோதிக்க இந்தியாவில் வெவ்வேறு கட்ட சோதனைகளின் கீழ் உள்ள மற்ற மருந்துகள் பின்வருமாறு:
ஸைகோவ்-டி, ஆமதாபாத்தை சேர்ந்த ஜைடஸ்-காடிலாவால் உருவாக்கப்பட்டது.
ஹைதராபாதில் உள்ள, முதலாவது தனியார் தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனமான பையலாஜிகல் -இ, அமெரிக்காவை சேர்ந்த டைனவாக்ஸ் மற்றும் பேலர் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து ஒரு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.
- • HGCO19- சியாட்டலில் உள்ள எச்டீடி பயோடெக் கார்ப்பரேஷனுடன் இணைந்து புனேவைச் சேர்ந்த ஜெனோவா தயாரித்த இந்தியாவின் முதல் எம்ஆர்என்ஏ தடுப்பூசி. இது மரபணு குறியீட்டின் துண்டுகளை பயன்படுத்தி நோயெதிர்ப்பு சக்தியை ஏற்படுத்துகிறது
- பாரத் பயோடெக்கின் நாசி (nasal)தடுப்பு மருந்து.
- ஸ்புட்டினிக் வி தடுப்பூசி - டாக்டர் ரெட்டீஸ் ஆய்வகம் மற்றும் ரஷ்யாவின் கமலேயா தேசிய மையம் இணைந்து உருவாக்கியது
- சீரம் இன்ஸ்டிட்யூட் ஆஃப் இந்தியா மற்றும் அமெரிக்க தடுப்பூசி நிறுவனமான நோவாவாக்ஸ் இணைந்து மற்றொரு தடுப்பூசியை உருவாக்கி வருகிறது.
இந்தியாவின் தடுப்பூசிகளுக்கு எந்த நாடுகள் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன?
தடுப்பூசி மருந்துகள் ஏற்கனவே பூட்டான், மாலத்தீவுகள், வங்கதேசம், நேபாளம், மியான்மர் மற்றும் செஷெல்ஸ் ஆகிய நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
கோவிஷீல்ட் மட்டுமே இதுவரை ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது . சில "பரிசுகள்" வடிவத்திலும், சீரம் இன்ஸ்டிட்யூட் மற்றும் இந்த நாடுகளுக்கு இடையே கையெழுத்திடப்பட்ட வணிக ஒப்பந்தங்களின்படி மீதமுள்ளவையும் அனுப்பப்பட்டுள்ளன.
குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு ஒரு பில்லியன் டோஸ்கள் மற்றும் 2020 இறுதிக்குள் 400 மில்லியன் டோஸ்கள் வழங்குவதற்கான உறுதிப்பாட்டுடன் ஒரு உரிம ஒப்பந்தத்தை கடந்த ஆண்டு ஜூன் மாதம் அஸ்ட்ராசெனிகா, சீரம் நிறுவனத்துடன் செய்துகொண்டது. இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் மொரீஷியஸின் ஒழுங்குமுறை அனுமதிகளுக்குப்பிறகு அந்த நாடுகளுக்கும் மருந்துகளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது. பிரேசிலுக்கு, கோவிஷீல்ட் தடுப்பூசியின் வர்த்தக ரீதியிலான ஏற்றுமதிக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு தேவைகள் , சர்வதேச கோரிக்கைகள் மற்றும் கடமைகளை கணக்கில் எடுத்துக்கொண்ட பின்னர் இந்தியா,உலகம் முழுவதற்கும் தடுப்பூசிகளை தொடர்ந்து அளிக்கும் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவிலிருந்து மீண்ட தூத்துக்குடி செவிலியரை தாக்கிய அரிய நோய்
பிற செய்திகள்:
- திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா! அழுத்தம் கொடுத்தது யார்?
- தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை நம்பியே இருக்கின்றன?
- ஆந்திராவில் அதிகரிக்கும் கழுதை இறைச்சி தேவை: பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா?
- தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?
- எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: