தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: திருத்தப்பட்ட அறிக்கை; கலங்கிய சசிகலா! அழுத்தம் கொடுத்தது யார்?

  • விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
TTV DINAKARAN FB

பட மூலாதாரம், TTV DINAKARAN FB

தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள், தங்களின் கூட்டணிக் கட்சிகளிடம் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், `அ.தி.மு.கவோடு அ.ம.மு.க இணைய வேண்டும்' என்ற குரல்கள் கடந்த சில நாட்களாக எழுந்தன.

அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழ்நாடு வந்தபோது அ.தி.மு.க தரப்பிடம் இதுதொடர்பாக வலியுறுத்தியதாகவும் கூறப்பட்டது. இதுதொடர்பான கேள்விக்குப் பதில் அளித்த டி.டி.வி.தினகரன், 'அ.ம.மு.க தலைமையை ஏற்றால் அ.தி.மு.க, பா.ஜ.கவை கூட்டணியில் சேர்க்கத் தயார்' என்றார். அதேநேரம், கர்நாடகாவில் இருந்து வந்த பிறகு கடந்த 3 வாரங்களாக அரசியல் கட்சித் தலைவர்களை சந்திப்பது, அவர்களுடன் நடப்பு அரசியலை விவாதிப்பது எனப் பரபரப்பாக இயங்கி வந்தார் சசிகலா.

திடீர் அறிக்கை!

இந்தச் சூழலில், அரசியல் வட்டாரத்தில் யாருமே எதிர்பார்க்காத வகையில் புதன்கிழமை இரவு சசிகலா பெயரில் அறிக்கை ஒன்று வெளியானது. அந்த அறிக்கையில், `ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தொடர அவரது உண்மைத் தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும். நம்முடைய பொது எதிரி என ஜெயலலிதா அடையாளம் காட்டிய தி.மு.கவை ஆட்சியில் அமரவிடாமல் தடுத்து விவேகமாக இருந்து ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் நிலவிட தொண்டர்கள் பாடுபட வேண்டும்.

என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய உண்மைத் தொண்டர்களுக்கும் நல்ல உள்ளங்களுக்கும் நன்றி. ஜெயலலிதா இருந்தபோது எப்படி அவரது எண்ணத்தைச் செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். நான் என்றும் பதவிக்கோ, பட்டத்திற்கோ, அதிகாரத்திற்கோ ஆசைப்பட்டதில்லை. ஜெயலலிதாவின் அன்புத் தொண்டர்களுக்கும் தமிழக மக்களுக்கும் என்றும் நான் நன்றியுடன் இருப்பேன். நான் அரசியலைவிட்டு ஒதுங்கி இருந்து ஜெயலலிதாவின் ஆட்சி அமைய பிரார்த்தனை செய்வேன்' எனக் குறிப்பிட்டிருந்தார்.

கலங்கிய சசிகலா!

பட மூலாதாரம், TTV DINAKARAN FB

`திடீரென இப்படியொரு முடிவை ஏன் எடுக்க வேண்டும்?' என சசிகலா தரப்பு உறவினர்களிடம் கேட்டபோது, அவர்கள் தங்களது அடையாளத்தைக் குறிப்பிட விரும்பாமல் சில தகவல்களைத் தந்தனர். "கடந்த 2 நாட்களாக தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணப்ரியாவின் வீட்டில் தீவிர விவாதங்கள் நடந்து வந்தன. சொல்லப்போனால், சசிகலா கடுமையான மன உளைச்சலில் இருந்தார். ஆட்சியில் இருப்பவர்கள் கொடுக்கும் நெருக்கடிகளைவிடவும் உறவினர்கள் சிலர் கொடுத்த அழுத்தங்களால் கண்கலங்கி அழுதுவிட்டார். இதையடுத்து, இளவரசியின் மகன் விவேக் ஜெயராமனை வரவழைத்து அறிக்கையை தயாரிக்கச் சொன்னார். செவ்வாய் கிழமையே முழு அறிக்கையும் தயாராகிவிட்டது" என்றனர்.

தொடர்ந்து பேசுகையில், "கர்நாடகாவில் இருந்து கடந்த பிப்ரவரி 8ஆம் தேதி சசிகலா வந்தார். அவர் வந்த பாதை நெடுகிலும் தொண்டர்கள் கொடுத்த வரவேற்பால் மிகுந்த உற்சாகத்தில் இருந்தார். ஆனால், 'அ.தி.மு.கவை எதிர்த்து அ.ம.மு.க போட்டியிட வேண்டாம்' என்ற கருத்தில் உறுதியாக இருந்தார். ஓ.பி.எஸ், இ.பி.எஸ் ஆகியோரை எதிர்க்கிறோம் என்ற பெயரில் எம்.ஜி.ஆரையும் அம்மாவையும் நாம் எதிர்த்துவிடக் கூடாது எனவும் பேசிவந்தார். இதுதொடர்பாக குடும்ப உறுப்பினர் ஒருவர் அழுத்தம் கொடுத்தபோது, `இரட்டை இலையை நாம் ஏன் தோற்கடிக்க வேண்டும். நான் இந்த ஒரு தேர்தலை மட்டும் பார்க்கவில்லை. அ.தி.மு.கவின் எதிர்காலத்தைப் பார்க்கிறேன்' எனக் கண்டிப்பான குரலில் கூறிவிட்டார். தவிர, இணைப்பு சாத்தியமாகும் எனவும் நம்பினார். அதையொட்டியே கட்சித் தலைவர்களை சந்தித்து வந்தார்.

எனக்கென்று கட்சியில்லை!

தவிர, பா.ஜ.க தலைமை கொடுத்த அழுத்தத்தால்தான் எடப்பாடி பழனிசாமி தன்னை எதிர்ப்பதாக அவர் நினைத்தார். ஆனால், சசிகலாவை சேர்த்துக் கொள்வது குறித்து பா.ஜ.க தலைமை நிர்வாகிகள் கூறியபோது, `இது எங்கள் கட்சி. அவரை ஏன் சேர்க்க வேண்டும்?' என முதல்வர் தரப்பில் கூறியுள்ளனர். அந்தத் தகவலைக் கேள்விப்பட்ட சசிகலா, அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்.

இதன்பிறகு அ.ம.மு.க போட்டியிடுவது குறித்துப் பேசப்பட்டபோது, `இந்த ஒரு தேர்தலில் நாம் விலகியிருக்கலாம். ஏனென்றால், தி.மு.கவை வெற்றி பெற வைத்த அவப்பெயர் நமக்கு வந்து சேர்ந்துவிடும்' என சசிகலா தெரிவித்தார். இதனை ஏற்க விரும்பாத குடும்ப உறுப்பினர், ` அப்படியானால் நீங்கள் ஒதுங்கியிருங்கள். அ.ம.மு.க போட்டியிடும்' எனக் கூறியுள்ளார். இதனை எதிர்பார்த்த சசிகலா, `எனக்கென்று ஒரு கட்சியில்லை. நான் அரசியலில் இருந்தே ஒதுங்குகிறேன்' என உறுதியாகக் கூறிவிட்டார்" என்றனர்.

வரிகளைத் திருத்திய சசிகலா!

பட மூலாதாரம், TTV DINAKARAN TWITTER

முன்னதாக சசிகலா தயாரித்த அறிக்கையில், `அரசியலைவிட்டு ஒதுங்குகிறேன்' என்ற வார்த்தை இல்லை. சிலரது நெருக்கடி காரணமாகத்தான் அந்த வரிகளைச் சேர்த்தார். மேலும், அந்த அறிக்கையில், `சிலர் செய்த துரோகங்கள் எனக்கு பெரும் வலியைக் கொடுத்துள்ளன. அதற்குப் பழிவாங்கும் நேரம் இது இல்லை. எங்கள் குடும்பப் பிரச்னையை எப்போது வேண்டுமானாலும் பேசித் தீர்த்துக் கொள்வோம்' என்ற வார்த்தைகளும் இடம் பெற்றிருந்தன. இந்த வரிகளை அவர் நீக்கச் சொல்லிவிட்டார். அந்த அறிக்கையின் எந்த இடத்திலும் அ.தி.மு.கவுக்கு எதிரான வாசகங்கள் இருந்துவிடக் கூடாது என்பதில் மிகுந்த கவனமாக இருந்தார். இதன்பிறகு அவர் கலங்கியதைக் கண்ட உறவினர் ஒருவர், ` நான்கு வருட சிறை வாழ்க்கையில்கூட இவ்வளவு துயரத்தில் அவர் இருந்ததில்லை' என வேதனைப்பட்டார்.

இப்படியொரு முடிவை எடுக்கப் போவது குறித்து வழக்கறிஞர்களிடமும் சசிகலா ஆலோசிக்கவில்லை. ஏனென்றால் அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு உரிமை கொண்டாடி அவர் தொடர்ந்துள்ள வழக்கு வரும் 15 ஆம் தேதி வரவுள்ளது. அரசியலைவிட்டு ஒதுங்கிவிட்டதால், இந்த வழக்கை தொடர்ந்து நடத்துவாரா என்பதும் சந்தேகம்தான்" என விவரித்து முடித்தனர்.

ராஜதந்திர முடிவா?!

"தென்மண்டலத்தில் அ.தி.மு.கவின் வெற்றிவாய்ப்பைப் பறிக்கக் கூடிய வகையில் அ.ம.மு.கவின் நகர்வுகள் இருக்கும். இதற்காக நேரடிப் பிரசாரத்துக்கு சசிகலா வருவார் எனவும் அ.ம.மு.க நிர்வாகிகள் நம்பிக் கொண்டிருந்தனர். இப்படியொரு முடிவின் மூலம், `தேர்தலில் அ.தி.மு.க தோற்றால்கூட நான் காரணமில்லை' என சசிகலா கூறிக் கொள்ளலாம். அரசியலில் இருந்து அவர் தற்காலிகமாகத்தான் ஒதுங்கியிருக்கிறார். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நிலைமைகள் மாறலாம். சசிகலாவின் இந்த அறிக்கையை ராஜதந்திர முடிவாகத்தான் பார்க்கிறோம்" என்கின்றனர் அ.ம.மு.க நிர்வாகிகள் சிலர்.

சசிகலா எடுத்துள்ள முடிவு குறித்து, அ.ம.மு.க கொள்கைப் பரப்புச் செயலாளர் சி.ஆர்.சரஸ்வதியை பிபிசி தமிழ் தொடர்புகொண்டபோது, "இப்போதைக்கு பேட்டி எதுவும் வேண்டாம். கொஞ்ச நாள் போகட்டும். கூட்டணிகள் முடிவான பிறகு பேசுகிறேன்" என்றார். இதையடுத்து, அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதியிடம் கேட்டபோது, "நான் பதில் அளிக்க விரும்பவில்லை" என்று கூறிவிட்டார்.

முழு பலத்தில் பா.ஜ.க!

"சசிகலாவின் முடிவுக்குப் பின்னால், பா.ஜ.க பின்னணியில் உள்ளதா?" என தமிழக பா.ஜ.க மாநில பொருளாளர் எஸ்.ஆர்.சேகரிடம் பேசினோம். "யார் என்ன செய்தாலும் அதற்குக் காரணம் பா.ஜ.கதான் எனக் கடந்த 7 ஆண்டுகளாகச் சொல்லப்பட்டு வருகிறது. சசிகலா தன்னிலை விளக்கம் கொடுத்தாலும் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகச் சொல்லப்படுவது உண்மைக்குப் புறம்பானது. திரைமறைவில் இயக்குவது, அழுத்தம் கொடுப்பது, பின்புறம் தாக்குவது என ஏதாவது ஒன்றை முயற்சித்திருந்தால்கூட, மொத்த தமிழக அரசியலும் பா.ஜ.கவின் பிடியில் இருந்திருக்கும். இவை அனைத்தையும் செய்வதற்கான முழு பலத்தில் பா.ஜ.க இருக்கிறது. இதுபோன்ற யுக்திகளைக் கடைபிடிக்கக் கூடாது என்பதால்தான் அனைத்து தரப்பினர் மத்தியிலும் எங்கள் கட்சி நன்மதிப்பைப் பெற்றுள்ளது. சசிகலா எடுத்துள்ள முடிவை அவரது தனிப்பட்ட முடிவாகவே பார்க்கிறேன்" என்றார்.

அ.தி.மு.க, அ.ம.மு.க இணைப்பு குறித்து அமித் ஷா வலியுறுத்தியதாக வெளியான தகவல் குறித்து அவரிடம் கேட்டபோது, ``நான்கு அறைக்குள் நடக்கிறபோது அது செய்தியல்ல. அறையை விட்டு வெளியே வந்த பிறகு ஆதாரம் எதுவும் இல்லாமல் இருந்தால் அது வெறும் யூகம்தான். அதைப் பற்றிப் பேசுவதற்கு எதுவும் இல்லை" என்றார்.

தினகரனே காரணம்!

பட மூலாதாரம், TTV DINAKARAN TWITTER

"இந்த விவகாரத்தின் பின்னணியில் பா.ஜ.க இருப்பதாகக் கூறுவது சரியல்ல. இப்படியொரு முடிவை சசிகலா எடுப்பதற்குக் காரணம் தினகரன்தான். அவர் சிறைக்குச் செல்லும் முன் ஆட்சியை எடப்பாடியிடமும் கட்சியை தினகரனிடமும் கொடுத்துவிட்டுச் சென்றார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது, `சசிகலா பெயரையோ படத்தையோ பயன்படுத்த வேண்டாம், மக்கள் ஓட்டுப் போட மாட்டார்கள்' என என்னிடம் தினகரன் தெரிவித்தார். அப்போதே அரசியலில் இருந்து சசிகலாவை வெளியேற்றும் வேலைகளை தினகரன் தொடங்கிவிட்டார்" என பிபிசி தமிழிடம் விவரித்தார் அ.தி.மு.க தலைமைக் கழக பேச்சாளர் ஆவடி குமார்.

தொடர்ந்து பேசுகையில், "அ.தி.மு.கவை தினகரன் அபகரிக்க நினைத்தார். அது நடக்கவில்லை. தினகரனை துணைப் பொதுச்செயலாளராக நியமிக்காமல் வேறு யாரை நியமித்திருந்தாலும் இப்படியொரு நிலைமை சசிகலாவுக்கு வந்திருக்காது. மன்னார்குடி குடும்பத்தில் இருந்து நடராஜன், திவாகரன் உள்பட யாரையுமே அரசியலுக்குள் தினகரன் அனுமதிக்கவில்லை. அந்தக் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் சம்பந்தம் இல்லை" என்றார். அம்மா இருந்த வரையில் தினகரனால் அ.தி.மு.கவுக்குள் நுழைய முடியவில்லை. தற்போது அவர் ஒரு கட்சியை நடத்தி வருகிறார். தினகரனை நம்பி அரசியல் நடத்த முடியாது என்பதால் சசிகலாவும் ஒதுங்கிவிட்டார்" என்கிறார்.

தேர்தல் நேர ஆட்டம்!

அ.தி.மு.கவினரின் தொடர் புறக்கணிப்புதான் சசிகலாவின் இந்த முடிவுக்கு முக்கியக் காரணம் என்கிறார் மூத்த பத்திரிகையாளர் என். அசோகன். "ஜெயலலிதா மரணத்துக்கு பின் அ.தி.மு.கவில் நடந்துகொண்டிருக்கும் நம்ப முடியாத திடீர் திருப்பங்களில் இதுவும் ஒன்று. சசிகலாவின் இந்த முடிவுக்கு என்ன காரணம் என்று பல வதந்திகள் இருந்தாலும் அ.தி.மு.கவினரின் தொடர் புறக்கணிப்பும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆயினும் சசிகலா முழுவதும் தொடர்ந்து ஒதுங்கி இருப்பாரா என்பதை தேர்தல் முடிவுகளே தீர்மானிக்கும்" என்கிறார்.

மேலும், "சசிகலாவின் நோக்கம் என்பது அ.தி.மு.கவைக் கைப்பற்றுவதே. அதைவிட்டு விலக அவருக்குப் பெரிய காரணங்கள் ஏதுமில்லை. திரைமறைவில் சில ஒப்பந்தங்கள் நடந்திருக்கக்கூடும். அவை அனைத்தும் இந்த தேர்தலைக் குறிவைத்து ஆடப்படும் பெரிய ஆட்டத்தின் ஒரு பகுதியாகவே இருக்கவேண்டும். பா.ஜ.க இந்த முடிவை வரவேற்றிருப்பதையும் உற்றுநோக்கினால் சில விஷயங்களைப் புரிந்துகொள்ளலாம்" என்கிறார்.

போயஸ் கார்டனில் இளவரசி தரப்பினர் கட்டி வரும் புதிய வீட்டில் அடுத்த மாதம் குடியேற இருக்கிறார் சசிகலா. சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு போயஸ் கார்டனில் இருந்தே அரசியல் செய்வாரா, அல்லது ஒதுங்கி இருப்பாரா என்பதற்கான விடை, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: