வாழ வசதியான நகரங்கள் பட்டியல்: இந்தியாவில் சென்னைக்கு 4-வது இடம்

பட மூலாதாரம், Getty Images
இந்திய நகரங்கள் தொடர்பான வாழ்க்கை வசதிக் குறியீடு (Ease of Living Index), நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு (Municipal Performance Index) ஆகியவற்றை இந்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற நிர்வாக அமைச்சகம் நேற்று (பிப்ரவரி 04, வியாழ்க்கிழமை) வெளியிட்டது.
குடிமக்கள் கருத்துக்கணிப்புக்கு 30 சதவீத மதிப்பு, வாழ்கைத் தரம், பொருளாதாரத் திறன், நிலைத்தன்மை, கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, பாதுகாப்பு, பொழுதுபோக்கு, பொருளாதார மேம்பாடு, பொருளாதார வாய்ப்புகள், சுற்றுசூழல், மின்சார நுகர்வு என மற்ற பல காரணிகளுக்கு 70 சதவீத மதிப்பு கொடுக்கப்பட்டு வாழ்க்கை வசதிக் குறியீடு கணக்கிடப்பட்டுள்ளது என மத்திய அரசின் பத்திரிகைத் தொடர்பு அலுவலகமான பி.ஐ.பி
கடந்த 2020 ஜனவரி 16 முதல் 2020 மார்ச் 20-ம் தேதி வரை குடிமக்கள் கருத்துக்கணிப்பு எடுக்கப்பட்டது. 111 நகரங்களைச் சேர்ந்த 32.2 லட்சம் பேர் இந்த கருத்துக்கணிப்பில் கலந்து கொண்டனர் என்கிறது பி.ஐ.பி.
வாழ்க்கை வசதிக் குறியீட்டுக்கு வலு சேர்க்கும் விதத்தில், முதல் முறையாக நகராட்சி செயல்பாட்டுக் குறியீட்டை மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்புற விவகார அமைச்சகம் அறிமுகப்படுத்தி இருப்பதாக பி.ஐ.பி குறிப்பிட்டிருக்கிறது. நகராட்சிகளின் செயல்பாட்டின் அடிப்படையின் இந்த மதிப்பீடுகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
வாழ்க்கை வசதிக் குறியீட்டின் அடிப்படையில் நகரங்கள்
10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் மற்றும் 10 லட்சத்துக்குள் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் என இந்தக் குறியீட்டை இரண்டாகப் பிரித்து இருக்கிறார்கள்.
வாழ்கை வசதி குறியீட்டில் 10 லட்சத்துக்கு மேல் மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் பெங்களூரு (66.7 மதிப்பெண்) முதலிடத்தையும், புனே (66.27) இரண்டாவது இடத்தையும், சென்னை (62.61) நான்காவது இடத்தையும், மதுரை (55.78) 22-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
10 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் பட்டியலில் சிம்லா (60.90 மதிப்பெண்) முதலிடத்தையும், புவனேஸ்வர் (59.85) இரண்டாமிடத்தையும், சேலம் (56.40) ஐந்தாவது இடத்தையும், வேலூர் (56.38) ஆறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
ஒட்டுமொத்தமாக, மக்கள் எளிதாக வாழும் சூழல் இருக்கும் நகரங்கள் பட்டியலில் சென்னை, கோவை, மதுரை, சேலம், வேலூர், திருச்சி, திருநெல்வேலி, திருப்பூர், ஈரோடு, தஞ்சாவூர், தூத்துக்குடி ஆகிய தமிழக நகரங்கள் இடம்பிடித்திருக்கின்றன.
நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு
பட மூலாதாரம், Getty Images
10 லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வாழும் நகராட்சிகளில் இந்தூர் (66.08 மதிப்பெண்) முதலிடத்தையும், சூரத் (60.82) இரண்டாவது இடத்தையும், கிரேட்டர் மும்பை (54.36) எட்டாவது இடத்தையும், கோவை (50.52) 12-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன. இப்பட்டியலில் சென்னை 18-வது இடத்தையும், மதுரை 22-வது இடத்தையும் பிடித்திருக்கின்றன.
நகர நிர்வாக செயல்பாட்டுக் குறியீடு பட்டியலில் 10 லட்சத்துக்குக் குறைவான மக்கள் தொகை கொண்ட நகராட்சிகளில் புது டெல்லி (52.92 மதிப்பெண்) முதலிடத்தையும், திருப்பதி (51.69) இரண்டாவது இடத்தையும், சேலம் (49.04) ஐந்தாவது இடத்தையும், திருப்பூர் (48.92) ஆறாவது இடத்தையும் பிடித்திருக்கின்றன. திருநெல்வேலி, ஈரோடு வேலூர், திருச்சி, தூத்துக்குடி, தஞ்சாவூர் ஆகிய நகராட்சிகளும் இந்த பட்டியலின் டாப் 30 இடங்களில் இடம் பிடித்திருக்கின்றன.
பிற செய்திகள்:
- திருத்தப்பட்ட அறிக்கை, கலங்கிய சசிகலா! அழுத்தம் கொடுத்தது யார்?
- தமிழ்நாட்டில் ஏன் தேசிய கட்சிகள் மாநில கட்சிகளை நம்பியே இருக்கின்றன?
- ஆந்திராவில் அதிகரிக்கும் கழுதை இறைச்சி தேவை: பாலியல் ஆற்றலை அதிகரிக்கிறதா?
- தங்கம் விலை சரிவுக்கு காரணம் என்ன? எவ்வளவு விலை வீழ்ச்சி கண்டிருக்கிறது?
- எரிந்து கொண்டிருந்த கப்பலில் தனித்துவிடப்பட்ட பூனைகளை காப்பாற்றிய கடற்படையினர்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: