பாமக தேர்தல் அறிக்கை: "இலவச உயர்கல்வி, விவசாயக் கடன் தள்ளுபடி, மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி"

ராமதாஸ்

பட மூலாதாரம், DR. S. RAMADOSS FB

தமிழகத்தில் கடந்த 32 ஆண்டுகளில் இடஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த சமூகத்துக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என பாமகவின் தேர்தல் அரிக்கையில் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021-க்கு பாட்டாளி மக்கள் கட்சி தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருக்கிறார்கள்.

கல்வி, உயர்கல்வி, நலவாழ்வு, வேளாண்மை, நீர் மேலாண்மை, சமூக நீதி, நிர்வாக சீர்திருத்தம், ஊழல் ஒழிப்பு, தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சி, குடும்பத் தலைவி நலன், உட்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து, மின்சாரம் என பல தலைப்புகளின் கீழ் தங்களது தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிவித்தார். அவரைத் தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

தமிழகத்தில் மாணவர்களுக்கு அரசு செலவழிக்கும் தொகையை 32,000 ரூபாயில் இருந்து 40,000 ரூபயாக உயர்த்தப்படும், இடைநிற்றலைத் தடுக்க 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 500 ரூபாயும், 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு தலா 1,000 ருபாயும் வழங்கப்படும், 2021 - 22 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணிணி, அரசுப் பள்ளிகள் தர உயர்வு, ஆங்கிலத்துக்கு சிறப்புப் பயிற்சி, தேசிய அளவிலான நுழைவுத் தேர்வுக்கு சிறப்புப் பயிற்சி வழங்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

உயர்கல்விக்காக பொதுத் துறை வங்கிகளில் மாணவர்கள் பெற்ற கல்விக் கடனை தள்ளுபடி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். கடன் தொகையை தமிழக அரசே வங்கிகளுக்குச் செலுத்தும். உயர்கல்வி இலவசமாக வழங்கப்படும், அண்ணா பல்கலைக்கழகத்திலும் அரசு பொறியியல் கல்லூரிகளிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 10% இட ஒதுக்கீடுக்கு வழி வகை செய்யப்படும், நிகர் நிலைப் பல்கலைக்கழகம் & தனியார் கல்லூர்களில் இட ஒதுக்கீடு முறையை நடைமுறைப்படுத்த பாமக போராடும் என கல்வி தொடர்பாக பாமகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

அனைவருக்கும் இலவச மருத்துவம் மற்றும் மருத்துவக் காப்பீடு, 50 வயதைக் கடந்தவர்களுக்கு இலவச முழு மருத்துவ சிகிச்சை, சென்னையில் 1,000 கோடி ரூபாய் செலவில் மாநில புற்றுநோய் மருத்துவ மையம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள்.

தமிழகத்தில் விளைவிக்கப்படும் அனைத்து வேளாண் விளைபொருட்களையும் அரசு கொள்முதல் செய்யும். அனைத்து விளைபொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதரவு விலை நிர்ணயம், வேளாண்மை சார்ந்து நான்கு அமைச்சகங்கள், விவசாயிகளுக்கு 10,000 - 30,000 ரூபாய் வரை இடுபொருள் மானியம், வேளான் தொழிலாளர்களுக்கு மாதம் 2,500 குறைந்தபட்ச ஊதியம், 60 வயதைக் கடந்த விவசாயிகளுக்கு மாதம் 1,500 ரூபாய் ஓய்வூதியம் போன்றவைகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

அதோடு பொதுத் துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய பயிர் கடனில் ஒரு லட்சம் கோடி ரூபாய் வரை தள்ளுபடி செய்யப்படும் எனவும் கூறப்பட்டிருக்கிறது.

காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்துக்கு ஒப்புதல் பெறப்பட்டு ஓராண்டுக்குள் கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும், ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் 20-க்கும் அதிகமான பாசனத் திட்டங்கள் செயல்படுத்தபடும், தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டத்துக்கு முன்னுரிமை அடிப்படையில் செயல்படுத்தப்படும் எனக் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

அன்புமணி

சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு, வன்னிய மக்கள் தொகைக்கு இணையாக உள் இட ஒதுக்கீடு, தமிழகத்தில் கடந்த 32 ஆண்டுகளில் இடஒதுக்கீடு மூலம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் எந்த சமூகத்துக்கு எவ்வளவு பிரதிநிதித்துவம் கிடைத்திருக்கிறது என வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் இருக்கும் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கே வழங்குவது, தமிழகத்தில் இருக்கும் தனியார் நிறுவனங்களில் 80% வேலைவாய்ப்புகள் தமிழக இளைஞர்களுக்கு கட்டாயமாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

நிர்வாக வசதிக்காக திருச்சி இரண்டாவது தலைநகராகவும், மதுரை மூன்றாவது தலைநகராகவும் கோவை தமிழகத்தின் தொழில் தலைநகராகவும் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் லோக் அயுக்தா வலிமையாக்கப்படும், புதிய அரசு அமைந்த உடன் முழு மதுவிலக்கு கொண்டு வர பாமக வலியுறுத்தும் எனக் கூறப்பட்டுள்ளது.

அனைத்து மாவட்டத்திலும் சிப்காட் தொழில் வளாகம் அமைக்கப்படும். தமிழக அரசுத் துறையில் நீக்கப்பட்ட பணியிடங்கள் மீண்டும் ஏற்படுத்துதல், காலியாக உள்ள அனைத்து பணியிடங்களை நிரப்புதல் ஆகியவை மூலம் 5 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்தபட்சம் ஒருவருக்கு காலமுறை ஊதியத்துடன் கூடிய வேலை உறுதி செய்யப்படும். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிந்தும் வேலை கிடைக்காத இளைஞர்களுக்கு மாதம் 4,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

மின் உற்பத்தியை அதிகரித்து, மின்சாரக் கொள்முதலை முற்றிலுமாகக் கைவிடுவதன் மூலம் மின் கட்டணம் குறைக்கப்படும் எனக் கூறப்பட்டிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: