பனை ஓலையில் காமராஜ், ஜெயலலிதா உருவங்கள் - தூத்துக்குடி கைவினை கலைஞரின் புதிய முயற்சி

  • மு.பார்த்தசாரதி
  • பிபிசி தமிழுக்காக
பனை தொழிலாளி பால் பாண்டியன்

தமிழர்களின் மிக முக்கிய அடையாளங்களுள் ஒன்றான பனைத்தொழில் அழிந்து வரும் நிலையில் இருப்பதாகவும் அதை மீட்டெடுக்க வேண்டும் எனவும் பல்வேறு குரல்கள் தமிழகம் முழுவதும் ஒலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்நிலையில், சத்தமே இல்லாமல் பனைத் தொழிலுக்கு புத்துயிர் கொடுத்து வருகிறார் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கருங்குளம் பகுதியைச் சேர்ந்த பனைத் தொழிலாளி பால் பாண்டியன். பனை ஓலையில் பாய் பின்னுதல், பெட்டி செய்தல் போன்றவைகளை நாம் வழக்கமாக பார்த்திருப்போம். ஆனால், இவர் பிரபல அரசியல் தலைவர்களின் சிலைகளையும் தான் பார்த்து வியக்கும் காட்சிகளையும் பனை ஓலை மூலம் செய்து ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

"எங்கப்பாரு ஒரு பனைத்தொழிலாளிய்யா. அவருக்கிட்ட இருந்துதான் நான் பனையேற கத்துக்கிட்டேன். அப்போ பன்னிரெண்டு வயசு இருக்கும் எனக்கு. ஒருநாள் எங்கப்பா பன மரம் ஏறுறதைப் பாத்து நானும் சரசரன்னு ஏறிப்புட்டேன். மரத்துமேல நின்னு என்னைய பாத்தவருக்கு அம்புட்டு சந்தோஷம். 'ஏலே இனி நீ பொழைச்சுப்படே' ன்னு கத்திக் கூப்பாடு போட்டாரு. அதுக்கப்பறமா பள்ளிக்கூடத்துக்குப் போறதையெல்லாம் நிறுத்திட்டு பனை ஏற வந்துட்டேன். எப்பவாச்சும்தான் மரம் ஏறுற வேலை இருக்கும். மத்த நேரத்துல கடலக்காட்டுக்கு காவலுக்கு போயி உக்காந்துருப்பேன். அப்போ ச்சும்மா பொழுத கழிக்கிறதுக்காக ஓலைய நனைச்சு பொட்டி மொனைய ஆரம்பிச்சேன். அப்பாவோட கைத்திறமை அப்புடியே எனக்கு ஒட்டிக்கிச்சு.

அந்த காலத்துலல்லாம் எல்லாமே பனையில செஞ்ச பொருட்களாத்தான் இருக்கும். சின்னப் பிள்ளைகளோட விளையாட்டு சாமான்கள்ல ஆரம்பிச்சு கல்யாணப் பொண்ணுக்கு சீரு சனத்தி கொண்டு போகுற பொட்டி, பலாப்பொட்டி, வெத்தலப்பொட்டி, கோவில் கொடைகளுக்கு துள்ளு மாவு கொண்டு போகுற பொட்டின்னு எல்லாமே பனை ஓலையிலதான் செஞ்சிருப்பாங்க. பன மரம் நூறு வருசம் நிலைச்சிருக்கிற மாதிரி நம்ம வீட்டு பொண்ணும் வாழ்வாங்கு வாழணும்னுதான் மணப்பொண்ணுக்கு பனை ஓலை பொட்டியில சீரு கொண்டு போனாங்க.

அதுமட்டுமில்லய்யா, கொலக்கட்டை அவிச்சி திங்கிறதும் பனை ஓலையிலதான். வீட்டுக்கு கட்ட குத்துறதும் பனங்கம்புலதான். இப்புடி பனையில எதை எடுத்துக்கிட்டாலும் அதுக்கு அம்புட்டு மவுசு உண்டு. ஆனா, பாருங்க காலம் மாற மாற நாகரிகம்ங்கிற பேருல பனைய ஒதுக்கிட்டு பிளாஸ்டிக்க தேடி சனங்க ஓட ஆரம்பிச்சிடுச்சுங்க. அது மனசுக்கு ரொம்ப வேதனையா இருந்துச்சு. எங்க குலத்தொழிலே பனை ஏறுறதுதான். அதனால, நாம நம்ம தொழிலை மீட்டெடுக்க என்ன பண்ண முடியும்னு யோசிச்சேன். எந்த சனங்க பனைய தூக்கி எறிஞ்சாங்களோ அந்த சனங்களே பனைய தேடி நம்மகிட்ட வரணும்னு முடிவு செஞ்சப்போதான் பனை ஓலையில அரசியல் தலைவர்களை சிற்பமா செய்ய ஆரம்பிச்சேன்" என்கிறார் பால் பாண்டியன்.

பால் பாண்டிக்கு பெருந்தலைவர் காமராசரை மிகவும் பிடிக்குமாம். அதனால், முதன் முதலாக அவரின் சிற்பத்தை பனையில் செய்ய முடிவெடுத்திருக்கிறார். கல், மண், மெழுகு போன்றவற்றால் செய்யப்படும் சிற்பங்களைப் போல அல்ல பனை ஓலை சிற்பம். ஓலையில் உருவங்களை செய்வதென்பது பெரும் சவால் நிறைந்த வேலை என்பது அவருக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. உடனிருந்தவர்களும் முதலில் அவரை கேலி செய்திருக்கிறார்கள். ஆனாலும், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் முயற்சி செய்து பார்ப்போம் என முடிவுசெய்து காமராசர் உருவத்தை மிக நேர்த்தியாக முடைந்திருக்கிறார்.

"முதல்ல விஷயம் கேள்விப்பட்டு எல்லாரும் என்னைய கிண்டலடிச்சாவ. 'என்னடே பால் பாண்டி ஒனக்கு கிறுக்கு புடிச்சு போச்சா. எந்த ஊருலடே ஓலையில மனுசன் உருவத்தை செஞ்சிருக்காவ. நீ தேவையில்லாத வேலைய இழுத்துப்போட்டுக்காத' ன்னு பேசினாங்க. ஆனா, என்னால முடியும்னு உள்ளுக்குள்ள தோணிக்கிட்டே இருந்துச்சு. எம்பேரன் பேத்தியோளுக்கு வெளையாட ஒட்டகம், யானை, கிலுக்குன்னு நெறைய செஞ்சி கொடுத்திருக்கேன். அதே மாதிரி காமராசர் அய்யாவையும் தத்ரூபமா பண்ணிடணும்னு ரொம்ப நாளு மெனக்கெட்டேன். அவரு படத்தை வெச்சி பாத்துக்கிட்டே இருந்தேன். ஒருகட்டத்துல எனக்குள்ள தைரியம் வந்துடுச்சு. சட்டுபுட்டுன்னு பனையேற ஆள விட்டு ஓலைய கொத்திப்போட்டாச்சு. ஓலைய ஓற போட்டு பதம் பாத்து பிரிச்சாச்சு. வெளையாட்டுப் பொருட்கள் செய்யுத மாதிரி லேசுபட்ட காரியமில்ல மனுச உருவங்களை செய்யுறது. அதனால, ஒவ்வொன்னையும் உன்னிப்பா கவனிச்சு பண்ண ஆரம்பிச்சேன்.

முதல்ல முட்டு வரை பண்ணனும். அதுக்குப்பறம் உடம்பு பகுதிய நல்லா வெயிட்டு கொடுத்து பண்ணிக்கணும். தலை, கை, மூக்கு, விரலு எல்லாமே தனித்தனியா பண்ணி கடைசியில சேர்த்துப்பிடிச்சு பிண்ணனும். இதுல ரொம்ப சிரமமான காரியம் தலை பண்றது மட்டும்தான். பத்து தலை வரைக்கும் பண்ணுவேன். அந்த உடம்புக்கு எந்த தலை பொருத்தமா இருக்கோ அதைத்தான் சேர்ப்பேன். கண்ணுலாம் சரியாவே வராது. ராத்திரி தூக்கத்துல கண்ணீர் விட்டு படுத்துருப்பேன். அப்போ திடீர்ணு கண்ணு இப்படி பண்ணலாம்னு தோணும். உடனே எழுந்தடிச்சு போயி அதை செஞ்சு பாப்பேன். ஒருமுறை என் பையன்கூட அப்பாவுக்கு பைத்தியம் புடிச்சிடுச்சும்மான்னு அவன் அம்மாக்கிட்ட சொல்லிட்டு இருந்தான். நான் அதையெல்லாம் பொருட்டாவே எடுத்துக்கிட்டதில்ல. அவருக்கு மேல் சட்டை, கண்ணாடி, துண்டுன்னு எல்லாமே ஓலையில பண்ணி ஒண்ணா சேர்த்ததும் காமராசர் அய்யா உருவம் நல்லா வந்துடுச்சு. அவ்வளவுதான் அக்கம் பக்கத்துல உள்ளவங்க, ஊர்க்காரங்க, அரசியல் கட்சித் தலைவருங்கன்னு யார் யாரெல்லாமே என்னய தேடி வந்து பாராட்டிட்டுப் போனாங்க. அந்த நிமிஷம் உடம்பெல்லாம் பூரிச்சுப் போயிடுச்சு. என் மகன்களும் வீட்டம்மாவும் ரொம்ப மெச்சிக்கிட்டாங்க" என பூரிப்போடு சொல்கிறார் பால்பாண்டி.

காமராசர் உருவத்தை செய்த கையோடு அப்துல்கலாம் உருவத்தையும் முடைந்திருக்கிறார் பால்பாண்டி. இருவர் சிலைகளுக்கு மத்தியில் பள்ளிக் குழந்தைகள் சீருடையோடு பள்ளி செல்வது போன்றும் செய்து வைத்திருக்கிறார். நாளுக்கு நாள் பால் பண்டி பற்றிய பேச்சுக்கள் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பரவ ஆரம்பிக்க அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை வீடு தேடிச் சென்று தங்கள் தலைவர்களை ஓலையில் வடிவமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை வைத்திருக்கின்றனர். தற்போது அவர் வீட்டில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பனை உருவ வடிவமைப்பு இடம்பெற்றிருக்கிறது. சட்டமன்றத் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் பாஜகவினர் பிரதமர் மோடியின் சிற்பத்தை செய்துதரும்படி கேட்க தற்போது மோடியின் சிற்பத்தை செய்ய ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்.

"தலைவர்களோட வடிவத்தை மட்டுமே செஞ்சிக்கிட்டு இருந்தப்போ எனக்கு திடீர்ணு எங்க அப்பா, அம்மா நியாபகம் வந்துடுச்சு. வயக்காட்டுல எங்க அப்பாரு ஏர் உழுகுற மாதிரியும் அம்மா கஞ்சி கொண்டு போகுற மாதிரியும் பண்ணினேன். அது எனக்கு நிறைய பாராட்டை வாங்கிக் கொடுத்துச்சு. சமீபத்துலகூட முதல்வர் அய்யா என்னைய நேர்ல கூப்பிட்டு விருது கொடுத்து பாராட்டினாங்க. அப்போ நான் ஓலையிலயே செஞ்ச ஒரு சூட்கேஸ் பொட்டிய கொண்டு போயி கொடுத்தேன். ஓலையில பிண்ணுன செருப்பத்தான் போட்டுக்கிட்டு மேடை ஏறினேன். எத்தனை பேரு நம்மளை பாராட்டினாலும் எத்தனை விருது கிடைச்சாலும் இன்னும் எனக்குள்ள நம்ம குலத்தொழிலான இந்த பனைத் தொழிலை மீட்டெடுக்க முடியலையேங்கிற வருத்தம் இருக்கத்தான் செய்யுது. முன்ன மாதிரி என்னால பனையெல்லாம் ஏற முடியறதில்ல. பனை ஏறுறதக்கும் ஆளுங்க இல்ல. ஒரு பனைய ஒரு கொத்தாளுதான் வெட்ட முடியும். அவங்களுக்கு வெட்டு கூலிக்கே பெரிய கிராக்கியா இருக்கு. இதுக்கு இடையில ஒரு சிலைய செய்யுறதுக்கு 3 மாசம் வரை ஆகும். எனக்குன்னு பெருசா எந்த லாபமும் இல்லாமத்தான் ஓடிக்கிட்ட இருக்கேன்.

எனக்கு 7 ஆம்பளைப் பயலுகளும் ஒரு பொட்டப் புள்ளயும் இருக்குது. எனக்கும் என் வீட்டுக்காரிக்கும்னு இல்லாட்டியும் 8 பிள்ளைகளுக்காகவாவது ஏதாவது உண்டு பண்ணி வைக்கணுமே. அதனால, அரசாங்கமா பார்த்து எனக்கும் என்னைய மாதிரி இருக்கிற பனைத்தொழிலாளிகளுக்கும் ஏதாவது நல்லது பண்ணனும்ங்க. அரசாங்கம் உதவுச்சுன்னா இதைவிடக் கூடுதலா உற்சாகத்தோட நான் தொழில் பண்ணுவேன். என் கண் காணவே நாலு சனத்துக்கும் சொல்லிக் கொடுத்துடுவேன்" என்கிறார் பால் பாண்டியன்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :