32 ஆண்டுகளாக கட்சிக்கொடி, தோரணம், மைக்செட் எதுவும் இல்லை - அமைதியாக தேர்தலை சந்திக்கும் ஒரு அதிசய கிராமம்

ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்தத் தேர்தல் திருவிழா தமிழகத்தில் சூடு பிடித்துள்ளது கிராமம் முதல் நகரம் வரை திரும்பிய திசையெங்கும் அரசியல் கட்சிகளின் ஆரவாரப் பேச்சு. இரு சக்கர வாகனம் முதல் நவீன ரக கார் வரை அரசியல் முழக்கங்களோடு மூலைமுடுக்கெல்லாம் சுற்றி வருகின்றன.
தாரை தப்பட்டை முழங்க படை பரிவாரம் புடைசூழ ஆர்ப்பாட்டமாய் வீடு தோறும் சென்று தேர்தல் எஜமானர்களான வாக்காளர்களை சந்தித்து வருகின்றனர் அரசியல் கட்சிகளை சேர்ந்த நபர்கள்.
இப்படி எந்தவித பரபரப்பும் இன்றி அமைதியாய் இருக்கிறது கரூர் அருகில் உள்ள குள்ளம்பட்டி என்ற கிராமம். 32 ஆண்டுகளாக இந்த குள்ளம்பட்டி கிராமத்தில் தேர்தல் பரபரப்பு என்பதே கிடையாது. கட்சிக் கொடி ஏற்றக்கூடாது, தோரணங்கள் கட்டக்கூடாது பிரசாரத்துக்கான காரியாலயங்கள் அமைக்கக் கூடாது, மைக் செட்டுகள் கட்டக்கூடாது என்ற கட்டுப்பாடுகளை இந்த கிராமத்து மக்கள் கடைபிடிக்கின்றனர்.
கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் தொகுதியில் உள்ள இந்த குள்ளம்பட்டி கிராமத்தில், 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 400-க்கும் அதிகமான வாக்குகள் மட்டுமே இந்த கிராமத்தில் உள்ளன. ஆனாலும் 32 ஆண்டுகளுக்கு மேலாக அமைதியாக தேர்தலை சந்தித்து வருகிறது இந்த கிராமம்.
எதற்காக இந்த கிராமத்தில் இவ்வளவு கட்டுப்பாடுகள் எனக் கூறுகிறார் இந்த கிராமத்தைச் சேர்ந்த ஊர் பெரியவரும் டீக்கடை நடத்தி வருபவருமான பழனிசாமி.
"1989ஆம் ஆண்டு எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜெயலலிதா அணி, ஜானகி அணி என இரண்டாக பிரிந்தது. அதற்கு முன்பு வரை எங்கள் கிராமம், மற்ற கிராமம், நகரத்தை போலவே தேர்தல் என்றாலே பரபரப்பு கூடிவிடும். கட்சி கொடியேற்றி, மைக் செட் கட்டி அலற விடுவது என்ற ரீதியில்தான் எங்கள் கிராமம் இருந்தது. அதிமுக, ஜானகி அணி, ஜெயலலிதா அணி என பிரிந்த பொழுது இந்த கிராமத்தில் இரண்டு தரப்பினரும் தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்போது அதே போல மற்ற கட்சியினர் ஆளுக்கு ஒரு காரியாலயத்தை திறந்து தேர்தல் பணியில் தீவிரமாக இருந்தனர்.
கிராமத்தில் மூலைமுடுக்கெல்லாம் மைக்செட் சத்தம் காதைக் கிழித்துக் கொண்டிருந்தது. பிரசாரங்களும், வாக்கு சேகரிப்புக்கான செயல்பாடுகளும் ஒரு கட்டத்தில் எல்லை மீறி ஒருவருக்கொருவர் மோதிக்கொள்ளும் அசாதாரண நிலை ஏற்பட்டது.
இதையடுத்து ஊர் மக்கள் ஒன்று கூடி விவாதித்தோம் அமைதியை நிலைநாட்ட யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என்பதற்காக இந்த கட்டுப்பாடுகளை விதித்தோம். இனி எக்காரணத்தைக் கொண்டும் குள்ளம்பட்டி கிராமத்தில் கட்சி கொடிகள் தோரணங்கள் கட்டுவது இல்லை, காரியாலயங்கள் அமைப்பதில்லை, அமைதியான முறையில் தேர்தலை சந்திப்பது என முடிவெடுத்தோம்.
தேர்தல் காலங்களில் மட்டுமல்லாது எல்லா காலங்களிலும் இதை கடைபிடித்தோம். அந்த முடிவை கடந்த 32 ஆண்டுகளாக கடைப்பிடித்து வருகிறோம்.
இந்த 32 ஆண்டுகளில் எத்தனையோ சட்டசபை, மக்களவை உள்ளாட்சித் தேர்தல் வந்தது. எந்த தேர்தலிலும் நாங்கள் கட்சிக்கொடி ஏற்றவில்லை, தோரணங்கள் கட்டவில்லை, காரியாலயங்கள் அமைக்கவில்லை. ஆனாலும் அமைதியாக ஜனநாயக கடமையான வாக்கு செலுத்துவதை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறோம்," என்றார்.
அரசியல் ஆரவாரத்துக்குத்தான் அனுமதியில்லை. ஆனால் வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்க வரலாமா என்று கேட்டபோது, "எங்கள் கிராமத்தில் எல்லா கட்சியை சேர்ந்தவர்களும் உள்ளனர். வேட்பாளர்கள் ஓட்டு கேட்க வரலாம் அவர்களை நாங்கள் ஊர் மந்தையில் திரண்டு நின்று வரவேற்று உபசரித்து வாக்கு கேட்க அனுமதிக்கிறோம்." என்கிறார்.
கட்சிக் கொடி தோரணம் இல்லையென்றாலும், ஊர்மக்கள் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களுக்கு வாக்களித்து வருகின்றனர். அதற்கு எந்தத் தடையும் இல்லை என்கின்றனர் இந்த கிராமத்து மக்கள்.
இம்மாதிரியாக அமைதியாக நடைபெறும் தேர்தலுக்கு ஊரில் உள்ள இளைஞர்கள் மத்தியிலும் வரவேற்பு உள்ளது.
அரசியல் ஆரவாரமின்றி அமைதியாய் நடைபெறுகிறது தேர்தல். இதேபோல அமைதியான தேர்தல் தமிழகம் முழுவதும், ஏன் இந்தியா முழுவதும் அமைதியாக நடைபெற்றால் யாருக்கும் எந்த பிரச்னையும் வராது என்கிறார் குள்ளம்பட்டி கிராமத்தை சேர்ந்த இளைஞர் சரவணகுமார்.
பிற செய்திகள்:
- அதிமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது ஏன்?: என்ன சொன்னார் எடப்பாடி பழனிசாமி - விவரிக்கும் பிரேமலதா
- மாறிவரும் பிரசார முறைகள்: தமிழக மக்களின் உள்ளத்தை கவரும் உத்தி எது?
- கருணாநிதி, ஜெயலலிதா போட்டியிடாத முதல் சட்டமன்றத் தேர்தலா இது? உண்மை என்ன?
- "ஜெயலலிதா மரணத்துக்கு காரணம் கருணாநிதி, மு.க.ஸ்டாலின்தான்'' - எடப்பாடி பழனிசாமி பேச்சு
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்