தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: தினகரன் Vs எடப்பாடி, ஸ்டாலின்? அமமுகவோடு தே.மு.தி.க இணைந்த பின்னணி

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
தேமுதிக

பட மூலாதாரம், DMDK

நாடாளுமன்ற தேர்தலில் தனித்துக் களமிறங்கிய தினகரன், சட்டமன்றத் தேர்தலில் தே.மு.தி.க, எஸ்.டி.பி.ஐ, ஓவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி ஆகியவற்றுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்கிறார். கூட்டணி அமைப்பதில் வெற்றி பெற்றுவிட்டாரா தினகரன்?

60 தொகுதிகளில் தே.மு.தி.க

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்யும் பணிகளைத் தொடங்கிவிட்டனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தனர். அதேநேரம், கூட்டணியை இறுதி செய்யவே தே.மு.தி.க காலதாமதம் செய்தது. ஒருகட்டத்தில் அ.ம.மு.க அணியில் 60 இடங்களில் தே.மு.தி.க போட்டியிட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க அணியில் களமிறங்கிய தே.மு.தி.க, இந்தமுறை அ.தி.மு.க அணியில் அதிக தொகுதிகளை எதிர்பார்த்தது. கடந்தமுறையை போல, இந்தத் தேர்தலிலும் பா.ம.கவுக்கு அ.தி.மு.கவில் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுவதை அறிந்த தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா, `கூட்டணிப் பேச்சுவார்த்தையை விரைவில் தொடங்குங்கள்' என அ.தி.மு.கவுக்கு அழுத்தம் கொடுத்து வந்தார். இதற்குப் பதில் அளித்த அமைச்சர் ஜெயக்குமார், `உரிய நேரத்தில் அவர்களை அழைத்துப் பேசுவோம்' என்றார்.

கூட்டணிப் பேச்சுவார்த்தை தொடங்கிய பிறகு பா.ம.கவுக்கு ஒதுக்கப்பட்ட அதே 23 தொகுதிகளை தே.மு.தி.க எதிர்பார்த்தது. இதில் ஏமாற்றமே மிஞ்சியது. ஒருகட்டத்தில் 18 தொகுதிகள் வரையில் இறங்கி வந்தும் 13 தொகுதிகளோடு அ.தி.மு.க நிறுத்திக் கொண்டது. இதனால் கொதித்துப் போன தே.மு.தி.க மாநில துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ், ` அ.தி.மு.கவில் பா.ம.கவின் ஸ்லீப்பர் செல்லாக கே.பி.முனுசாமி இருக்கிறார். அ.தி.மு.க டெபாசிட் இழக்கும். இன்றைக்குத்தான் எங்களுக்கு தீபாவளி' என்றார். கூடவே, விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரனும், முதல்வர் பழனிசாமியை கடுமையாக தாக்கிப் பேசினார்.

முடிவுக்கு வந்த 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை

பட மூலாதாரம், AMMK

இதையடுத்து, மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் தே.மு.தி.க பேச்சுவார்த்தை நடத்துவதாகத் தகவல் வெளியானது. ம.நீ.ம துணைத் தலைவர் பொன்ராஜுடன் மட்டுமே இந்தப் பேச்சுவார்த்தை நடைபெற்றதால் பெரிதாக முன்னேற்றம் ஏற்படவில்லை. இதன்பின்னர் 140 தொகுதிகளுக்கும் வேட்பாளர் பட்டியலை தயார் செய்தார் பிரேமலதா. தொடர்ந்து 3 கட்டங்களாக அ.ம.மு.கவுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையும் முடிவுக்கு வந்துவிட்டது.

அ.ம.மு.க கூட்டணியில் கும்மிடிப்பூண்டி, திருத்தணி, ஆவடி, வில்லிவாக்கம், திரு.வி.க.நகர், எழும்பூர், விருகம்பாக்கம், சோழிங்கநல்லூர், பல்லாவரம், செய்யூர், மதுராந்தகம், கே.வி. குப்பம், ஊத்தங்கரை, வேப்பனஹள்ளி, பாலக்கோடு, பென்னாகரம், செங்கம், கலசப்பாக்கம், ஆரணி, மயிலம், திண்டிவனம், வானூர், திருக்கோவிலூர், கள்ளக்குறிச்சி, ஏற்காடு, மேட்டூர், சேலம் மேற்கு, நாமக்கல், குமாரபாளையம், பெருந்துறை, பவானிசாகர், கூடலூர்,அவிநாசி, திருப்பூர் வடக்கு, வால்பாறை, ஒட்டன்சத்திரம், நிலக்கோட்டை, கரூர், கிருஷ்ணராயபுரம், மணப்பாறை, திருவெறும்பூர், முசிறி, பெரம்பலூர், திட்டக்குடி, விருதாச்சலம், பண்ருட்டி, கடலூர், கீழ்வேளூர், பேராவூரணி, புதுக்கோட்டை, சோழவந்தான், மதுரை மேற்கு, அருப்புக் கோட்டை, பரமக்குடி, தூத்துக்குடி, ஒட்டபிடாரம், ஆலங்குளம், ராதாபுரம், குளச்சல் மற்றும் விளவன்கோடு ஆகிய 60 தொகுதிகளில் தேமுதிக போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விருத்தாச்சலம் ஏன்?

இதில், விருத்தாச்சலத்தில் பிரேமலதா போட்டியிட உள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு தே.மு.தி.க என்ற கட்சியை உருவாக்கிய விஜயகாந்த், முதல் முறையாக 2006-ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் விருத்தாசலம் தொகுதியில் தனித்துப் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் அவர் 61,337 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்த சென்டிமெண்டை காரணமாக வைத்து பிரேமலதா களமிறங்க உள்ளார். அதேநேரம், இந்தத் தேர்தலில் எல்.கே.சுதீஷும் விஜய பிரபாகரனும் போட்டியிடவில்லை.

கூட்டணிப் பேச்சுவார்த்தையில் என்ன நடந்தது?

``தே.மு.தி.க அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் தலைமையிலான குழுவினரும் அ.ம.மு.க துணைப் பொதுச்செயலாளர் செந்தமிழன் தலைமையிலான குழுவினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். தொடக்கத்தில் இருந்தே கூட்டணிக்கு `தினகரன் தலைமை' என்பதை தே.மு.தி.க தலைமை ஏற்றுக் கொள்ளவில்லை. இதன்பின்னர் களநிலவரங்களை அ.ம.மு.கவினர் விரிவாக எடுத்துக் கூறினர். `இந்தக் கூட்டணியும் முறிந்துவிட்டால், நமது கட்சி சார்பாக நிற்கவே வேட்பாளர் வரத் தயங்குவார்கள்' என நிர்வாகிகள் கூறியதால், பிரேமலதாவும் ஏற்றுக் கொண்டார்" என்கிறார் தே.மு.தி.க நிர்வாகி ஒருவர்.

பாதிக்குப் பாதி கேட்ட பிரேமலதா!

பட மூலாதாரம், DMDK

தொடர்ந்து பேசிய அவர், ``அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.கவுக்கு 18 இடங்களை ஒதுக்கக் கூட அவர்கள் தயாராக இல்லை. அ.ம.மு.கவுடன் கூட்டணி அமைத்தால் பல தொகுதிகளில் அ.தி.மு.கவின் வெற்றிவாய்ப்பைத் தடுக்கலாம். மேலும், எஸ்.டி.பி.ஐ உள்ளிட்ட சிறுபான்மைக் கட்சிகள் ஒன்று சேர்வதால் நமது அணி வலுவாக இருக்கும் எனவும் அ.ம.மு.க தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கு சம்மதம் தெரிவித்த பிரேமலதா, `234 தொகுதிகளில் சரிபாதி இடங்களை எங்களுக்கு ஒதுக்குங்கள்' என கேட்டார். இதற்கு தினகரன் சம்மதிக்கவில்லை. ஒருகட்டத்தில் 80 தொகுதிகள் வரையில் கேட்டோம். அதற்கும் தினகரன் சம்மதிக்கவில்லை. முடிவில் 60 தொகுதிகளை ஏற்றுக் கொண்டோம். `தேர்தல் செலவில் குறிப்பிட்ட ஒரு பகுதியை அ.ம.மு.க ஏற்கும்' எனவும் வாக்குறுதி அளிக்கப்பட்டது. இதையடுத்து முதல்வர் வேட்பாளராக தினகரனை முன்னிறுத்தும் முடிவை பிரேமலதா ஏற்றுக் கொண்டார்" என்றார் விரிவாக.

ஓவைசியும் எஸ்.டி.பி.ஐயும் பலமா?

அ.ம.மு.க உடனான பேச்சுவார்த்தை ஒருவேளை தோல்வியடைந்தால், `நீங்கள் எல்லாம் தனித்துப் போட்டியிடத் தயாரா?' என தே.மு.தி.க நிர்வாகிகள் சிலர், வேட்பாளர்களிடம் கேள்வியெழுப்பினர். இதற்குச் சிலரிடம் இருந்து சரியான பதில் வராததும் கூட்டணியை நோக்கி தே.மு.தி.கவை தள்ளியதாகவும் சொல்லப்படுகிறது. மேலும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தலைமையிலான கூட்டணியுடன் எஸ்.டி.பி.ஐ கட்சி, ஆலந்தூர், ஆம்பூர், பாளையங்கோட்டை, திருவாரூர், மதுரை மத்தி, திருச்சி மேற்கு ஆகிய 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

இந்த அணியில் ஓவைசி கட்சிக்கு வாணியம்பாடி, கிருஷ்ணகிரி, சங்கராபுரம் என 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதும் உற்றுக் கவனிக்க வைத்துள்ளது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாணியம்பாடி தொகுதியில் ஓவைசியின் கட்சி 10,000 வாக்குகளைப் பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் உருது பேசும் இஸ்லாமியர் வாக்குகளை ஓவைசியின் கட்சி பிரிக்கும் என்பதால் இதனால் ஏற்படப் போகும் பாதிப்பு என்ன என்பது பற்றியும் அரசியல் தளத்தில் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், `தே.மு.தி.க முன்வைத்த நிபந்தனைகளை அ.ம.மு.க ஏற்றுக் கொண்டதா?' என அ.ம.மு.க செய்தித் தொடர்பாளர் காசிநாத பாரதியிடம் பிபிசி தமிழுக்காக கேட்டோம். `` இதுகுறித்து பேசக் கூடிய சூழலில் நான் இல்லை" என்றதோடு முடித்துக் கொண்டார்.

முதல்வர் வேட்பாளர் தினகரன்தான்!

இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டு மாவட்ட தே.மு.தி.க செயலாளர் அனகை முருகேசனிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். ``அ.ம.மு.க நிர்வாகிகளுடன் அமர்ந்து பேசி கூட்டணியை இறுதி செய்தோம். எங்களுக்கிடையே தொகுதிகளில்தான் இழுபறி ஏற்பட்டது. அவர்களுடன் பேசும்போது, 80 தொகுதிகள் வரையில் கேட்டோம். இதற்காக தொடர்ந்து மூன்று முறை பேசினோம். இறுதியாக, பொருளாளர் முன்னிலையில் அமர்ந்து பேசி தொகுதிகளை இறுதி செய்தோம்" என்றார்.

`கூட்டணியில் இணைவதற்காக என்னென்ன நிபந்தனைகள் முன்வைக்கப்பட்டன?' என்றோம். `` எந்த நிபந்தனைகளையும் நாங்கள் முன்வைக்கவில்லை. அதிக தொகுதிகள் வேண்டும் என்பதே எங்களின் டிமாண்டாக இருந்தது. அவர்கள் தர மறுத்துவிட்டனர். அவ்வளவுதான். முதல்வர் வேட்பாளராக தினகரன் தலைமையில் தேர்தலை சந்திக்கிறோம். தொடக்கத்தில் அ.ம.மு.க 42 வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. அதைத் திரும்பப் பெற்றுவிட்டனர். எங்களுக்குள் எந்தவித நெருடலும் இல்லை. எங்களால் முடிந்த அளவு தேர்தலில் செலவு செய்வோம்" என்றார்.

வலுப்பெற்ற தினகரன்?

`அ.ம.மு.க, தே.மு.தி.க அணி ஏற்படுத்தப் போகும் பாதிப்புகள் என்ன?' என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` இவ்விரு கட்சிகளின் வாக்கு சதவிகிதத்தைக் கூட்டிப் பார்த்தால் பெரிதாக ஒன்றும் இருக்காது. இந்தத் தேர்தலில் இது ஒரு பெரிய அணி என்ற தாக்கமும் இருக்கப் போவதில்லை. அதேநேரம், தினகரன் தலைமையில் கூட்டணி ஒன்று வலுப்பெற்றுள்ளது. இந்த அணி அ.தி.மு.க வாக்குகளை ஈர்ப்பதற்கு வாய்ப்புள்ளது. அது அ.தி.மு.கவுக்கு எந்தளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை தற்போதுள்ள சூழலில் கணிக்க முடியாது" என்கிறார்.

மேலும், `` இந்தக் கூட்டணி அ.தி.மு.கவுக்கு ஒரு சவாலான நிலையை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் அணியில் எஸ்.டி.பி.ஐ, ஓவைசி கட்சி ஆகியவை இணைந்துள்ளன. இது உருது பேசும் இஸ்லாமியர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுபான்மை வாக்குகளை ஓரளவுக்குப் பிரிப்பார்கள். இதனால் தி.மு.க அணிக்கு பாதிப்பு வருமா என்பது தேர்தல் முடிவில் தெரியவரும். இந்தச் சட்டமன்றத் தேர்தலில் அ.ம.மு.க வாங்கிய 5.5 என்ற பழைய வாக்கு சதவிகிதம் நீடித்தாலே பெரிய விஷயம்தான்" என்கிறார்.

தி.மு.க, அ.தி.மு.க ஆகிய கட்சிகளுக்கு எதிராக அ.ம.மு.க, மக்கள் நீதி மய்யம் ஆகியவை சில கட்சிகளோடு களமிறங்குவதும் நாம் தமிழர் கட்சி, புதிய தமிழகம் உள்ளிட்டவை தனியாகக் களமிறங்குவதும் எந்த அணிக்கு சரிவைக் கொடுக்கும் என்பது, வாக்கு எண்ணிக்கை நாளில் தெரிந்துவிடும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :