தமிழக சட்டமன்ற தேர்தல்: ஓபிஎஸ் சொத்து மதிப்பு கிடு, கிடு உயர்வு - இபிஎஸ், ஸ்டாலின், உதயநிதிக்கு எவ்வளவு சொத்து?

ஸ்டாலின் உதயநிதி

பட மூலாதாரம், ADMK & DMK

வரும் ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 12ஆம் தொடங்கிய நிலையில், முக்கிய வேட்பாளர்களாக களம் காணும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின், அவரது மகனும் திருவல்லிக்கேணி தொகுதி திமுக வேட்பாளருமான உதயநிதி ஆகியோர் தங்களின் வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். அதில் இடம்பெற்றுள்ள அவர்களின் சொத்து மதிப்பு விவரங்கள் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளன.

ஓ.பி.எஸ் சொத்து எவ்வளவு

வேட்பு மனு தாக்கல் தொடங்கிய மார்ச் 12ஆம் தேதி, தமிழக துணை முதல்வர் ஒ.பன்னீர் செல்வம் உட்பட 59 பேர் மனு தாக்கல் செய்தனர்.

இதில் ஓ. பன்னீர்செல்வத்தின் சொத்து மதிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் பல மடங்கு உயர்ந்துள்ளது. போடி தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ள அவர், 2016ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது அசையும் சொத்து ரூ.55 லட்சம் ஆக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார். தற்போது அவரது சொத்து மதிப்பு ரூ.5.19 கோடி ஆக இருப்பதாக மதிப்பிட்டு வேட்பு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல, 2016ல் ரூ.98 லட்சம் என ஓ.பி.எஸ் மதிப்பிட்டிருந்த அவரது அசையா சொத்தின் மதிப்பு, இப்போது ரூ.2.64 கோடி ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிட்டிருக்கிறார். மேலும் அவர், தனக்கு பூர்விக சொத்தோ, நிலமோ எதுவும் இல்லை எனவும், தனது மனைவி பெயரில் ரூ.10.06 கோடி மதிப்பில் சொத்துகள் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதைத்தொடர்ந்து இரு நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று திங்கட்கிழமை வேட்புமனு தாக்கல் தொடங்கியதும், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். அவர் இந்த தொகுதியில் தொடர்ந்து ஏழாவது முறையாக போட்டியிடுகிறார்.

எடப்பாடி பழனிசாமிக்கு ரூ. 4.68 கோடி மதிப்பில் அசையா சொத்து

2016ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலின்போது, தனது அசையும் சொத்து மதிப்பு ரூ.3.14 கோடி ஆக இருந்ததாக குறிப்பிட்டிருந்தார். தற்போது இவரது சொத்து மதிப்பு, ரூ.2.01 கோடி ஆக குறைந்திருப்பதாக மதிப்பிட்டிருக்கிறார்.

இதேபோல், 2016-ல் தனது அசையா சொத்தின் மதிப்பு ரூ.4.66 கோடி ஆக இருந்ததாகக் குறிப்பிட்டிருந்த எடப்பாடி பழனிசாமி, தற்போது அதன் மதிப்பு ரூ. 4.68 கோடி ஆக உள்ளது என கூறியுள்ளார். இவர் தனது வேட்பு மனுவில் 2016இல் தனக்கு ரூ.33 லட்சம் கடன் இருந்ததாகக் குறிப்பிட்டிருந்தார். தற்போது தனக்கு கடன் ரூ.29.75 லட்சம் இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

குறிப்பாக 2016ம் ஆண்டில் முதலமைச்சரின் சொத்து விவர பட்டியலில், அவர் மற்றும் அவருடைய மனைவி, மகன், மருமகள் ஆகியோரின் பெயரில் காட்டப்பட்டிருந்தது. ஆனால் தற்போது 2021ம் ஆண்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சொத்து மதிப்பு பட்டியலில் முதலமைச்சர் பழனிசாமி, அவரது மனைவி மற்றும் இந்து கூட்டுக்குடும்பம் என்ற அடிப்படையில் சொத்து விவரங்கள் காட்டப்பட்டுள்ளன.

முதலமைச்சர் பழனிசாமி, தனது கையிருப்புத் தொகையாக ரூ.6 லட்சமும், தனது மனைவியிடம் ரூ.2 லட்சமும், இந்து கூட்டுக்குடும்ப கையிருப்பு தொகை ரூ.11 லட்சம் ஆக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதன்படி முதல்வர் பழனிசாமியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 கோடி அளவுக்கு குறைந்துள்ளதாக அவர் தாக்கல் செய்துள்ள வேட்புமனு மூலம் தெரிய வருகிறது.

ஸ்டாலின், உதயநிதி சொத்துகள் எவ்வளவு?

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சென்னை கொளத்தூர் தொகுதியில் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். அவர் தனது சொத்து மதிப்பு ரூ. 4.94 கோடியாகவும், அசையா சொத்து மதிப்பு ரூ. 1.17 கோடியாக உள்ளதாக மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவரது மனைவி துர்கா ஸ்டாலின் பெயரில் ரூ. 53 லட்சம் மதிப்பில் அசையும் அசையா சொத்துகள் உள்ளன.

2016-ம் ஆண்டை விட மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு இம்முறை ரூ. 20 லட்சம் அதிகரித்துள்ளது அவரது வேட்பு மனு மூலம் தெரிய வருகிறது.

இதேவேளை, தமிழ் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து பிறகு அரசியலில் குதித்துள்ள ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலினின் சொத்து மதிப்பு, ரூ.28.82 கோடி என கூறப்பட்டுள்ளது. சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிடும் உதயநிதி, தனது மொத்த அசையும் சொத்து மதிப்பு ரூ. 22.28 கோடி எனவும் அசையா சொத்து மதிப்பு ரூ. 5.37 கோடி எனவும் தன்னிடம் ரேஞ்ச்ரேவர் கார், திருவள்ளுரில் விவசாய நிலம் உள்ளது என்றும் வேட்பு மனுவில் கூறியுள்ளார். உதயநிதி தனக்கு ரூ.1.35 கோடி கடன் உள்ளதாகவும், 2019-20இல் வருமான வரியாக ரூ. 4.89 லட்சம் தாக்கல் செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். தனது மனைவி கிருத்திகாவின் அசையும் சொத்து மதிப்பு ரூ. 1.17 கோடி எனவும் உதயநிதி குறிப்பிட்டுள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :