செல்லூர் ராஜுவுக்கு எதிராக சின்னம்மாள்: திமுக நிர்வாகிகள் தேர்தல் பணி தொடங்க சுணங்குவது ஏன்?

  • ஏ.ஆர். மெய்யம்மை
  • பிபிசி தமிழுக்காக
செல்லூர் ராஜூ

பட மூலாதாரம், Sellur Raju Twitter

அதிமுக அரசின் முக்கிய அமைச்சரான செல்லூர் கே. ராஜு மதுரை மேற்கு தொகுதியில் மூன்றாவது முறையாக வெற்றிபெற வேண்டும் என்கிற முனைப்பு காட்டும் வேளையில் பேக்கரி நடத்தும் பெண் ஒருவரை வேட்பாளராக களம் இறக்கி அனைவரையும் ஆச்சரியத்துக்கு உள்ளாக்கியிருக்கிறது திமுக தலைமை.

இந்த வேட்பாளர் அறிவிப்பால், ஏமாற்றமடைந்த மற்ற நிர்வாகிகள் அவருடன் களப்பணியில் ஈடுபட ஆர்வத்துடன் முன்வரவில்லை என்று கட்சித் தொண்டர்கள் கூறுகின்றனர்.

மதுரை மேற்கு தொகுதியில் அடிதட்டு அரசியலில் நீண்ட அனுபவமுள்ள சி. சின்னம்மாள் என்பவரை வேட்பாளராக அறிவித்திருக்கிறது திமுக தலைமை. மதுரை மாவட்டத்தில் உள்ள பத்து தொகுதிகளில் ஆறில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் இம்மாவட்டத்தில் போட்டியிடும் ஒரே பெண் வேட்பாளர் சின்னம்மாள்தான்.

அறுபத்து ஆறு வயதாகும் சின்னம்மாள் தனது 19வது வயதில் கட்சியில் சேர்ந்து பணியாற்றத் தொடங்கினார். தனக்கு திருமணமான எட்டாவது மாதத்தில் கட்சியில் உறுப்பினாராகி கணவருடன் கட்சி வேலைகளில் ஈடுபடத் தொடங்கியதாகக் கூறும் அவர் 2001ம் ஆண்டு தன் கணவரை இழந்தார். இரண்டு முறை மாநகராட்சி கவுன்சிலராக தன் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியாற்றிய அவர் சட்டமன்றத் தேர்தலில் முதல் முறையாக போட்டியிடுகிறார்.

படக்குறிப்பு,

சின்னம்மாள்

கட்சியில் தொடக்கம் முதல் மு.க. ஸ்டாலின் ஆதரவாளராக இருக்கும் ஜெயராமன், வழக்கறிஞர் இளமகிழன் உள்பட முக்கிய உள்ளூர் நபர்கள் மதுரை மேற்கு தொகுதிக்கு விருப்ப மனு செய்து காத்திருந்த போதிலும் சின்னம்மாள் பெயர் அறிவிக்கப்பட்டது தொண்டர்களை அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் ஒரு சேர உறைய வைத்தது.

கட்சியின் மற்ற வேட்பாளர்கள் தங்கள் தொகுதிகளில் அலுவலகங்களை திறந்து மக்களை சந்திக்கத் தொடங்கிவிட்ட போதிலும் சின்னம்மாள் தரப்பிலிருந்து வேலைகள் இன்னும் தொடங்கவில்லை.

பிரசாரம் தொடங்குவது பற்றி கேட்டபோது அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் இன்னும் உறுதியாகவில்லை என்றும் புதன்கிழமை மதுரையில் திமுக தலைவர் ஸ்டாலின் நடத்தும்அறிமுகக் கூட்டதிற்கு பிறகே தொகுதியில் மக்களை சந்திக்க உள்ளதாகவும் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

இந்தத் தொகுதியில் அமைச்சரை எதிர்த்து திமுக சார்பாக போட்டியிடுவதற்கு ஜெயராமன், இளமகிழன் ஆகியோரிடையே கடும் போட்டி நிலவியதாகவும், அதனால் பெண் வேட்பாளருக்கு ஒத்துக்கப்பட்டதாகவும் கட்சி வட்டாரங்களில் கூறுகின்றனர். ஜெயராமன் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளர் கோ. தளபதிக்கு தேர்தல் பணி செய்வதற்கு சென்று விட்டதாகவும், இளமகிழன் இரண்டு நாட்கள் கழித்து தான் வரவுள்ளதாகவும் தெரிவித்தனர்.

ஜெயராமனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, "பெண் என்பதால் சின்னம்மாள் அவர்களுக்கு 'சீட்' கொடுக்கப்பட்டது. எங்கள் தலைவர் ஸ்டாலின் முதலமைச்சராக வேண்டும் என்பதே என் விருப்பம். அதனால் சின்னம்மாளை வெற்றிபெற வைக்க வேண்டியது எங்கள் பொறுப்பு," என்றார்.

கட்சி நிர்வாகிகள் சுணக்கம் காட்டினாலும் இந்த வாய்ப்பை தனது நீண்ட கால கட்சிப் பணிக்கு கிடைத்த அங்கீகரமாகக் கருதும் சின்னம்மாள் உள்ளூர் அமைச்சரை தேர்தலில் எதிர்கொள்வதற்கு ஆயத்தமாக இருப்பதாகக் கூறுகிறார்.

வேறு எந்தத் தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் அனைத்து கட்சிகளிலும் வேட்பாளர் பட்டியல் வெளிவந்த பிறகு அதிருப்தியில் கட்சி மாறுவதும், அதிருப்தியை பொதுவெளியில் உரக்கக் கூறி தலைமைகளுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துவதும் அதிகமாகவே காணப்படுகிறது.

திமுகவில் அது குறைவாகவே காணப்பட்டாலும் மதுரை மேற்குத் தொகுதியை பொறுத்தமட்டில் நிர்வாகிகள் இலைமறை காயாக வேட்பாளருக்கு உறுதுணையாக களப்பணி செய்யாமல் தங்களது அதிருப்தியை காட்டுகின்றனர்.

கட்சியினரிடையே இந்த அலட்சியப் போக்கு தொடர்ந்தால் மக்களிடத்தில் அமைச்சர் மேல் அதிருப்தி இருந்தாலும் அவர் வெற்றிபெறவே வழி வகுக்கும் என்கிறார் திமுகவின் மூத்த தலைவர் ஒருவர்.

"பெண் என்ற முறையில் எனக்கு தலைவர் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ளார். நான் எனது 19 வது வயதில் கட்சியில் சேர்ந்து இன்று வரை கட்சிக்கு விசுவாசத்துடன் உழைத்ததற்கு கிடைத்த பரிசாகவே இந்த வாய்ப்பை பார்க்கிறேன். இதற்கு முன்பு நான்கு முறை இங்கு போட்டியிட விருப்ப மனு செய்திருக்கிறேன். கலைஞர் இருந்த போது என்னை ஒருங்கினைந்த மாவட்ட துணை செயலாளராக நியமித்தார். இன்று கட்சியினர் நான் வெற்றி பெற நூறு சதவீதம் ஒத்துழைப்பு தருகின்றனர்," என்று கூறுகிறார் சின்னம்மாள்.

எதிராளி பலம் வாய்ந்தவர் ஆயிற்றே அவரை எப்படி எதிர்கொள்வீர்கள் என்று கேட்டதற்கு, "அவரை வெல்வது ஒன்றும் கடினமில்லை. தலைமை வகுத்து கொடுத்த வியூகத்தின் படி வெல்வோம்," என்றார். அமைச்சரின் வளர்ச்சிப் பணிகள் குறிப்பாக பாலங்கள் கட்டியிருப்பதை பற்றி கேட்கும் போது, "மதுரையில் இருக்கும் முக்கிய பாலங்கள் எல்லாம் கலைஞர் கட்டியது, அதை விடவா இவர் கட்டியுள்ளார். பத்து ஆண்டுகளாக மக்களுக்காக எதையும் செய்யாதவர் கடந்த சில நாட்களாக அவர்களை ஓடி ஓடி சந்திக்கிறார்" என்றும் கூறுகிறார்.

அதிமுக நிறுவனர் எம்.ஜி.ஆர் 1980-ம் ஆண்டு வெற்றி பெற்ற தொகுதியின் இன்னாள் மக்கள் பிரதிநிதி என்பதில் பெருமிதம் கொள்ளும் செல்லூர் ராஜூ இந்த முறை கள நிலவரம் அறிந்து தொகுதி மாற நினைத்து மதுரை மேற்குடன் தெற்கு மற்றும் வடக்கு தொகுதிகளுக்கும் சேர்த்து விருப்ப மனு அளித்திருந்தார். முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மேற்கு தொகுதியிலேயே போட்டியிடுமாறு கூறிவிட்டார் என்று தெரிகிறது. ஆனாலும் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டும் தொகுதியில் மக்களை சந்தித்தும் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார்.

மதுரை தெற்கு மாவட்ட பொறுப்பாளராக இருக்கும் தளபதி மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜூவுடன் கடந்த இருமுறையாகப் போட்டியிட்டு தோற்றவர். அங்கு போட்டியிட இம்முறை விருப்பம் தெரிவிக்காததனால் மதுரை வடக்கு தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்ப்பட்டார். சரியாக 1,54,552 பெண்கள் உட்பட மொத்தம் 3,05,165 வாக்காளர்களைக் கொண்ட மேற்கு தொகுதியில் பிள்ளைமார், முக்குலத்தோர் மற்றும் பட்டியலின மக்களின் வாக்குகள் கணிசமாக உள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :