"அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தான் எங்கள் பலம்" - தொண்டாமுத்தூர் திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி பேட்டி

  • மு. ஹரிஹரன்
  • பிபிசி தமிழுக்காக
KARTHIKEYA SIVASENAPATHY FB

பட மூலாதாரம், KARTHIKEYA SIVASENAPATHY FB

படக்குறிப்பு,

தொண்டாமுத்தூர் தொகுதி திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி

தமிழக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி முடிந்தால் என் மீது வழக்கு தொடரட்டும் என்று அவருக்கு எதிராக தொண்டாமுத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளராக தேர்தல் களம் காணும் கார்த்திகேய சிவசேனாபதி தெரிவித்துள்ளார்.

திமுகவின் சுற்றுச்சூழல் அணிச் செயலாளராக உள்ள அவர், பிபிசி தமிழுக்கு அளித்த நேர்காணலில் இருந்து.

தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிட வேண்டும் என்பது உங்களின் விருப்பமா, திமுகவின் திட்டமா அல்லது ஐபேக்கின் யோசனையா?

ஐபேக் என்ன யோசனை வழங்கியது என்பது குறித்து எனக்கு தெரியாது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் என்னை தொண்டாமுத்தூர் தொகுதியில் போட்டியிடச் சொன்னார். நான் சரி என்று சொல்லிவிட்டேன்.

வேட்பாளர் மனுவில் நான் காங்கேயம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தேன். வேட்பாளர் நேர்காணலின்போது, 'தமிழகத்தின் மற்ற தொகுதிகளில் போட்டியிட தயாரா?' என என்னிடம் கேட்கப்பட்டது. எங்கு வேண்டுமானாலும் போட்டியிட தயாராக இருக்கிறேன் என கூறிவிட்டேன்.

திமுகவில் இணைந்த குறுகிய காலத்தில், நீங்கள் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டு இருக்கிறீர்கள். இதற்கு கட்சியின் மூத்த நிர்வாகிகள் அதிருப்தி தெரிவிக்கவில்லையா?

எனக்கே அது அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. 'விடியலை நோக்கி' பயணத்தை போல் இந்த தேர்தலில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று பிரசாரம் மற்றும் பொதுக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய விருப்பமாக இருந்தது. 'தொண்டாமுத்தூர் தொகுதியில் களமிறங்குங்கள்' என தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.

பட மூலாதாரம், KARTHIKEYA SIVASENAPATHY FB

ஆளுங்கட்சி அமைச்சரின் செல்வாக்குமிக்க தொகுதியில் எதை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் செய்கிறீர்கள்? உங்களின் பலம் என்ன?

அமைச்சர் எஸ் பி வேலுமணி தான் எங்களின் பலம். அவர் செய்துள்ள ஊழல்கள் குறித்து பிரசாரத்தில் விரிவாக எடுத்துரைத்து வருகிறோம். எனது பொதுவாழ்க்கை குறித்து விமர்சிக்க அவர்களிடம் எந்த விஷயமும் இல்லை. அவர் செய்து கொண்டிருப்பதற்கு நேர்மாறான பணிகளை நான் செய்து கொண்டிருக்கிறேன். கோவையில் உள்ள குளங்களில் கான்க்ரீட் அமைப்புகளை உருவாக்கி சுற்றுச்சூழலை அழித்து கொண்டிருக்கிறார். நான் எனது கிராமத்தில் சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான செயல்களை செய்து வருகிறேன்.

மேலும், நான் ஜல்லிக்கட்டுக்காக போராட்டங்களை மேற்கொண்டவன். ஜல்லிக்கட்டுக்காக கோவை கொடிசியா மைதானத்தில் போராடிய இளைஞர்களை குண்டர்களைக் கொண்டு அடக்கியவர் எஸ்.பி.வேலுமணி. இதுபோன்று, அவர் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் உள்ளன. என் மீது குறை சொல்வதற்கு அதிமுகவினரிடம் எதுவுமில்லை.

தொண்டாமுத்தூர் தொகுதி, நகர்ப்புற மற்றும் கிராமப்புற பகுதிகளை உள்ளடக்கியது. சுற்றுச்சூழல் வளம் நிறைந்த இந்த தொகுதியை நாசமாக்கும் வேலைகளை வேலுமணி செய்து வருகிறார். கோவையின் குடிநீர் ஆதாரமான சிறுவாணி நீரை தனியாருக்கு விற்றுள்ளார். மேலும், கோவை தொழில் நகரம் என்ற அடையாளத்தை இழந்து வருகிறது. அதற்குக் காரணம் எந்தத் தொழில் தொடங்கினாலும் அமைச்சர் வேலுமணியை "கவனிக்க" வேண்டும் என்ற நிலை உருவாகியுள்ளது. இது போன்ற அடுக்கடுக்கான புகார்களை அவர் மீது சுமத்தி வருகிறேன், முடிந்தால் அவர் என் மீது வழக்கு தொடுக்கட்டும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறேன்.

பட மூலாதாரம், KARTHIKEYA SIVASENAPATHY FB

தொண்டாமுத்தூர் தொகுதியில் செங்கல் சூளை தொழில், சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளது அதிமுக, திமுக ஆகிய இரு கட்சிகளைச் சேர்ந்தவர்களும் இதை செய்கின்றனரே?

ஒரு கட்சியில் சுற்றுச்சூழல் அணி இருப்பதனால், அந்த கட்சியில் உள்ள அனைவரும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆக இருப்பார்கள் என எதிர்பார்க்க முடியாது. ஒரு சில திமுகவினர் செங்கல் சூளை தொழில் செய்யலாம். அதற்காக கட்சிதான் அவர்களை செங்கல் சூளை நடத்த சொல்கிறது என சொல்லக் கூடாது.

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த அபராதத் தொகையை அதிகப்படுத்த வேண்டும், கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். திமுக ஆட்சிக்கு வந்ததும் இதுபோன்ற சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு விளைவிக்கும் செயல்கள் குறித்து சுற்றுச்சூழல் அணி மூலமாக, சுற்றுச்சூழல் அமைச்சருக்கு தெரிவிக்கப்படும். சட்டத்துக்கு எதிராக எந்த செயல் நடந்தாலும், எந்த கட்சியில் இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

2006ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் விஜயகாந்தின் தேமுதிக, திமுக வாக்குகளை பிரித்ததாக கருதப்பட்டது. அதேபோல், இந்த தேர்தலில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் திமுகவின் வாக்குகளை பிரிக்குமா?

மக்கள் நீதி மய்யம் கட்சியினரை ஒரு சக போட்டியாளராகக் கூட நாங்கள் கருதவில்லை. காரணம், அவர்களிடம் கொள்கை என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. வெறும் அவசரம் மட்டும்தான் இருக்கிறது. அந்த கட்சியில் அமைச்சர் பதவிக்கு தகுதியான 30 நபர்களை அடையாளம் காண்பது கூட சிரமம்தான். மேலும், கலைஞர் குறித்து அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்ட கருத்துகள், அவரிடமிருந்து யாரும் எதிர்பாராதவை. அவ்வாறு, கலைஞரைப் பற்றி பேசியாவது அரசியல் செய்ய வேண்டும் என்ற நினைக்கிறார்கள். அது, கலைஞருக்குத்தான் பெருமை.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :