ஸொமேட்டோ காமராஜ் விவகாரத்தில் பெண்ணுக்கு எதிராக திரும்பிய நெட்டிசன்கள்

ஹிதேஷா

பட மூலாதாரம், TWITTER

பெங்களூரில் ஸொமேட்டோ டெலிவரி ஊழியரால் தாக்கப்பட்டதாகக் கூறி பெண் ஒருவர் மூக்கில் ரத்தம் சொட்டச்சொட்ட புகார் தெரிவித்த "மார்ச் 9" காணொளி சமூக ஊடகங்களில் வைரலான விவகாரத்தில் புதிய திருப்பமாக சம்பந்தப்பட்ட ஊழியர், அந்த பெண் மீது எதிர் புகார் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக பெங்களூரு காவல் நிலையத்தில், ஸொமேட்டோ ஊழியர் காமராஜ் தெரிவித்த புகாரில், அந்த பெண் வாடிக்கையாளர் தன்னை மிகவும் இழிவான வார்த்தைகளால் பேசி, காலணிகளை கொண்டு தாக்கியதாகவும் கூறியுள்ளார்.

முன்னதாக, ஹிதேஷா என்ற அந்த வாடிக்கையாளர், உணவு விநியோகத்தில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறி ஊழியர் காமராஜிடம் கடுமையாகப் பேசியதாகவும் அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் பார்சலை வாங்கிக் கொண்டு கதவை தாழிட அந்த பெண் முயன்றபோது, அந்த பார்சலை காமராஜ் பிடுங்கியதாகவும் ஹிதேஷா காணொளியில் கூறியிருந்தார்.

அப்போது தனது முகத்தில் காமராஜ் குத்து விட்டபோது, தனது மூக்கில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்ததாகவும் அவர் தனது காணொளியில் பேசியிருந்தார்.

ஆனால், தனது புகாரில் காமராஜ், நான் அந்த பெண்ணிடம் டெலிவரி தாமதத்துக்காக மன்னிப்பு கேட்டதாகவும் சாலை கட்டுமான பணிகள் காரணமாக ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலே அதற்கு காரணம் என்றும் கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், தான் கொண்டு சென்ற உணவு பார்சலை திரும்ப எடுத்துச் செல்லுமாறு கூறி தன்னை தாக்கியதாகவும், அப்போது அந்த பெண் தன்னைத் தானே தாக்கியபோது, அவரது கைவிரல் மோதிரத்தாலேயே அவரது முகத்தில் காயம் ஏற்பட்ட ரத்தம் வந்ததாக காமராஜ் கூறியுள்ளார்.

இந்த நிலையில் காமராஜ் அழுதபடி பேசும் ஒரு காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், "இந்த விவகாரத்தில் இருந்து நான் வெளி வந்து எனது பணிக்கு திரும்ப வேண்டும். எனது தந்தை 15 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். எனது குடும்பத்தில் நான் மட்டுமே வருவாய் ஈட்டுபவன். எனது தாய் உடல் நலமின்றி இருக்கிறார்," என அவர் கன்னட மொழியில் பேசியிருக்கிறார்.

முன்னதாக, இந்த சம்பவம் தொடர்பாக ஹிதேஷா தெரிவித்த புகார் அடிப்படையில் காமராஜை பெங்களூரு நகரின் எலக்ட்ரோனிக்ஸ் சிட்டி காவல்துறையினர் கைது செய்தனர்.

இதற்குள்ளாக, ஹிதேஷாவின் காணொளியை சமூக ஊடகங்களில் பார்த்தவர்களும் பிரபல திரையுலக நட்சத்திரங்களும் அவருக்கு ஆதரவாக கருத்துகளை பதிவிடத் தொடங்கினர்.

பட மூலாதாரம், HITESHACHANDRANEE

இதேவேளை, கைது செய்யப்பட்ட காமராஜுக்கு ஆதரவாக பரிணீத்தி சோப்ரா உள்ளிட்ட பிரபலங்கள் ஆதரவுக்கருத்துகளை பதிவிட்டனர்.

காமராஜ் கைது செய்யப்பட்ட பிறகு அவர் காவல்துறையினரிடம் விவரித்த சம்பவம் தொடர்பான தகவல்களை ஊடகங்கள் வெளியிட்டன.

ஹிதேஷா தாக்கப்பட்டதாக கூறப்பட்ட அந்த சம்பவம் தொடர்பாக பெங்களூர் கிழக்கு மாவட்ட காவல்துறை கூடுதல் ஆணையாளர் எஸ். முருகனிடம் பிபிசி தொடர்பு கொண்டு பேசியபோது, இந்த விவகாரத்தில் விசாரணை நடத்தி வருகிறோம். சட்டப்பூர்வ நடைமுறையை கண்டிப்பாக பின்பற்றுமாறு விசாரணை அதிகாரிகளை கேட்டுள்ளோம் என்று தெரிவித்தார்.

ஸொமேட்டோ விளக்கம்

இதற்கிடையே, ஹிதேஷாவின் புகார் அடிப்படையில் காமராஜ் மீது உள்நோக்கத்துடன் இழிவுபடுத்தியது, கடுமையான காயம் ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல, காமராஜின் புகார் அடிப்படையில் ஹிதேஷா மீது தவறாக தடுக்க முயன்றது, பலப்பிரயோகத்துடன் தாக்குவது, உள்நோக்கத்துடன் இழிவுபடுத்தியது மற்றும் குற்ற நோக்குடன் மிரட்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த விவகாரத்தில் ஸொமேட்டோ நிறுவனம், ஊழியர் காமராஜ் மீதான காவல் விசாரணை காலத்தில் அவருக்கான ஊதிய படி நீங்கலாக அவரை டெலிவரி செய்யும் பணியில் இருந்து தற்காலிகமாக விலக்கி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. மேலும், காமராஜ் மீதான குற்றம் நிரூபிக்கப்படாதவரை அவருக்கான சட்ட உதவியை வழங்கவும் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஸொமேட்டோ கூறியுள்ளது.

வாடிக்கையாளர் ஹிதேஷாவின் மருத்துவ செலவினங்களை ஏற்றுக் கொள்வதாகவும் அந்த நிறுவனத்தின் நிறுவனர் தீபிந்தர் கோயல் தெரிவித்திருக்கிறார்.

ஊழியர் காமராஜ் பற்றி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள கோயல், ஸொமேட்டோவுடனான தனது 26 மாத பணியில் 5,000க்கும் அதிகமான டெலிவரிகளை காமராஜ் செய்துள்ளார். அவரது ரேட்டிங் அளவு 4.75/5 ஸ்டார்கள் என்றவாறு உள்ளது என்று கூறியுள்ளார்.

மேக்கப் கலைஞரும் சோஷியல் இன்ஃபுளுவென்சராகவும் அறியப்படும் ஹிதேஷா, ஸொமேட்டோ ஊழியர் தன்னை தாக்கியதாக வெளியிட்ட காணொளிக்கு பிறகு, சமூக ஊடகங்களில் பலரும் காமராஜையும் அவர் பணியாற்றிய ஸொமேட்டே நிறுவன சேவையையும் திட்டித் தீர்த்தனர்.

இந்த நிலையில், காமராஜ் தரப்பு விளக்கமும் புகாரின் விவரமும் வெளிவந்த நிலையில், தற்போது ஹிதேஷாவுக்கு எதிரான குரல்களும் கருத்துகளும் சமூக ஊடகங்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளன.

அந்த வகையிலேயே நடிகை பிரியங்கா சோப்ராவின் சகோதரி பரிணீத்தி சோப்ரா, தனது ட்விட்டர் பக்கத்தில் ஸொமேட்டோ நிறுவன ஊழியர் நிரபராதியாக இருக்கலாம் என நம்புகிறேன். சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு தண்டனை கிடைக்க உதவுங்கள். இது மனிதத்தன்மையற்ற, அவமானகரமான செயல். இந்த விவகாரத்தில் நான் எவ்வாறு உதவலாம் என தெரிவியுங்கள் என கூறியுள்ளார்.

சோஷியல் இன்ஃபுளன்சராக அறியப்படும் ஹிதேஷா, ஸொமேட்டோ ஊழியர் சம்பவத்தை தனது சமூக ஊடக பின்தொடருவோரை பெருக்க ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக் கொண்டாரா என்ற சர்ச்சையும் எழுந்திருக்கிறது. காரணம், இந்த சம்பவத்துக்கு முன்பு வெகு சில ஆயிரங்களில் இருந்த அவரது பின்தொடருவோரின் எண்ணிக்கை இப்போது 69 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :