கொங்கு மண்டல அதிமுக அமைச்சர்களை குழப்பும் சர்வே முடிவுகள்: வாஷிங் மெஷினும், 1500 ரூபாயும் எடுபடுமா? - தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2021

  • ஆ. விஜயானந்த்
  • பிபிசி தமிழுக்காக
எடப்பாடி பழனிசாமி

சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க அளித்துள்ள வாக்குறுதிகளுக்கு மக்கள் மத்தியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா என கொங்கு மண்டல அமைச்சர்கள் தீவிர ஆய்வு நடத்தி வருகின்றனர். இதில் கிடைத்த முடிவுகளையொட்டியே அவர்கள் களவேலை பார்த்து வருகின்றனர். அமைச்சர்கள் மேற்கொண்ட சர்வே முடிவுகள் என்ன சொல்கின்றன?

தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி பிரதான கட்சிகளான தி.மு.கவும் அ.தி.மு.கவும் தேர்தல் பிரசாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றன.

`10 ஆண்டுகால ஆட்சி அப்படியே தொடர வேண்டும்' என்ற கணக்கில் அ.தி.மு.கவும், `இந்தமுறை அரியணையில் ஏறியே ஆக வேண்டும்' என்ற முனைப்பில் தி.மு.கவும் தேர்தல் பிரசார வியூகங்களை வகுத்துள்ளன.

இவர்களைத் தவிர அ.ம.மு.க, நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டு பிரசாரத்தில் கவனம் செலுத்தி வருகின்றன. மேலும், விதவிதமான விளம்பரங்கள் மூலமாக மக்களைக் கவரும் வேலைகளும் நடந்து வருகின்றன.

சர்வே பணியில் 40 பேர்

இந்நிலையில், சட்டமன்றத் தேர்தல் நாளான ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு வெகுசில நாள்களே இருப்பதால், அ.தி.மு.க அரசுக்கு மக்கள் மத்தியில் கிடைத்துள்ள வரவேற்பு குறித்து கொங்கு மண்டல அ.தி.மு.க அமைச்சர்கள் சிலர், தனியார் ஏஜென்சிகள் மூலம் சர்வே பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். அதில் கிடைத்துள்ள பாசிட்டிவ், நெகட்டிவ் அம்சங்களை மையமாக வைத்தே களநிலவரத்தில் மாற்றங்களைச் செய்து வருகின்றனர்.

கடந்த 15 ஆம் தேதி முதல் இந்த சர்வே பணிகள் மாநிலம் முழுவதும் பரவலாகத் தொடங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்காக 40 பேர் கொண்ட அணி ஒன்று களமிறக்கிவிடப்பட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 2 நாள்கள் என்ற வீதத்தில் சர்வே பணிகள் நடந்து வருகின்றன. முதல்கட்டமாக 234 தொகுதிகளில் 50 தொகுதிகளுக்கான களநிலவரம் தெரியவந்துள்ளது.

எடப்பாடி ஆட்சி எப்படி?

`` அ.தி.மு.க அரசின் தேர்தல் கால வாக்குறுதிகள் மக்கள் மத்தியில் சென்றடைந்துவிட்டது சர்வேயில் தெரியவந்துள்ளது. தி.மு.க அறிவித்த குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் என்ற வாக்குறுதி மட்டுமே மக்கள் மனதில் பதிந்துள்ளது. அதேநேரம், அ.தி.மு.க அரசின் அம்மா வாஷிங்மெஷின் வாக்குறுதியும் 1,500 ரூபாய் பிளஸ் 6 சிலிண்டர்கள் என்ற திட்டமும் மக்களிடம் எடுபட்டுள்ளது. அதேநேரம், `அடுத்த முதல்வராக யார் வர வேண்டும்?' என்ற கேள்விக்கு எடப்பாடி பழனிசாமியைவிடவும் ஸ்டாலின் பெயரைத்தான் பெரும்பாலான மக்கள் முன்மொழிந்துள்ளனர்.

ஆனால், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சி குறித்து மக்கள் மத்தியில் மோசமான பதில்கள் எதுவும் வரவில்லை. மேலும் எடப்பாடி அரசின் செயல்பாடுகள் அபாரம் என்றோ, சுமார் என்றோ யாரும் சொல்லவில்லை. ஒரு சிலர் மட்டுமே `இந்த ஆட்சி மோசம்' எனப் பதில் அளித்துள்ளனர்" என்கிறார் சர்வே பணியில் ஈடுபட்ட தேர்தல் ஆய்வாளர் ஒருவர்.

எடுபடாத சோலார் அடுப்பு

மேலும் சில தகவல்களை பிபிசி தமிழிடம் அவர் பட்டியலிட்டார். `` இந்த சர்வேயில் 18 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. அதில், முதல் ஐந்து கேள்விகள் மட்டும் அடிப்படையான சில தகவல்களைக் கொண்டிருந்தன. அ.தி.மு.க அரசின் செயல்பாடுகள், அரசின் எந்த திட்டம் அதிகப்படியான மக்களைச் சென்று சேர்ந்துள்ளது, இந்த அரசின் தோல்வி எது.. ஸ்டெர்லைட் விவகாரம், ஜெயராஜ் பென்னிக்ஸ் விவகாரம், நீட் தேர்வு, எட்டு வழிச்சாலை ஆகியவை குறித்த கேள்விகள் கேட்கப்பட்டன. இந்தக் கேள்விகளில் நீட் மற்றும் ஸ்டெர்லைட் தொடர்பான விஷயங்களில் அரசுக்கு எதிராக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர். எந்தக் கட்சியின் வாக்குறுதிகள் பிடித்துள்ளன, அதில் எந்த வாக்குறுதி ஈர்த்தது என்பன தொடர்பான கேள்விக்கு சிலிண்டரை விடவும் வாஷிங் மெஷினும் 1,500 ரூபாயும் மக்களிடம் எடுபட்டுள்ளது தெரியவந்துள்ளது. ஆனால், சோலார் அடுப்பு வாக்குறுதி மக்களிடம் வரவேற்பைப் பெறவில்லை" என்கிறார்.

சர்வே ஆச்சர்யம்

மேலும், `` டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தது தொடர்பாக, குறிப்பிட்டுக் கேள்வி கேட்டால் மட்டுமே மக்களிடம் இருந்து பதில் வருகிறது. அதனை டெல்டா மக்கள் பெரிதாகப் பார்க்கவில்லை. திருப்பூர், கோவை மாவட்டங்களில் அத்திக்கடவு, அவினாசி திட்டத்தை வரவேற்றுள்ளனர். இதுதவிர, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிப்பும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது. இந்தக் கடனை வாங்கியவர்களில் பெரும்பாலானோர் அ.தி.மு.கவினர் என்றாலும் களத்தில் சற்று உணர்வுபூர்வமாக இந்த அறிவிப்பு மாறியுள்ளதைக் கவனிக்க முடிகிறது. களநிலவரம் ஆட்சிக்கு ஆதரவாகவும் இல்லை; எதிராகவும் இல்லை என்பதுதான் ஆச்சரியம்" என்கிறார்.

தி.மு.க வேட்பாளர்கள் வலுவானவர்களா?

சர்வே முடிவுகளைவிடவும் கொங்கு மண்டல அமைச்சர்கள் பல்வேறு விவகாரங்களால் நம்பிக்கையோடு உள்ளனர். இந்த மண்டலத்தில் 51 தொகுதிகள் வருகின்றன. நீலகிரி, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர் ஆகிய மாவட்டங்களில் அ.தி.மு.கவுக்கு 26 தொகுதிகளில் வரையில் வெற்றி கிடைக்கலாம் எனவும் கணக்குப் போட்டுள்ளனர். கொங்கு மண்டலத்தில் கரூர் செந்தில்பாலாஜியை தவிர தி.மு.கவில் வலுவான வேட்பாளர்கள் இல்லை எனவும் நினைக்கின்றனர்.

`அதையும் தாண்டி தி.மு.க வெற்றி பெற்றால் அது ஸ்டாலினுக்கான வாக்குகளாக மட்டுமே இருக்கும்' எனக் கருதுகின்றனர். மேலும், தி.மு.க அணியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி 3 இடங்களை வாங்கியுள்ளது.

`இது தி.மு.கவுக்கு சாதகமாக முடியலாம்' என்ற பேச்சும் உள்ளது. அதேநேரம், ஆட்சி அதிகாரத்தில் கொங்கு வேளாளர் சமூகத்தினர் மட்டுமே இருப்பதும் அவர்களைச் சார்ந்தவர்களுக்கே பதவிகள் கொடுக்கப்படுகிறது என்பதில் பிற சமூகத்தினர் மத்தியில் அதிருப்தி உள்ளதையும் சர்வே எடுத்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அதிருப்தி வேட்பாளர்களால் பாதிப்பு

இதுதவிர, `பூத் கமிட்டிப் பணிகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்' எனவும் கொங்கு தரப்புக்கு அரசியல் நிபுணர்கள் ஆலோசனை அளித்துள்ளனர். `ஜெயலலிதா இல்லாத சூழலில் பூத் கமிட்டிகளை வலுப்படுத்துவதும் அதனைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அவசியம்' எனக் குறிப்பிட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து, `ஒவ்வொரு தொகுதியிலும் அ.தி.மு.கவில் சீட் கிடைக்காதவர்கள் சுயேச்சையாகப் போட்டியிடுவதும் பாதிப்பை ஏற்படுத்தலாம்' எனத் தெரிவித்துள்ளனர்.

புதுக்கோட்டை விஜயபாஸ்கருக்கு எதிராக மாவட்ட வழக்கறிஞர் அணியின் நெவளிநாதன் மனுத்தாக்கல் செய்துள்ளதும் திருமயத்தில் வேட்பாளர் வைரமுத்துவுக்கு எதிராக முன்னாள் ஒன்றிய சேர்மன் அழகு சுப்பையா களமிறங்குவதும் அ.தி.மு.க தரப்புக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. இதேபோல், கொங்கு மண்டலத்தில் பெருந்துறை தோப்பு வெங்கடாச்சலமும் சேந்தமங்கலம் சந்திரசேகரனும் சுயேச்சையாகப் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளனர்.

இவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து நீக்கி ஓ.பி.எஸ்ஸும் இ.பி.எஸ்ஸும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

`இவர்களில் தோப்பு வெங்கடாச்சலத்துக்கு மட்டும் தொகுதியில் கூடுதல் வாக்குகள் கிடைக்கலாம். சேந்தமங்கலம் சந்திரசேகரால் பெரிதாக பாதிப்பு வரப் போவதில்லை' எனவும் அமைச்சர் தரப்புக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. `தேர்தல் நெருக்கத்தில் கொங்கு மண்டலத்தில் அ.தி.மு.க-தி.மு.க மோதல் வலுவடைய வாய்ப்புள்ளது' எனவும் சர்வே எடுத்தவர்கள் கூறியுள்ளதாக அ.தி.மு.க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

மிரட்டல் பிரசாரங்கள்

`அ.தி.மு.க தேர்தல்கால வாக்குறுதி எடுபடுமா?' என அ.தி.மு.க செய்தித் தொடர்பாளர் பெங்களூரு புகழேந்தியிடம் பிபிசி தமிழுக்காக பேசினோம். `` மக்களுக்கு இந்த அரசு என்னவெல்லாம் செய்யப் போகிறது என்பதைப் பற்றி பிரசாரத்தில் தொடர்ந்து பேசி வருகிறோம். விவசாயக் கடன் ரத்து, 11 மருத்துவக் கல்லூரிகள் கொண்டு வந்தது என அரசின் சாதனைகளை முன்னிறுத்துகிறோம். மக்களுக்கு பயன்பெறக் கூடிய அம்மா வாஷிங்மெஷின் போன்ற திட்டங்களால் மக்கள் ஈர்க்கப்பட்டுள்ளனர். ஆனால், தேர்தல் அறிக்கையைப் பற்றியெல்லாம் தி.மு.க பேசாமல், விசாரணைக் கமிஷன், சிறை என மிரட்டல் பிரசாரங்களை முன்னெடுக்கின்றனர். இதையெல்லாம் தி.மு.க தெரிந்தேதான் செய்கிறதா எனத் தெரியவில்லை. தேர்தல் களத்தில் ஏற்பட்ட பயத்தில் தி.மு.க தலைவர் பேசி வருவதாகவே பார்க்கிறோம்" என்கிறார்.

மேலும், `` கொங்கு மண்டலத்தில் சிறப்பான திட்டங்களை அமைச்சர்கள் முன்னெடுத்துள்ளனர். அங்கு போட்டி என்பதே இல்லை. அம்மா இருந்தபோது கொங்கு மண்டலத்தில் தி.மு.க ஒரு இடத்தில்தான் வெற்றி பெற்றது. இந்தமுறை அதற்கான வாய்ப்புகளும் இல்லை. நீட் விவகாரத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பலன் அளிக்கும் சட்டமசோதாவைக் கொண்டு வந்ததால் 405 மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துவிட்டனர். இது இந்த அரசுக்குக் கிடைத்த வெற்றியாகத்தான் பார்க்கிறோம். நீட் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை யாராலும் மாற்ற முடியாது. இந்த ஆட்சி தொடரும். தி.மு.க எதிர்க்கட்சி வரிசையில் அமரும்" என்கிறார்.

180 தொகுதிகளில் வாய்ப்பு

அ.தி.மு.கவினரின் குற்றச்சாட்டு குறித்து தி.மு.க சட்டத்துறை இணைச் செயலாளர் வீ.கண்ணதாசனிடம் பேசினோம். `` டெல்டா மண்டலத்தில் அ.தி.மு.க சொல்கின்ற வாக்குறுதிகளை மக்கள் ஏற்கவில்லை. ஆட்சிக்கு எதிரான மனநிலை மக்களிடம் அதிகப்படியாக உள்ளது. மன்னார்குடியைச் சேர்ந்த முக்கிய நபர் எங்களிடம் பேசும்போது, `இந்தமுறை தி.மு.க-வுக்குத்தான் வாக்களிப்போம்' என்றார். அ.தி.மு.கவினரே, `தி.மு.கதான் வரும்' என்பதில் உறுதியாக உள்ளனர். மத்திய அரசின் பலத்தையும் பணத்தையும் பிரதானமாக வைத்து அ.தி.மு.கவின் அமைச்சர்கள் செயல்பட்டு வருகின்றனர்.

இவர்கள் தொலைக்காட்சிகளில் கொடுக்கும் விளம்பரங்களும் மக்கள் மத்தியில் எடுபடவில்லை. சிலிண்டர் கொடுப்போம் எனக் கூறுவதையும் மக்கள் நம்பவில்லை. பெட்ரோல், டீசல் விலை உயர்வால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்கிறார்.

மேலும், `` சிறுபான்மை சமூக மக்களுக்கு அ.தி.மு.க கூட்டணி மேல் துளியளவும் நம்பிக்கையில்லை. வடமாவட்டங்களில் வன்னிய சமூக மக்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு என்ற அறிவிப்பால், பிற சமூக மக்கள் மத்தியில் அதிருப்தி உள்ளது. இந்த ஒதுக்கீட்டையும் அவரச கோலத்தில் அறிவித்து விட்டனர். அதேபோல், தேவேந்திரகுல வேளாளர் பெயர் மாற்றத்தால் பிற வேளாளர் சமூக மக்களும் அதிருப்தியில் உள்ளனர். இதன் காரணமாக, 180 தொகுதிகளுக்கும் மேல் தி.மு.க வெற்றி பெறும்" என்கிறார்.

கழகங்களின் கணக்கு எடுபடுமா?

`தி.மு.க, அ.தி.மு.கவின் தேர்தல்கால கணக்குகள் எடுபடுமா?' என மூத்த பத்திரிகையாளர் சிகாமணியிடம் பேசினோம். `` சென்னை மண்டலம், கிழக்கு, மேற்கு, வடக்கு, மத்திய மண்டலம் ஆகியவற்றில் சென்னை மண்டலத்தில் தி.மு.க முழுமையாக வெற்றி பெறும் என நினைக்கிறேன். டெல்டா மாவட்டங்களில் தினகரன் அணியினர் வாக்குகளைப் பிரிக்கலாம். தென்மண்டலத்தில் அ.ம.மு.கவால் எந்தளவுக்கு அ.தி.மு.கவுக்கு பாதிப்பு இருக்கும் என்பதை தற்போதைய சூழலில் வரையறுக்க முடியாது" என்கிறார்.

மேலும், `` 2014 நாடாளுமன்ற தேர்தலில் மேற்கு மண்டலத்தில் 4 மக்களவைத் தொகுதிகளில் தி.மு.க மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. அந்தநிலைமை 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மாறிவிட்டது. உள்ளாட்சித் தேர்தலில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் பாதிக்குப் பாதி வெற்றி பெற்றுள்ளனர். இந்தநிலை தொடர்ந்தால் பாதிக்கு பாதி அளவுக்கு இரு கட்சிகளுக்கும் வெற்றி, தோல்விகள் இருக்கும். கொங்கு மண்டலத்தில் சிறு, குறு தொழில்கள் பெரும் நஷ்டத்துக்கு ஆளாகியுள்ளன. அங்கு அம்மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இவை அ.தி.மு.க அணிக்குப் பாதகமாக உள்ளன. சென்னை, கிழக்கு, டெல்டா ஆகிய பகுதிகளில் தி.மு.கவுக்கு சாதகமான சூழல் உள்ளதாகத் தகவல் வருகிறது. அதேநேரம், அதிகாரம் இருப்பதால் தி.மு.கவின் வெற்றியைப் பறித்துவிடலாம் என்ற கணக்கிலும் அ.தி.மு.க செயல்படுகிறது" என்கிறார்.

தேர்தல்கால வாக்குறுதிகள், சில கட்சிகள் தனித்துப் போட்டியிடுவது, சிறுபான்மை வாக்குகளைப் பிரிப்பது எனப் பல்வேறு வியூகங்களோடு அ.தி.மு.க அணி களமிறங்கியுள்ளது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: