புதுச்சேரியில் ரங்கசாமியை எதிர்க்காமல் ஒதுங்கும் காங்கிரஸ் - பின்னணி என்ன?

  • நடராஜ் சுந்தர்
  • பிபிசி தமிழுக்காக
புதுச்சேரி

புதுச்சேரியில் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் அனைத்து கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் வேட்பு மனு தாக்கல் செய்யவும் அவற்றை திரும்பப் பெறவும் அளிக்கப்பட்ட அவகாசம் வெள்ளிக்கிழமை மாலையுடன் நிறைவு பெற்றது.

புதுச்சேரியை பொருத்தவரை, பிரதான கட்சிகளான காங்கிரஸ் மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் இடையே தான் கடும் போட்டி நிலவுவதாக கருதப்பட்டது. குறிப்பாக புதுச்சேரியில் உள்ள 30 தொகுதிகளிலும் தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் மத சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றன. இதில் இரண்டு கூட்டணி கட்சிகளும் 30 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை அறிவித்தன.

முன்னதாக தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ், பாஜக அதிமுக சார்பில் 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் உறுதி செய்யப்பட்டனர்.

இதே போன்று, மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியில் உள்ள காங்கிரஸ், திமுக, விசிக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உள்பட அனைவருக்கும் 30 தொகுதிப் பங்கீடு செய்யப்பட்டது. இதில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 15 தொகுதிகளில், ஆந்திர மாநில எல்லைகளால் சூழப்பட்ட ஏனாம் தொகுதியை தவிர்த்து 14 தொகுதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

இதற்கிடையே இன்று (மார்ச் 19) வேட்பு மனு தாக்கல் நிறைவடையும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏனாம் தொகுதியில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இன்று மாலை வேட்புமனு தாக்கல் முடியும் வரை காங்கிரஸ் கட்சி சார்பில் வேட்பு மனு தாக்கல் செய்ய யாரும் வரவில்லை. இதன் மூலமாக காங்கிரஸ் கட்சி ஏனாம் தொகுதியில் போட்டியிடவில்லை என்பது உறுதியாகியுள்ளது.

குறிப்பாக ஏனாம் தொகுதியில், ஆரம்ப காலத்தில் சுயேச்சையாக போட்டியிட்டு வந்த மல்லாடி கிருஷ்ணா ராவ், 2001 முதல் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு தொடர்ந்து வெற்றி பெற்று வந்தார். இந்த சூழலில், நாராயணசாமி தலைமையிலான ஆட்சியில் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்த மல்லாடி கிருஷ்ணா ராவ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு தனது ஆதரவைத் தெரிவித்தார்.

மேலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சித் தலைவர் ரங்கசாமி புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் போட்டியிடுவது மட்டுமின்றி, ஏனாமில் கூடுதலாகப் போட்டியிடுகிறார்.

காங்கிரஸ்

குறிப்பாக 2011இல் சட்டமன்ற தேர்தலில் ரங்கசாமி இதேபோன்று புதுச்சேரியில் உள்ள தட்டாஞ்சாவடி மற்றும் கதிர்காமம் உள்ளிட்ட இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்‌. அதுபோலவே, இந்த முறை ஏனாமில் மல்லாடி கிருஷ்ணா ராவ் ஆதரவுடன் ரங்கசாமி போட்டியிடுகிறார். இதனால் காங்கிரஸ் தரப்பு, கடைசி நேரத்தில், ஏனாம் தொகுதியில் செல்வாக்கு மிக்க மல்லாடி கிருஷ்ணா ராவை எதிர்த்து வேட்பாளரை நிறுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஏனாம் தொகுதியில் தேசிய கட்சியான காங்கிரஸ் போட்டியிடாமல் இருப்பது, புதுச்சேரியில் காங்கிரஸ் அதன் கட்சிக்கு எதிர்காலத்தை இழந்துவிட்ட சூழலைக் காட்டுவதாக மூத்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

இது குறித்து அரசியல் விவகாரங்களை மிக நெருக்கமாகக் கவனித்து வரும் மூத்த அரசியல் ஆய்வாளர் நடராஜன் கூறுகையில், "ஏனாம் பிராந்தியத்தைப் பொருத்தவரை மல்லாடி ஒருவர் மட்டுமே கட்சியாக இருக்கிறார். அங்கே எந்த கட்சி போட்டியிட்டாலும் மல்லாடி கிருஷ்ணா ராவை மீறி எதுவும் செய்ய முடியாது என்ற அளவிற்கு, ஏனாம் தொகுதி அவரது கோட்டையாக இருக்கிறது. அவர் யாரைக் காட்டி வாக்கு சேகரிக்கிறாரோ அவருக்குத் தான் மக்கள் வாக்களிப்பர். இதன் காரணமாகப் பாதுகாப்பான‌ முறையில் ரங்கசாமி அங்கே போட்டியிடுகிறார். அங்கே அவர் நிற்க வேண்டிய அவசியமில்லை, வேறு வேட்பாளர்களைக் கூட களமிறக்கியிருக்கலாம். ஒருவேளை ரங்கசாமிக்கு தட்டாஞ்சாவடி தொகுதியில் அவருக்கு வெற்றி பெறுவதில் சந்தேகம் இருக்கிறதா என்று தெரியவில்லை," என்று கூறினார்.

"இதற்கு முன்பு அவர் காங்கிரஸ் கட்சியில் இருந்திருந்தாலும், மல்லாடி சொல்வது தான் ஏனாமில் நடக்கும். காங்கிரஸ் கட்சியில் மல்லாடி கிருஷ்ணாராவை எதிர்த்து போட்டியிடும் அளவிற்கு மக்கள் செல்வாக்குள்ள வேட்பாளர் இல்லை. அதன் காரணமாகவே இந்த முறை ஏனாமில் காங்கிரஸ் போட்டியிடவில்லை என கருதுகிறேன்," என நடராஜன் தெரிவித்தார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: