வாட்சாப் புதிய தனியுரிமை கொள்கைக்கு தடைவிதிக்கவேண்டும்: நீதிமன்றத்தில் அரசு கோரிக்கை

வாட்ஸப்

பட மூலாதாரம், Huw Evans picture agency

(இன்று 20.03.2021 சனிக்கிழமை இந்தியாவில் உள்ள சில முக்கிய நாளிதழ்களிலும் அவற்றின் இணையதளங்களிலும் வெளியான முக்கிய செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்.)

பயனாளா்களின் தனியுரிமை தொடா்பான புதிய கொள்கைகளை அமல்படுத்துவதற்கு வாட்ஸ் ஆப் செயலிக்குத் தடை விதிக்கக் கோரி தில்லி உயா்நீதிமன்றத்தில் மத்திய அரசு மனுத் தாக்கல் செய்துள்ளதாக தினமணியில் செய்தி வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்ஸ் ஆப் செயலி அண்மையில் தனது கொள்கைகளில் மாற்றங்களைப் புகுத்தியது. வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்துவோரின் தகவல்களைத் திரட்டி அவற்றை ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு வணிக நோக்கில் அளிப்பது புதிய கொள்கைகளில் ஒன்றாகும்.

மே 15-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் புதிய கொள்கைகளை ஏற்றுக் கொண்டு பயனாளா்கள் தொடா்ந்து அச்செயலியைப் பயன்படுத்த முடியும். இல்லையெனில், அச்செயலியைப் பயன்படுத்த முடியாது என வாட்ஸ் ஆப் அறிவித்தது.

அதன் காரணமாக, அச்செயலியைக் கைவிட்டு புதிய செயலிகளை நோக்கிப் பயனாளா்கள் பலா் படையெடுத்தனா். அதையடுத்து, புதிய கொள்கைகளின் அமலாக்கத்தை நிறுத்திவைப்பதாக வாட்ஸ்அப் அறிவித்தது. புதிய கொள்கைகளைத் திரும்பப் பெறுமாறு மத்திய அரசும் வாட்ஸ் ஆப்பிடம் வலியுறுத்தியிருந்தது.

இதனிடையே, வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகள் நாட்டின் தரவு பாதுகாப்பு, தனியுரிமை தொடா்பான சட்டங்களை மீறும் வகையில் உள்ளதாகக் கூறி, அவற்றுக்கு எதிராக தில்லி உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி டி.என்.படேல், நீதிபதி ஜஸ்மீத் சிங் ஆகியோரைக் கொண்ட அமா்வு, மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அதையடுத்து, மத்திய அரசு தனது கருத்தை உயா்நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்துள்ளது.

அதில், 'பயனாளா்களிடமிருந்து எந்த மாதிரியான தரவுகளை சேகரிக்கலாம் என்பது தொடா்பான விவரங்கள் கடந்த 2011-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட தகவல்-தொழில்நுட்ப விதிகளில் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆனால், வாட்ஸ் ஆப்பின் புதிய கொள்கைகள் அந்த விதிகளை மீறுவதாக உள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களை தினமணி தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

வாட்சாப் தொடர்புடைய பிற செய்திகள்

தரவுகள் பாதுகாக்கப்படும்: பயனாளா்களின் தரவுப் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை தொடா்பான சட்டத்தை இயற்றுமாறு உச்சநீதிமன்றம் வலியுறுத்தியதன் அடிப்படையில், தனிப்பட்ட தரவு பாதுகாப்பு மசோதாவைக் கடந்த 2019-ஆம் ஆண்டில் மக்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்தது. அந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், நாட்டு மக்களின் தரவுகள் அனைத்தும் சிறப்பாகப் பாதுகாக்கப்படும்.

அச்சட்டம் அமலுக்கு வந்தால், புதிய கொள்கைகளை வாட்ஸ்அப் நடைமுறைப்படுத்த முடியாது. எனவே, தனியுரிமை தொடா்பான புதிய கொள்கைகளை அமல்படுத்தக் கூடாது என வாட்ஸ்அப் நிறுவனத்துக்கு உத்தரவிடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது' என பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வழக்கின் அடுத்தகட்ட விசாரணை ஏப்ரல் 20-ஆம் தேதி நடைபெறும் என தில்லி உயா்நீதிமன்றம் தெரிவித்துள்ளதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

துறவிகளுக்கு கொரோனா தடுப்பூசி: சிவசேனா எம்.பி. கோரிக்கை

பட மூலாதாரம், Getty Images

துறவிகளுக்கும், மதத்தலைவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட வேண்டும் என மாநிலங்களவையில் சிவசேனா கட்சியின் எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கோரிக்கை விடுத்துள்ளதாக தினத்தந்தியில் செய்தி வெளியாகியுள்ளது.

சிவசேனா எம்.பி. பிரியங்கா சதுர்வேதி நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவையில் பேசியபோது, "நமது நாட்டில் பல துறவிகள் மற்றும் மதத்தலைவர்களிடம் ஆதார் அட்டை இல்லை. அவர்களிடம் ஸ்மார்ட் போனும் கிடையாது. அவர்கள் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்றுகொண்டே இருப்பவர்கள். எனவே அவர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட வேண்டும்" என கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து அவர் பேசும்போது, "ஆஸ்துமாவினால் அவதிப்படுவோருக்கு கொரோனா பாதிப்பு ஆபத்து கூடுதலாக இருப்பதால், முன்னுரிமை அடிப்படையில் அவர்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும்" என வலியுறுத்தியதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'சத்துனு அடிப்பேன்': செய்தியாளர்களை மிரட்டிய ராஜேந்திர பாலாஜி

பட மூலாதாரம், Facebook

அமமுகவைப் பற்றிக் கேட்டால் 'சத்து'ன்னு அடிப்பேன் என தமிழக அமைச்சர் கே டி ராஜேந்திர பாலாஜி செய்தியாளர்களை மிரட்டியதாக இந்து தமிழ் திசை நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடுகிறார் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியில் அதிமுக சார்பில் மான்ராஜ் போட்டியிடுகிறார். இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூரில் அதிமுக தேர்தல் அலுவலக திறப்பு விழா நேற்று காலை நடைபெற்றது. அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி அதில் கலந்துகொண்டு அதிமுக தேர்தல் அலுவலகத்தைத் திறந்துவைத்தார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் பேசுகையில், "அமமுக பற்றி கேட்பதாக இருந்தால் இப்போதே கிளம்பிவிடு, சத்துனு அடிச்சுருவேன். தேவையில்லாத பிரச்சினையைக் கேட்கக் கூடாது, இதற்குத்தான் பேட்டி கொடுப்பதில்லை" என ஆவேசமாகப் பேசினார். இதனால் அங்கிருந்த பத்திரிகையாளர்கள் மற்றும் கட்சியினர்களுக்கு மத்தியில் சலசலப்பு ஏற்பட்டது.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: