அசாம்-மேற்கு வங்க தேர்தல்கள் கேரளாவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றனவா? எப்படி?

  • இம்ரான் குரேஷி
  • பிபிசிக்காக
அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தில் தனது தேர்தல் உரைகளில் குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) பற்றி குறிப்பிடவில்லை. ஆனால் சட்டம் அமல்செய்யப்படும் என்ற அச்சத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கில் பணத்தை செலவழித்து கேரளாவிலிருந்து தங்கள் மாநிலங்களுக்குத் திரும்புகின்றனர்.

அசாம் மற்றும் மேற்கு வங்காள சட்டசபை தேர்தல்களுக்கு முன்னர் கேரளாவிலிருந்து ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பி வருகின்றனர். சுற்றுலா, ப்ளைவுட், தோட்டத்தொழில் மற்றும் கட்டுமானம் போன்ற துறைகளில் இது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் உற்பத்தி சுமார் 50 சதவிகிதம் பாதிக்கப்படக்கூடும் என்று ஒரு மதிப்பீடு தெரிவிக்கிறது.

"தற்போது எங்கள் உற்பத்தி சுமார் 25 முதல் 30 சதவிகிதம் வரை பாதிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரண்டு வாரங்களில் இது இரட்டிப்பாகும். ஒட்டுமொத்த உற்பத்தி பாதியாகக் குறைந்துவிடும்," என்று கேரள ப்ளைவுட் தொழில்கள் சங்கத்தின் தலைவர் முஜிப் ரெஹ்மான் பிபிசியிடம் தெரிவித்தார்.

"தேர்தல் காரணமாக அசாம் மற்றும் மேற்கு வங்கத்திற்கு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த நேரத்தில் சிறப்பு ரயில்கள் எப்போது இயங்கும் என்று யாரும் சொல்ல முடியாது, ஏனென்றால் இதுபோன்ற முடிவுகள் ஒரு நாளுக்கும் குறைவான காலத்தில் எடுக்கப்படுபவை," என்கிறார் தெற்கு ரயில்வே, திருவனந்தபுர கோட்ட வர்த்தக மேலாளர் டாக்டர் ராஜேஷ் சந்திரன்.

ஒவ்வொரு நாளும் சுமார் ஐந்து புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், கொச்சி நகரத்திலிருந்து அசாம் மற்றும் மேற்கு வங்கத்தை நோக்கி செல்கின்றனர். கேரளாவில் கொச்சி தவிர வேறு இடங்களிலிருந்தும் புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பிச்செல்கிறார்கள். தென்னிந்தியாவின் முக்கிய நகரங்களில் இருந்து ரயில் டிக்கெட் தேவை அதிகரித்துள்ளது என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இந்த முறை வாக்களிக்கவில்லையென்றால்...

அசாமின் உதால்கிரி மாவட்டத்தில் வசிக்கும் ஃபைசல் அகமது நான்கு மாதங்களுக்கு முன்பு கொச்சியில் விருந்தோம்பல் துறையில் பணியாற்றத் தொடங்கினார்.

"திரும்பி வந்து வாக்களிக்குமாறு எனது குடும்பத்தினர் சொன்னார்கள். நான் மார்ச் 28 ஆம் தேதி புறப்படுகிறேன். நான்கு நாட்கள் அங்கு இருப்பேன். வாக்களித்த பின்னர் நான் திரும்பிவந்துவிடுவேன்'' என்று பிபிசியிடம் அவர் தெரிவித்தார்.

கொச்சியில் காய்கறி கடை வைத்திருக்கும் ரஷீத் அகமது, அசாமைச் சேர்ந்தவர். "அங்கு வாழும் குடும்பத்தினர் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கவலைப்படுகிறார்கள். அதனால் வாக்களிக்க நான் செல்கிறேன். இந்த முறை நாங்கள் வாக்களிக்கவில்லை என்றால், எதிர்காலத்தில் வாக்களிக்க முடியாது என்று எங்களிடம் கூறப்பட்டுள்ளது. கடைக்கு வரும் எனது நண்பர்கள் பலரும் இந்த காரணத்திற்காகவே சென்றுள்ளனர். ஆனால் எனக்கு எந்தப் பிரச்சனையும் தென்படவில்லை," என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Getty Images

டிக்கெட்டுகளுக்கு அதிக கட்டணம் மற்றும் நீண்ட பயணம்

"எனது சக ஊழியர் ஒருவர் பஸ்ஸில் குவஹாத்திக்கு சென்றுள்ளார். பஸ் டிக்கெட்டுக்கு 4,200 ரூபாய் செலுத்தியுள்ளார். இன்னும் சிலர் ஏழாயிரத்து ஐநூறு முதல் எட்டாயிரம் ரூபாய் கொடுத்து விமான டிக்கெட்டுகளை வாங்கியுள்ளனர்," என விருந்தோம்பல் துறை மேற்பார்வையாளர் சையத் நூர்-உல்-ஹக் கூறுகிறார்.

"கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட நீண்டகால பொதுமுடக்கத்திற்குப் பிறகு சமீபத்தில்தான் இங்கு வேலைக்கு வந்தேன். இந்த நிலையில் பொருளாதார நெருக்கடியை எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை," என ப்ளைவுட் துறையில் பணிபுரியும் ஒரு மேற்பார்வையாளர், தனது பெயரை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் தெரிவித்தார்.

"எர்ணாகுளம் மாவட்டத்தில் மட்டும், புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் சுமார் 20 சதவிகிதம் பேர் அசாமைச் சேர்ந்தவர்களாகவும், சுமார் 40 சதவிகிதம் பேர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். கேரளாவின் மற்ற பகுதிகளைப் பற்றி இங்கு குறிப்பிடவேயில்லை. எண்ணிக்கை மிக அதிகம், ''என்று இடப்பெயர்வு மற்றும் உள்ளடக்கிய மேம்பாட்டு மையத்தின் நிர்வாக இயக்குனர் பினாய் பீட்டர் பிபிசியிடம், தெரிவித்தார்.

'முதலில் கொரோனா , இப்போது தேர்தல்'

"கொரோனாவுக்குப் பிறகு, தொழில் இப்போதுதான் சூடுபிடிக்கத் தொடங்கியது. அதற்குள் தேர்தல் வந்துவிட்டது. மாநிலம் முழுவதும் 50 சதவிகிதம் குறைவான ஊழியர்களுடன் நாங்கள் போராடுகிறோம்.

சாதாரணமாக ஹவுஸ் கீப்பிங் ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் கிடைக்கும், ''என்கிறார் 'கே.எல்.ஆர் ஃபெசிலிட்டி மேனேஜ்மெண்ட்' நிறுவனத்தின் இயக்குனர் கிருஷ்ண குமார்.

"விருந்தோம்பல் தொழில் மூடப்படாது. ஆனால் அதன் மீது நிச்சயமாக தாக்கம் ஏற்படும். இந்தத் துறையில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் பெரும்பாலானவர்கள் வடகிழக்கு, நேபாளம் மற்றும் மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் பகுதியைச் சேர்ந்தவர்கள். இந்த பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள். பார்க்க அழகாக இருக்கிறார்கள். எனவே அவர்கள் ' ஃப்ரண்ட் ஆஃபிஸ்' வேலைகளில் பணியமர்த்தப்படுகிறார்கள். ஹவுஸ் கீப்பிங்கை பொருத்தவரை மொழியும் தோற்றமும் ஒரு பொருட்டல்ல, என பினாய் பீட்டர் குறிப்பிட்டார்.

பினாய் பீட்டர் தெரிவித்த கருத்தின் ஒரு பொருள் என்னவென்றால், கேரளா போன்ற மாநிலத்தில், சில காலம் திரும்பிச் செல்லும் அசாம் தொழிலாளர்களுக்கு மாற்று கிடைக்கும். வடகிழக்கின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு மாற்றாக வரலாம். ஆனால் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் திரும்பிச்செல்வது, ப்ளைவுட், கட்டுமானம் போன்ற தொழில்கள் மீது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: